உணர்வோசை
’பேரறிவாளன் கைதும்..அதன் பின்னால் உள்ள அரசியலும்!’: உணர்ச்சி போராட்டத்தின் 28 ஆண்டுகள்#ReleasePerarivalan
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து, பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அ.தி.மு.க அரசு காலம் தாழ்த்தி வருவதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை குறித்து தமிழக அரசு என்ன முடிவு செய்தது என்று இரண்டு வாரங்களில் பதிலளிக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி சமூக வலைதளங்கள் மூலம் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் மூலம் பலரும் தங்களது ஆதரவுக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஊடகவியலாளர் கவின் மலர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பேரறிவாளன் கைது செய்யப்பட்டது எப்படி? ஏன்? எந்த காரணங்களுக்காக அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது? அது சரியானது தானா? என்கிற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டிருந்ததாவது,
மரணத்தின் அறைக்குள் தள்ளி அவரை தூக்குக் கயிற்றுக்காக காத்திருக்கச் செய்தது சட்டம். பட்டயப்படிப்பு முடித்திருந்த அந்த இளைஞருக்கு ஒருபோதும் சட்டம் பழிவாங்கும் என்று அதற்கு முன் அறிந்தவரில்லை. சட்டத்தைக் காப்பவர்களே தங்கள் பேனாவை தவறாக பயன்படுத்தி, வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையே ஊசலாடச் செய்வார்கள் என்று அறிந்திருக்கவில்லை அந்த இளைஞர் பேரறிவாளன் என்கிற அறிவு.
தூக்குதண்டனை பெற்றபின் கடந்த 14 ஆண்டுகளாக, தூக்குக் கொட்டடிக்கு அழைத்துப் போகும் தன் கால்கள் சிறைக் கம்பிகளுக்கு வெளியே ஒருவேளை வந்து நிற்கக்கூடுமோ என்கிற எண்ணத்துடனேயே ஒவ்வொரு காலையும் விடிகிறது. 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தியை வெடிகுண்டு மூலம் கொன்ற சிவராசனுக்கு பேட்டரி வாங்கித் தந்ததற்காக கைது செய்யப்பட்டவர்.
ராஜீவ் காந்தியும் இன்னும் 18 பேரும் தனு என்கின்ற மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட அதே நேரம் அறிவும் அவருடைய நண்பர்களும் திரையரங்கம் ஒன்றில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது விடுதலைப் புலிகளால் கவரப்பட்டிருந்த பல தமிழ் இளைஞர்களில் அறிவும் ஒருவர். ராஜீவ்காந்தியை கொல்ல திட்டமிட்டு சென்னையில் தங்கியிருந்த சிவராசனுடன் அறிவுக்கு பழக்கம் இருந்தது. ஆனால் அந்த பேட்டரிகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது அறிவுக்கு தெரியாது.
ஆறு மாதங்களுக்கு முன்னால், சிறைக் காவலர்கள் பேரறிவாளனிடம் ஒரு கடிதத்தை அளித்தனர். “தன்னை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க தன்னாலான சட்டரீதியான உதவிகளைச் செய்வதாகவும் தன்னை வழக்கறிஞர்கள் மூலம் தொடர்புகொள்ளும்படியும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. கீழே தியாகராஜன், ஐபிஎஸ் என்று கையொப்பம் இருந்தது. என் வாக்குமூலத்தை பதிவு செய்த அதே தியாகராஜன்தான் இவர் என்பது உறைக்கவில்லை. ஒரு வாரம் கழித்து நன்றி கடிதம் எழுத அமர்ந்தபோது இந்தக் கையொப்பம் மிகவும் பழக்கமானதாய் இருக்கிறதே என்று யோசித்தபோது சட்டென்று நினைவுக்கு வந்தது. உடனடியாக வழக்கறிஞர்களை அனுப்பினேன்” என்று வேலூர் சிறையில் அவரைக்காணச் சென்றபோது இந்தியா டுடேயிடம் கூறினார் பேரறிவாளன்.
