உணர்வோசை
“உலகமே கொரோனாவுக்கு எதிராக இயங்கியபோது என்ன செய்தார் மோடி?” - மன்னிக்க முடியுமா? Part 1
நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
மார்ச் 25ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறதே என்பதற்காக மன்னிப்புக் கேட்பது தான் அதனுடைய உள்ளடக்கம்.
ஆனால் மாட்சிமை தாங்கிய பாரதப் பிரதமர் பேச வேண்டியதும் விளக்கம் அளிக்க வேண்டியதும் என்னவென்றால் டிசம்பர் மாதம் 31ம் தேதி கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் ஜனவரி மாதம் இறுதியில் பரபரப்பாக இருந்த நேரம் எல்லாம் அமைதியாக கை கட்டி வேடிக்கை பார்த்துவிட்டு மார்ச் மாதம் 25ம் தேதி நல்ல பிள்ளையைப் போல நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்பது 140 கோடி மக்களை ஆள்வதாகச் சொல்லிக் கொள்ளும் பிரதமருக்கு அழகா என்பது தான் கேள்வி!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி சீன நாட்டின் வூஹான் நகரில் காரணம் தெரியாத நிமோனியாவால் அதிகமான மக்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஜனவரி மாதம் 3ம் தேதிக்குள் அந்த எண்ணிக்கை 44 பேராக ஆகிறது. புதிய வகை கொரோனா வைரஸ் என்று ஜனவரி 7ம் தேதி கண்டுபிடிக்கிறார்கள்.
ஜனவரி 13ம் தேதி தாய்லாந்தில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்படுகிறார்.இவர் சீனாவில் இருந்து வந்தவர். ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவில் கொரோனா நோயாளி கண்டறியப்படுகிறார். இவர் சீனா சென்று திரும்பியவர்.
இது தொற்றுவியாதி என்பதால் சீனநாட்டுக்குள் தனிமைப்படுத்துதல் தொடங்கிவிட்டது. பொதுமக்கள் கூடுவதற்கு சீனா தடை விதிக்கிறது. ஜனவரி 23ம் தேதிக்குள் சீனாவில் 9 பேர் பலியாகிவிட்டார்கள். 149 பேருக்கு இருப்பதாக சீனா அறிவித்தது.
அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் இரண்டு வாரங்களுக்குள் தாய்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கும் அது பரவிவிட்டது.
ஜனவரி 25ம் தேதி கொரோனா தொற்று தொடர்பாக அனைத்து நாடுகளும் கண்காணிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது.
ஜனவரி 26ம் தேதி நம்முடைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஒரு பேட்டி கொடுக்கிறார். ''சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்கள்'' என்று சொல்லி இருக்கிறார் மத்திய அமைச்சர். இதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 7 பேர். முப்பையைச் சேர்ந்தவர் இரண்டு பேர். பெங்களூரைச் சேர்ந்தவர் ஒருவர். டெல்லியைச் சேர்ந்தவர் ஒருவர்.
அன்றைய தினம் மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் சீனாவில் வந்த அனைவரையும் கண்காணிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை சொன்னது.
ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் வந்தவர்கள் அனைவரையும் அன்றே கண்காணித்திருந்தால் இன்றைக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் சூழ்நிலை வந்திருக்குமா?
ஜனவரி 27ம் தேதி சீனாவில் பலியானவர் எண்ணிக்கை 56 ஆகிவிட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,109 ஆகிவிட்டது.அதற்குப் பிறகும் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.
ஜனவரி 28ம் தேதி குஜராத்தில் நடந்த சர்வதேச உருளைக்கிழங்கு மாநாட்டில் உரையாற்றிக் கொண்டு இருந்தார் பிரதமர். குடியுரிமைச் சட்டத்தை மகாத்மா காந்தியே விரும்பினார் என்று டெல்லியில் பொய் சொல்லிக் கொண்டு இருந்தார் பிரதமர்.
ஜனவரி 29ம் தேதி நிருபர்களைச் சந்தித்த மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன், ''இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை,. மக்கள் அச்சமடைய வேண்டாம். 2014ல் எபோலோ வைரஸை இந்தியாவுக்குள் வராமல் தடுத்தோம். அதைப் போல கொரோனாவையும் வரவிடாமல் தடுத்துவிடுவோம்" என்று சொன்னார்.
