உணர்வோசை
“எங்க நாலு பேரையும் ஒண்ணா புதையுங்க!” - தொழிலாளர் உரிமைக்காக தூக்கில் தொங்கியவர்களின் நினைவுதினம் இன்று!
உலக வரலாற்றில் எந்த ஒரு போராட்டமும் தொழிலாளர்கள் இல்லாமல் வெற்றிபெற்றது கிடையாது. தொழிலாளர்களால்தான் எந்த ஒரு புரட்சியும் தொடங்கியிருக்கிறது. அதனால்தான், கார்ல்மார்க்ஸ், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்று முழக்கமிட்டார்.
தமிழகத்தில் வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் ஏராளமான பஞ்சாலைகள் தொடங்கப்பட்டன. அந்ப்த பஞ்சாலைகளில் தொழிலாளர் உரிமைக்காக நடத்திய போராட்டங்களில் அதிகார வர்க்கத்தை நோக்கிக் குரல் எழுப்பியவர்கள் தூக்குமேடைக்கு அனுப்பப்பட்ட துயர சம்பவம் ஒன்று நடந்தேறி தமிழக வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்தியது.
கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற பஞ்சாலைகளில் ஒன்றான ரங்கவிலாஸ் மில் அப்போது தமிழகத்தின் மிகப்பெரிய நூற்பாலையாகத் திகழ்ந்தது. 1911ல் ஜின்னிங் மில்லாக தொடங்கப்பட்ட ரங்கவிலாஸ் ,1922ல் அசுர வளர்ச்சியுடன் நூற்பாலையாக உருவெடுத்தது.
ஆயிரக்கணக்கான பேர் பணியாற்றிவந்த இந்த மில்லின் நிர்வாகம் முழுவதும் வெள்ளையர்களின் கங்காணிகளால் நடத்தப்பட்டு வந்தது. தினந்தோறும் 15 மணிநேரம் தங்கள் உழைப்பை செலுத்தும் தொழிலாளர்கள் பெற்றதோ சொற்ப ஊதியத்தைத்தான்.
அதுமட்டுமல்லாமல், மில்லில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் தொல்லை சகஜமாக நடக்கத் தொடங்கியது. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட தொழிலாளர்களில் சிலர் சங்கம் அமைக்கத் தொடங்கினர்.
சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் உள்ளிட்ட இளம் தொழிலாளர்களுடன், பெண் தொழிலாளி ராஜி சேர்ந்து அதிகார வர்க்கத்திற்கு எதிராக குரல் எழுப்பினார்.
பெண் தொழிலாளர்களை திரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோரை தட்டிக்கேட்டார் ராஜி.
ஒரு மாலைநேரத்தில் பணிமுடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ராஜியை ஒரு கும்பல் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது.
இதனால் தொழிலாளர்கள் கொதிப்படைந்தனர். இந்த கொடூரத்திற்கு காரணமான பொன்னான் என்ற கங்காணியை மேற்படி தொழிலாளிகள் ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகியோர் கடுமையாக தாக்கினர். இந்தத் தாக்குதலில் பொன்னான் இறந்து போனான்.
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. மேற்படி 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தொழிலாளிகளை விடுவிக்க கடுமையான சட்டப்போராட்டம் நடந்தது. இறுதியில், தொழிலாளர்களின் உரிமைக்காவும், பாதுகாப்பிற்காகவும் போராடிய நான்கு தொழிலாளர்களுக்கும் லண்டன் கவுன்சில் தூக்கு தண்டனையை பரிசாக அளித்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நான்கு தொழிலாளர்களையும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷி மற்றும் பி.ராமமூர்த்தி, கே.ரமணி ஆகிய தலைவர்கள் சிறைக்குள் சென்று சந்தித்தனர்.
உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் தலைவர்கள் கலங்கினார்கள். ”வழிகாட்டும் நீங்கள் கண்ணீர் சிந்தக்கூடாது ‘இன்குலாப் ஜிந்தாபாத்! லால் சலாம்! என்று சிறை அதிர முழங்கி அவர்களைத் தேற்றி அனுப்பினார்கள்.
தூக்குக்கயிற்றை முத்தமிடும் முன்பாக அந்த நால்வரும், சக தொழிலாளர்களிடமும், கிராமத்தினரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைத்தனர். 4 பேரையும் ஒரே இடத்தில் புதைக்கவேண்டும் என்பதே அந்த வேண்டுகோள்.
1946-ம்ஆண்டு, ஜனவரி 8ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகிய நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர். சக தொழிலாளர்கள் கதறி அழுதனர். கிராம மக்கள், பெண்கள் இறுதி ஊர்வலத்தில் அழுத கண்ணீர் சாலையை நனைத்தது. ஊர் முழுவதும் சோகமயமானது.
கோயம்புத்தூரில் இந்த தியாகிகளின் சமாதி இன்றளவும், தொழிலாளர்களின் போற்றுதலுக்குரிய இடமாக விளங்கி வருகிறது. தங்கள் இன்னுயிரை இழந்து தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்த, அதிகார வர்க்கத்தை உலுக்கிய இந்த தொழிலாளர்களின் நினைவு தினம் இன்று.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?