அப்போது சி.பி.ஐ அதிகாரியாக இருந்த அவர் அறிவுடைய வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்து சமர்ப்பித்துவிட்டதாக வழக்கறிஞரக்ளிடம் தெரிவித்தார் தியாகராஜன். பணி ஓய்வு பெற்றபின் பின்னாளில் மன உறுத்தல் ஏற்பட்டு செய்த தவறுக்கு பரிகாரம் தேட விரும்புவதாகவும் கூறினார். அதே சமயம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நிறுவிய மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம், மரண தண்டனை எதிர்ப்புக்கான ஓர் ஆவணப்படத்தை எடுத்துக்கொண்டிருந்தது. அந்தப்படத்துக்காக தியாகராஜன் கேமிராவின் முன் நின்று உண்மையைச் சொல்ல தயாராய் இருந்தார்.
"பேரறிவாளன் வாக்குமூலத்தை நான்தான் பதிவு செய்தேன். சட்டப்படி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பதிவு செய்யவேண்டும். ஆனால் பொதுவாக நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை. ’9 வால்ட் பேட்டரியை நான் தான் வாங்கித்தந்தேன். ஆனால் அது என்ன காரணத்துக்கு பயன்படப்போகிறது என்று எனக்குத் தெரியாது’ என அறிவு கூறினார். எதற்காக பயன்படப்போகிறது என்பது தெரியாது என்கிற பகுதியை மட்டும் நீக்கிவிட்டு வாக்குமூலத்தை பதிவு செய்தேன். நான் அதை பதிவு செய்திருந்தால் வழக்கின் போக்கு திசை மாறியிருக்கும்” என்கிறார் தற்போது ஒடிசாவில் பிஜூ பட்நாயக் காவல்துறை அகாடமியில் பணியாற்றும் தியாகராஜன்.
இந்தியா டுடே தொடர்புகொண்டு அன்றைக்கு அப்படி செய்வதற்கான நிர்பந்தங்கள் இருந்தனவா என்று கேட்டபோது மறுத்தார். “எனக்கு அழுத்தங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஒரு வழக்கு அதன்போக்கில் போய்க்கொண்டிருக்கும்போது அதற்கு எதிர்மறையான ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்று எண்ணும் காவல்துறை அதிகாரியாக அன்றைக்கு இருந்தேன். சரியாகச் சொல்வதானால் எனக்கு அன்றைக்கு தர்ம சங்கடமான நிலைமை. ஒப்புதல் வாக்குமூலம் என்பதே குற்றத்தை ஒப்புக்கொள்வதுதான். ஆக, எதற்கு பேட்டரி என்று எனக்குத் தெரியாது என்று அறிவு கூறியதை எழுதினால், அதில் குற்றமில்லை என்றாகும். ஆகவே இந்த விஷயத்தை நான் விட்டுவிட நினைத்தேன்.
அறிவுக்கு சாதகமாகவும் இல்லாமல் பாதகமாகவும் இல்லாமல் இப்படி பதிவு செய்தேன். ‘பேட்டரியை நான் தான் வாங்கித்தந்தேன்’ என்பதோடு நிறுத்திக்கொண்டேன். காரணம் தெரியும் என்றோ தெரியாது என்றோ நான் எழுதவில்லை.” என்றவர் மேலும் தொடர்கிறார். “ஒரு வித மொழிமயக்கம் வரும் வகையில்தான் அதை நான் எழுதியிருந்தேன். அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும்போது, எப்படி வேண்டுமானலும் பொருள் கொள்ளலாம். இது புலன்விசாரணையின் முக்கியச் சான்றாக மாறிவிட்டது அதன் அடிப்படையில்தான் தண்டனைகள் வழங்கப்பட்டன. காவல்துறை விசாரணைக்கு உண்மையாக இருக்கவேண்டுமா அல்லது சட்டப்படி வரிக்கு வரி எழுதவேண்டுமா என்கிற தொழில் சார்ந்த தடுமாற்றம் வந்தபோது இந்தத் தவறு நேர்ந்தது.” என்கிறார்.