இப்படிச் சொல்லிவிட்டு அனைத்து முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து வந்த அனைவரையும் மருத்துவமனைக்கு அழைக்க வேண்டும் என்று அதில் சொல்லப்பட்டு இருந்தது.
சீனாவில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வரப்போகிறோம், அவர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சொன்னார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
இதற்குள் சீனாவில் 100 பேர் இறந்துவிட்டார்கள். இதன்பிறகும் மத்திய அரசு விழிக்கவில்லை. எத்தகைய ஆபத்து இந்தியாவுக்கும் வரப்போகிறது என்பதை உணரவில்லை.
போகட்டும்!
ஜனவரி 30ம் தேதி பிரிட்டன் ஒரு அறிவிப்பை செய்தது. அது என்ன தெரியுமா? கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்புள்ள 30 நாடுகளின் பட்டியல் தான் அது. அதில் இந்தியா 23வது இடத்தில் இருந்தது. அப்போதும் மத்திய அரசு விழிக்கவில்லை.
சுண்டைக்காய் இலங்கை நாடு, ஜனவரி 29ம் தேதியே சீனா விசா அனைத்தையும் தடை செய்துவிட்டது. ஜனவரி 30 தேதி சீனாவில் பலி எண்ணிக்கை 132 ஆகிவிட்டது. ஜனவரி 31ம் தேதி இந்தியாவின் உச்சந்தலையில் முதல் குண்டு விழுந்தது. அப்போதும் மத்திய அரசு விழிக்கவில்லை.
கேரளா வந்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று மத்திய சுகாதாரத் துறையே அறிவித்தது. மரண எச்சரிக்கையின் முதல் மணி இது தான்.
ஜனவரி மாதம் 31ம் தேதியே இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்குமான தொடர்பை மொத்தமாகத் துண்டித்திருந்தால் இன்று இந்தியா இழவு வீடு போல் காட்சியளிக்க வேண்டிய அவசியம் வந்திருக்குமா?
மார்ச் 25ம் தேதி செய்த தடுப்பை, அன்று அல்லவா செய்திருக்க வேண்டும்? எது தடுத்தது?
அப்படிச் செய்தால் அமெரிக்க அதிபர் ட் ரம்ப் வருகை ரத்தாகி விடுமே என்ற பதற்றம், கொரோனாவையே மறைக்கச் சொன்னது. ஆனால் வைரஸுக்கு இந்த அரசியல் புரியாது.
2020ம் ஆண்டின் இரண்டாவது மாதம் தொடங்கிய முதல்நாள், உலக நாடுகள் அனைத்துக்கும் உலக சுகாதார நிறுவனம் அபாயச் சங்கு ஊதியது. அதுதான் சுகாதார அவசர நிலை. ஹெல்த் எமர்ஜென்சி.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 9930 ஆகிவிட்டது. பலியானோர் எண்ணிக்கை 231 ஆகிவிட்டது.
பிப்ரவரி 3ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டார் என்று செய்தி வெளியானது. ஆனால் டாக்டர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்றார்.
ஆனால் சீனாவில் இருந்து 878 பேரும் சிங்கப்பூரில் இருந்து 272 பேரும் அன்றுதான் சென்னைக்கு வந்தார்கள். அவர்களில் 12 பேர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
இதே நாளில் கேரளாவில் இரண்டு நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன் எண்ணிக்கை 3 ஆகிவிட்டது. உடனேயே மாண்புமிகு முதல்வர் பினராயி விஜயன், கொரோனாவை மாநிலப் பேரிடர் என்று அறிவித்தார்.
இந்திய எல்லைக்குள் கொரோனா வந்துவிட்டது என்பதால் இந்தியப் பேரிடராக பிரதமர் அறிவித்திருக்க வேண்டும். அறிவிக்கவில்லை. அதனால் இவரே அறிவித்து கேரளாவைக் காக்கும் முயற்சியில் இறங்கினார்.
சோவியத் நாடு, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் வெளியில் அனுப்பியது. யாரும் உள்ளே வரவும் கூடாது என்று தடையும் போட்டது. அதாவது மார்ச் 25ம் தேதி நாம் செய்ததை பிப்ரவரி 3ம் தேதி செய்த நாடு சோவியத் ரஷ்யா. மக்களைப் பற்றிக் கவலைப்படும் நாடு அப்படித்தான் முடிவு எடுக்கும்.
பிப்ரவரி 6ம் தேதி பலி எண்ணிக்கை 493 ஆகிவிட்டது. தமிழகத்தில் மட்டும் மருத்துவக் கண்காணிப்பில் 1351 பேர் இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சொன்னார். நம்முடைய பிரதமர், ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை அமைப்பை அறிவித்துக் கொண்டு இருந்தார்.
பிப்ரவரி 9ம் தேதி பலி எண்ணிக்கை 725 ஆகிவிட்டது. நம்முடைய பிரதமர் ராஜபஷேவுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
உலகில் 30 நாடுகளுக்கு கொரோனா பரவி விடும் என்று பிரிட்டன் எச்சரித்தது அல்லவா? பிப்ரவரி 10ம் தேதி இந்தியா உள்பட 29 நாடுகளுக்கு கொரோனா பரவிவிட்டது.
நம்முடைய பிரதமர் சீன அதிபர் ஷி ஜின் பிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பினார். என்ன தெரியுமா?
''கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்கு சீனாவுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது.உயிரிழப்புகள் துரதிஷ்டவசமானவை. உங்களுக்கு இந்தியா துணை நிற்கும்" என்று அந்தக் கடிதத்தில் இருந்தது. சீனாவுக்கு உதவுவதற்கு முன்னால் கேரளாவுக்கு உதவி இருக்க வேண்டாமா?
இதைவிடக் கொடுமை பிப்ரவரி 11ம் தேதி நடந்தது. சீனாவுக்கு முகக்கவசம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி வழங்கியது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவுவதால் மருத்துவ உபகரணங்கள் எதையும் ஏற்றுமதி செய்யவேண்டாம் என்று ஜனவரி 31ம் தேதி எடுத்த முடிவை வாபஸ் வாங்கி இருக்கிறார்கள் பிப்ரவரி 11ம் தேதி.
பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டுவிட்டதும் உலகச் சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கைகளை உலக நாடுகளுக்குச் செய்தது.
பிப்ரவரி 15ம் தேதி ''வைரஸ் இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது. இதனை பிரதமர் அலுவலகமும் சுகாதாரத் துறையும் கண்காணித்து வருகிறது" என்று மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் டெல்லியில் கூறினார். பலி எண்ணிக்கை 1,500 ஆகிவிட்டது உலகம் முழுவதும். உலகமே கொரோனாவில் துள்ளத்துடித்துக் கொண்டு இருந்தபோது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், ''2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழித்துவிடுவோம்" என்று சபதம் எடுத்துக் கொண்டு இருந்தார்.
பிப்ரவரி 17ம் தேதி சீனாவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை இந்தியா வாரி வழங்குவதாக இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி பெருமைப்பட்டுக் கொண்டார். உலகம் முழுக்க 2,000 பேர் இறந்துவிட்டதாக புள்ளிவிரம் சொல்லிக் கொண்டு இருந்தபோதுதான் இந்தியாவுக்குள் வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
ஆனால் உலகமே 2,000 பேரைப் பலி கொடுத்தும் பல்லாயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கியும் ஒரு வைரஸோடு கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த போது இரண்டு பேரின் சுயப்பெருமைக்காக ஒரு நாட்டையே தலைகுப்புற விழ வைக்கச் சொன்ன அரசியல் வெறும் விளம்பரம் என்று மட்டுமே சொல்லி விட முடியாது.
அடுத்த இரண்டு நாட்களில் தலைநகரின் தெருக்கள்...
உலகத்தின் மாபெரும் ஜனநாயக நாடு என்று மார்தட்டிச் சொல்லிக் கொள்ளும் ஒரு நாட்டின் தலைநகர் வன்முறையாளர்களின் கைக்குப் போய் அரச பயங்கரவாதம் காட்டுத் தர்பாரை நடத்தியது.
கண்ணுக்குத் தெரிந்த அரசியல் வைரஸ் தாக்கியதால் 27 உயிர்கள் பலியாகிக் கொண்டு இருந்தபோது மத்திய அரசு தனது நல்லெண்ணத்தை சீனாவுக்குக் காட்டிக் கொண்டு இருந்தது.
விஷவாயு தடுப்பு உபகரணங்கள், அறுவைச் சிகிச்சைக் கத்திகள், கண் சிகிச்சை உபகரணங்கள், சுவாசப் பிரச்னைகளில் பாதிக்கப்பட்டோருக்கான உபகரணங்கள் உள்ளிட்ட 8 பொருட்களின் மீதான தடையை நீக்கி சீனாவுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தது மத்திய அரசு.
சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2870 ஆனது.
மார்ச் 3ம் தேதி நாடாளுமன்றம் கூடிவிட்டது. மார்ச் 5ம் தேதி தான் கொரோனாவை கட்டுப்படுத்துவது சம்பந்தமான முதல் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஆகியோர் நிருபர்களை சந்தித்தார்கள். ''இந்தியாவில் இதுவரை 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது'' என்றார்கள் அதிகாரப்பூர்வமாக. உலகத்தின் பலி 31,32 ஆனபிறகு தான் முதல் கூட்டமே நடக்கிறது. இதுவரை 12 நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் தான் மருத்துவ பரிசோதனை செய்தோம், இனி எந்த நாட்டில் இருந்து வந்தாலும் மருத்துவப் பரிசோதனை செய்வோம் என்ற புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார்கள்.
சீனா, இத்தாலி, ஈரான், கொரியா, ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து என்று மார்ச் 6 அறிவித்தார் அமைச்சர். அதாவது ஜனவரி 29ம் தேதி இலங்கை எடுத்த முடிவை, மார்ச் 6ம் தேதி எடுத்திருக்கிறோம்.
முதல் கட்டமாக சீனாவில் இருந்து 654 பேரை அழைத்து வந்தோம், இரண்டாம் கட்டமாக 112 பேரை அழைத்து வந்தோம். கப்பலில் 124 பேரை அழைத்து வந்தோம். இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை, 14 நாள் தனிமையில் வைத்திருந்தோம் என்று அமைச்சர் சொன்னார். எங்கே வைத்திருந்தார்கள் என்பது யாருக்குத் தெரியும்?
நாடாளுமன்றத்தில் ராகுல் கேள்வி எழுப்பினார். அப்போது ஹர்ஷவர்த்தன் சொன்னார், நாடு முழுவதும் 29,607 பேரைக் கண்காணித்து வருகிறோம் என்றார். இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்றும் சொன்னார்.
இந்த சூழ்நிலையிலும் இந்திய அரசாங்கம் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கான திட்டமிடுதலில் இருந்தது.
மார்ச் 17ம் தேதி வங்க தேசத்துக்கு பிரதமர் செல்ல இருக்கிறார் என்று அரசு அறிவித்தது.
உலக மரணம் 3 ஆயிரத்தைத் தாண்டிய பிறகு ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் ஒரு பேட்டி கொடுக்கிறார்:
''இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெளிவில்லாமல் உள்ளது" என்றார். ரிசர்வ் வங்கி கவர்னருக்கே மார்ச் முதல்வாரம் வரைக்கும் இதுபற்றிய தெளிவு இல்லையாம்!
அதே நாளில்தான் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகள் அனைத்துக்கும் கொரோனா குறித்த எச்சரிக்கையைச் செய்தது. மெத்தனமாகச் செயல்பட வேண்டாம் என்று சொன்னது. ''கொரோனா வைரஸின் அச்சுறுத்தலின் தீவிரத்தன்மைக்கு ஏற்றதாக நாடுகளின் நடவடிக்கைகள் இல்லை. பொதுவான அபாயங்களை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் ஒத்திகைகளைப் போலச் செயல்படக்கூடாது. இது பணக்கார நாடு, ஏழை நாடு என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா நாட்டுக்கும் பொருந்தும்'' என்று சொன்னார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்கேப்ரியசஸ்.
இப்படி உலக சுகாதார மையம் எச்சரித்துக் கொண்டு இருந்தபோது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''கொரோனா வைரஸால் அமெரிக்காவில் எந்த பாதிப்பும் இல்லை, வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது" என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.
கொரோனா வைரஸ் தாக்குபவர்களில் 3.4 சதவிகிதம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு சொல்வது தவறான தகவல் என்றும் ட் ரம்ப் சொல்லிக் கொண்டு இருந்தார்.
அந்நேரத்தில் இந்தியா என்ன செய்துகொண்டு இருந்தது தெரியுமா?
அடுத்த பகுதியை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும் :
“கடைசியாக விழித்தது யார் தவறு மிஸ்டர். மோடி?” - மன்னிக்க முடியுமா? PART 2
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!