இன்னொரு விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் தன் புத்தகம் ஒன்றில் விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று கூறியிருந்தார். இப்போது ரகோத்தமனிடம் தியாகராஜனின் கருத்து குறித்து கேட்டபோது ‘’தியாகராஜன் கூறுவது சரியல்ல. பல்வேறு விஷயங்களை வைத்துத்தான் நாங்கள் பேரறிவாளன் குறித்து ஒரு முடிவுக்கு செய்தோம். குறுக்கு விசாரணையின்போதோ அல்லது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ இதை தெரிவிக்காமல் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படி கூறுவதற்கு எந்த சட்ட மதிப்பும் கிடையாது.. வழக்கு என்பது முடிந்து போன விஷயம்” என்கிறார் ரகோத்தமன்.
சி.பி.ஐ விசாரணைக்கு தலைமை தாங்கிய டி.ஆர். கார்த்திகேயன் “இது மிகவும் அபத்தமானது. மறுவிசாரணை என்பதற்கு வழி கிடையாது. அப்படி ஒன்று நடக்குமானால் சிறிய விஷயங்களில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இந்திராகாந்தி, மகாத்மா காந்தி படுகொலை வழக்குகளையும் மீண்டும் விசாரிக்கச் சொல்லி கேட்பார்கள். தியாகராஜனுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டது. பெறப்பட்ட வாக்குமூலங்கள் பல முறை சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 3 திறமையான நீதிபதிகள் நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளனர். அரசியல் செய்ய நினைக்கிறார்கள்” என்கிறார்.
குறுக்கு விசாரணையின்போது யாருமே அறிவின் வாக்குமூலம் குறித்த குறிப்பான கேள்வியை தன்னிடம் கேட்கவில்லை என்கிறார் தியாகராஜன். “இக்கேள்வி என்னிடம் கேட்கப்படவே இல்லை. உண்மையில் வாக்குமூலத்தில் அறிவு சொன்னதை எழுதாமல் விட்டது குறித்த கேள்வி என்னிடம் கேட்கப்படும் என்று நான் எதிர்ப்பார்த்திருந்தேன்.” என்கிறார்.
பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபுவிடம் இந்தியா டுடே கேட்டபோது “தடா சட்டத்தின் கோளாறு இதுதான். தடா சட்டத்தின்கீழ் இந்த வழக்கு நடந்தது. 313 பிரிவின்படி எழுப்பப்படும் கேள்விகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஆம்/இல்லை என்றுதான் பதில் அளிக்க அனுமதிக்கப்படுவார். ஆகவே வேறு எதுகுறித்தும் நீதிமன்றத்தில் பேச வாய்ப்பே இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு அதன் அடிப்படையிலேயே வழக்கு நகர்ந்தது. அப்போது அந்த வாக்குமூலத்தையே யாரும் கேள்வி கேட்க தடாவில் இடமே இல்லை.” என்கிறார்.
சரி. வழக்கு முடிந்துவிட்ட நிலையில் தியாகராஜனின் இப்போதைய கருத்து எப்படி எடுத்துக்கொள்ளப்படும்? “Dead man walking theory என்று ஒரு தியரி உண்டு. அதாவது ஒரு மனிதன் இறந்துவிட்டான் எனக்கருதி இவன்தான் கொன்றான் என்று இன்னொருவனையும் சிறைக்கு அனுப்பிவிட்டபின் பத்தாண்டுகள் கழித்து இவ்வளவுநாள் நான் வெளிநாட்டில் இருந்தேன் என்று கொல்லப்பட்டதாக கருதப்பட்டவன் வந்து நிற்பான்.
அப்போது உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருந்தாலும் அதை மறுபரீசலனை செய்யவேண்டுமில்லையா? உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது என்பதற்காக சிறைவாசம் அனுபவிக்க முடியுமா? இப்படியான மறுவிசாரணை முறைகள் ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் உண்டு. அப்படி ஒன்றை இங்கும் ஏற்படுத்தவேண்டும்.” என்கிறார்.
“அது மட்டுமல்லாமல். ராஜீவ் கொலைச் சதி குறித்து விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட Disciplinary Monitoring Agency (MDMA) இன்னமும் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. மே 7ம் தேதி சிவராசனுக்கும் பொட்டுஅம்மானுக்குமான உரையாடலில் சிவராசன், தனு, சுபா தவிர வேறு யாருக்கும் விஷயம் தெரியாது என்று கூறியபின், மறுநாளிலிருந்து சம்பவம் நடந்த 21ம் தேதி வரை வேறு யாருக்கெல்லாம் விஷயம் தெரியவந்தது என்பது குறித்த விசாரணை ஏன் நடத்தப்படவில்லை என்று சி.பி.ஐயிடம் கேட்கிறது MDMA.. சி.பி.ஐ இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. இப்படி விடுபட்ட பகுதிகளை விசாரிக்கவேண்டுமென கோருகிறோம். இந்த MDMA விசாரணையில் தியாகராஜனை சேர்க்கவேண்டும்.” என்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய கே.டி.தாமஸை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது சட்டம் தவறு செய்துவிட்டது என ஒப்புக்கொண்டார். “ நானும் மற்ற நீதிபதிகளும் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் இறுதித்தீர்ப்பை அளிப்பதற்கு முன்னால் எங்கள் கையிலிருந்த அத்தனை விவரங்களையும் சரிபார்த்துவிட்டுத்தான் அளித்தோம். ஆனால் விசாரணை அதிகாரி ஒருவர் முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு மாறாக இப்போது கூறியதாகச் சொல்கிறீர்கள்.
விசாரணை அதிகாரியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டவர் என்பதை நினைவில் வையுங்கள். பல முறை குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்துவிட்டு பின்னாளில் அவர் எப்படி மாற்றிச் சொல்ல முடியும்?. ஆனால் சட்டப்படி சாத்தியமில்லை என்பதால் எந்த நீதிமன்றமும் இதை அனுமதிக்காது.
இப்போது நான் சொல்ல விரும்புவது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கிலிடப்படக்கூடாது. ஆனால் 14 ஆண்டுகள் அவர்கள் ஆயுள் தண்டனைக்கு ஈடான சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர். தினம் மரணத்தை எதிர்ப்பார்த்திருக்கின்றனர். இப்போது எப்படி அவர்களை தூக்கிட முடியும்? சட்டப்படி ஒருவருக்கு ஒரு குற்றத்துக்கு இரு தண்டனை கூடாது என்பது என் கருத்து. அரசியல் சட்டப்பிரிவு 21ன் படி இது தவறு. அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்படவேண்டும்” என்கிறார்.
கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே மூவர் தூக்கை நிறுத்த நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 2011 ஆகஸ்டில் இவர்களின் கருணை மனு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தபின் செப் 9 2011 என்று தூக்குக்கு நாள் குறிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் இவர்களின் மனு நிலுவையில் உள்ளது.
கருணை மனுவை பைசல் செய்ய 11 ஆண்டுகள் ஆனதால் தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்று மூவரும் கோரினர். ஒருவேளை தேர்தலுக்கு முன்னால் மூவரின் மனுக்களும் தள்ளுபடியானால் என்ன நடக்கும்? புல்லரின் கருணை மனுவை இந்த ஆண்டு ஏப்ரலில் தள்ளுபடி செய்தது. 8 ஆண்டுகள் கழித்து அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
“இது நடந்து 7 மாதங்கள் ஆனபின்னும் புல்லர் தூக்கிலிடப்படவில்லை. இது சட்ட விவகாரம் மட்டுமல்ல. நடைமுறை அரசியலும் உள்ளது. ஆகவே தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மூவரின் மனுக்களும் இதேபோல தள்ளுபடி செய்யப்பட்டால் இவர்களின் கதி என்ன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே. ராஜேஷ் குப்தா.
இவ்வளவும் நடக்கும்போது தியாகராஜனுக்கு தன் மனசாட்சி உறுத்தியதையும் நெருடலையும் தாங்க முடியவில்லை என்கிறார். ”அறிவுக்கு மரண தண்டனை கிடைக்கும் என நான் நினைத்தே பார்க்கவில்லை. நெருடலாகவும் மனம் அமைதியில்லாமலும் இத்தனை ஆண்டுகள் இருந்தது. அவருக்கு நாள் குறிக்கப்பட்டதும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களை உற்று கவனித்து வந்தேன். ஏதாவது ஒரு வகையில் இந்த மரண தண்டனை இல்லாமல் போய்விடாதா என்று பார்த்தேன்.
புல்லரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டப்பட்டு, இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததாலேயே தூக்கிலிடக்கூடாது என்று கூற முடியாது என்று மனு தள்ளுபடி ஆனவுடன் நான் இப்போதாவது பேசியே ஆகவேண்டும் என்று நினைத்தேன். ஒருவேளை தானாகவே அறிவுக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருந்தால் கூட நான் வாயைத் திறந்திருக்கமாட்டேன். பணி ஓய்வுக்குப் பிறகு எனக்கு பேச்சு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்கிறேன். நான் பேசுவதால் என்னுடைய நேர்மை, சி.பி.ஐ, நீதித்துறை, காவல்துறை என்று அனைத்தும் களங்கப்படும் என்று தெரியும். அதன் விளைவுகளும் தெரியும். அதனால்தான் மௌனம் காத்தேன். ஆனால் இனியும் முடியாது என்பதால் பேசினேன்” என்கிறார் தியாகராஜன்.
சட்டப்படி இனி என்ன நடக்கும் என்றெல்லாம் விவாதங்கள் எங்கெங்கும் நடந்துகொண்டிருக்க, சென்னையில் குடியிருக்கும் 66 வயதான அந்தத் தாய் மட்டும் வாராவாரம் சென்னையிலிருந்து வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு தன் மகனுடன் சில மணித்துளிகளாவது பேசுவதற்காக வந்து போகிறார். ஏதாவது அதிசயம் நிச்சயம் நிகழும் என்று நம்புகிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.
“22 ஆண்டுகளாக சிறைக்கும் வீட்டுக்குமாய் பயணம் செய்திருக்கிறேன். வாராவாரம் என் மகனை போய் பார்த்துவிடுவேன். இத்தனை ஆண்டுகளில் பத்து முறைதான் அறிவை பார்க்காமல் இருந்திருக்கிறேன். எனக்கு சட்டம் தெரியாது. ஆனால் என் கண்ணீருக்கு இன்றைக்கு தியாகராஜன் மூலம் ஒரு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. அவன் விடுதலை ஆவான். அவனுக்காக காத்திருக்கும் எங்கள் வீட்டுக்குள் அவன் நுழைவான் என்று நாங்கள் காத்திருக்கிறோம்.” என்கிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.
வேலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்துக்குள் நுழைந்து வாயிலை நெருங்க நெருங்க. சிறைவாசிகள் தங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் உரையாடும் சத்தம் பலமாகக் கேட்டது. சிறைக்கதவுகள் மெல்ல திறக்க உள்ளே நுழைந்தவுடன் கையிலிருக்கும் பணம் மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் காவலர்களிடம் ஒப்படைத்தவுடன் அந்த அறைக்குள் சென்றேன். ஒரு நீண்ட மேஜையின் ஒரு முனையில் ஒரு காவலர் வயர்லெஸ் கருவியுடன் அமர்ந்திருக்கிறார். மறுமுனையில் சிறைவாசிகளுக்கான வெள்ளை உடையில் அமர்ந்திருந்தார் பேரறிவாளன். புன்னகையுடனும் நம்பிக்கையுடனும் காணப்பட்டார் அறிவு.
“என்னை பூஸ்டர் என்றுதான் அழைப்பார்கள். நான் வாலிபால் ப்ளேயர். உங்களுக்குத் தெரியுமா? வைகோவை கைது செய்து இங்கே வைத்திருந்தபோது அவர் பூஸ்டராக என் எதிரணியில் இருப்பார்” என்று சிரிக்கிறார்.
”சக சிறைவாசிகள் எல்லோரும்..அண்ணே! விடுதலை ஆகப்போறீங்க என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என்னைப் பார்க்கவரும் நண்பர்கள் ‘உன் சுதந்திரம் போய்விட்டது. நீ நினைத்த இடத்துக்குச் செல்ல முடியவில்லை. உன் இளமைக்காலத்தை சிறை தின்றுவிட்ட்து. அடைபட்டுக் கிடக்கிறாய்’ என்றெல்லாம் வருந்துவார்கள். ஆனால் எனக்கு அதிலெல்லாம் வருத்தமில்லை. பேரறிவாளன் எதையாவது சொன்னால் மக்கள் நம்பவேண்டும். ‘அவனா? அவன் ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்றவனாச்சே?’ என்று சொல்வது மாதிரி கொடுமை எதுவுமில்லை. என் நம்பகத்தன்மையும் ஒரு குடிமகனாக என்னுடைய சிவில் உரிமைகள் பறிபோவதும்தான் என்னுடைய வருத்தம்” என்கிறார். இதையும்கூட புன்னகையுடன் தான் கூறுகிறார் அறிவு.
“கவிதைகள் எழுதுவதுண்டு. இலக்கியவாதி ஆகவேண்டும் என்பதற்காக கவிதை எழுதும் நிலையில் நான் இல்லை. மனப்போராட்டங்களை, கோபத்தையெல்லாம் கவிதையில் கொட்டிவைப்பேன். தவறு செய்தவன் தண்டனையை குறைக்கச் சொல்லலாம். தவறு செய்யாதவன் என்னை விடுதலை செய்யுங்கள் என்றுதான் கேட்கவேண்டும். ஆனால் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால், தண்டனையை குறையுங்கள் என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு. கருணை மனு நீட்ட வைத்ததுதான் எனக்கு நேர்ந்த கொடூரமாக நினைக்கிறேன்.” என்றார்.
’’அறிவு..! நேரமாச்சு” என்கிறார் சிறைக்காவலர் ‘இதோ முடிச்சுக்குறேன் சார்” என்று சொல்லிவிட்டு மீண்டும் திரும்பி தொடர்கிறார். சிறைக்குள்ளிருந்தே இக்னோ பல்கலைக்கழகத்திலிருந்து பி.சி.ஏ. பட்டம் பெற்றிருக்கிறார் அறிவு. “கலையும் கல்வியும் இல்லையென்றால் நான் சிறைக்குள் எப்படி இருந்திருப்பேன் என்றே தெரியவில்லை.
பாட்டு, நடனம், கீபோர்ட் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் உண்டு. எல்லாமும் சிறைக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளிலேயே செய்தாகிவிட்டது. இப்படி ஏதாவது சிறைக்குள்ளும் செய்துகொண்டிருப்பதுதான் என்னை துடிப்புடன் இருக்க வைக்கிறது.” என்று கூறிவிட்டு அறிவு மீண்டும் இருள் நிரம்பிய சிறைக்கூடத்தை நோக்கி திரும்பி நடக்கத் தொடங்கினார்.
இக்கட்டுரையை நான் 'இந்தியாடுடே'யில் எழுதி 6 ஆண்டுகளாயிற்று. எந்த இந்தியா டுடே 'பேரறிவாளன் வெடிகுண்டு நிபுணர்' என்று 91ல் எழுதியதோ அதே இந்தியா டுடேயில் அவர் நிரபராதி என கட்டுரை எழுத எனக்குக் கிடைத்த வாய்ப்பை அரிதாகவே எண்ணுகிறேன். அந்த இதழே நின்றுபோய்விட்டது இன்னும் விடுதலை கிட்டவில்லை. ஆகவேதான் இந்த #ReleasePerarivalan பரப்புரை.
- கவின் மலர், ஊடகவியலாளர்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!