உணர்வோசை
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் தொடரும் மாணவர்களின் ’மர்ம’ மரணங்கள் : யார் உண்மையான ’கொலைகாரன்’ ?
இந்தியா முழுவதும் அரசு கல்வி நிறுவனங்கள் சர்ச்சைகளுக்குள்ளாகி வரும் நிலையில் நவம்பர் 9ம் தேதி சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் ஃபாத்திமா லத்தீப் என்கிற மாணவி தற்கொலை செய்து கொண்ட விஷயம் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. விவாதத்துக்கு முக்கியமான காரணம், ஃபாத்திமா எழுதியிருக்கும் கடிதம்.
கடிதத்தில் தன் மரணத்துக்கு காரணமென மூன்று நபர்களை குறிப்பிட்டிருக்கிறார் ஃபாத்திமா. சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் கரா, மிலிந்த் ப்ரெஹ்மே என்ற மூன்று பேர்.
ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் மகள் இறந்திருக்கும் முறையை வைத்து பல கேள்விகளை கேட்டு வருகிறார். சுதர்சன் பத்மநாபன் பல வகைகளில் ஃபாத்திமாவுக்கு உளவியல் சிக்கல்களை கொடுத்ததாக கூறுகிறார்.
மரணத்துக்கு முன்பே கூட ‘தன் பெயரே அவர்களுக்கு பிரச்சினையாக இருப்பதாக’ ஃபாத்திமா குறிப்பிட்டதை தந்தை நினைவு கூர்கிறார். சிறுபான்மை மதத்துப் பெண்ணை இந்தியாவில் வேறெங்கும் படிக்க அனுப்ப பயந்து, தமிழ்நாட்டை நம்பி அனுப்பி இழந்துவிட்டதாக ஃபாத்திமாவின் தாய் கலங்கினார். ஐ.ஐ.டி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டும் அப்துல் , ஃபாத்திமாவின் தற்கொலையில் சந்தேகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்கள் வேறு சில காரணங்களையும் சொல்கிறார்கள். படிக்க வைக்கவென மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தம், ஹாஸ்டலில் தங்கி படிப்பதால் ஏற்படும் தனிமை, தேர்ச்சி பெறுவதற்கென இருக்கும் முறைகள் கொடுக்கும் அழுத்தம் என மாணவர்களுக்கு மன நெருக்கடி கொடுக்கும் சூழலே ஐ.ஐ.டி.யில் அதிகமென்கிறார்கள்.
இவை அல்லாமல் ஐ.ஐ.டி.யில் நிலவும் அரசியல் சூழலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாக 2017ம் ஆண்டில் மாட்டுக்கறி உண்ணதாக ஒரு மாணவர் வளாகத்துக்குள்ளேயே தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது.
மேலும் ஐ.ஐ.டி.யின் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என்றும் பார்ப்பன மற்றும் உயர்சாதியினரின் ஆதிக்கம் ஐ.ஐ.டி நிர்வாகத்தில் அதிகம் என்றும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஐ.ஐ.டி நிறுவனங்கள் மரணங்களின் விளைநிலமாக மாறியிருக்கும் சூழலில், சென்னையில் இருக்கும் ஐ.ஐ.டி மரண எண்ணிக்கையில் தலைமை வகிக்கிறது. எந்த வகையிலுமே ஏற்றுக் கொள்ள முடியாத தகவல் இது.
ஃபாத்திமாவின் தற்கொலை உட்பட சென்னை ஐ.ஐ.டியில் நடக்கும் மரணங்களுக்கு யார் காரணம்? யார் உண்மையான ’கொலைகாரன்’ ?
ஃபாத்திமா குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் இருந்தே தொடங்குவோம். முதல் நபர் சுதர்சன் பத்மநாபன். அவரின் அரசியல் என்னவென்பதை அடையாளம் காட்டும் வகையில் பல காணொளிகள் இணையதளத்தில் கிடைக்கின்றன. இட ஒதுக்கீட்டை தவறாக சித்தரிக்கும் வழக்கமான எள்ளல் அவரிடம் இருக்கிறது.
அதை விட இன்னொரு முக்கியமான காணொளி ஒன்று இருக்கிறது. ஒரு கருத்தரங்கு நடத்தப்படுகிறது. அதை ஒருங்கிணைக்கும் இடத்தில் சுதர்சன் பத்மநாபன் இருக்கிறார். பல மாணவர்கள் வந்து கருத்தரங்கின் பொருட்டு தாங்கள் செய்த ஆய்வுகளை சமர்ப்பித்து விளக்குகிறார்கள்.
அந்த கருத்தரங்கின் பெயரென்ன தெரியுமா? Modern Hinduphobia and Dravidian Movement. தமிழில் மொழிபெயர்த்தால் ‘நவீன இந்து வெறுப்பும் திராவிட இயக்கமும்’ என சொல்லலாம்.
ஓர் உயர்கல்வி நிறுவனத்தில் இப்படியான ஒரு தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்படுகிறதெனில் அந்த நிறுவனத்தின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும்?
அது மட்டுமல்ல. அந்த கருத்தரங்கில் முன் வைத்து விளக்கப்பட்ட ஆய்வுகளின் தலைப்புகளை பாருங்கள். ‘தமிழ் மனதை காலனியாதிக்கத்தில் இருந்து எப்படி மீட்பது?’, ‘தமிழ் தொலைக்காட்சிகளில் இருக்கும் இந்து வெறுப்பு’, ‘திராவிட மொழிச் சிந்தனை இனவெறிக்கு நிகர்’, ‘தமிழர் மருத்துவமான சித்த மருத்துவம் நச்சுத்தன்மை கொண்டது’ என பட்டியல் போகிறது.
இவை யாவும் ஒரு கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட தலைப்புகள். இது போல பல கருத்தரங்கங்களின் காணொளிகள் கிடைக்கிறது. இன்னொரு கருத்தரங்கின் தலைப்பு ‘சாதி, தீண்டாமை மற்றும் இந்து மதம்’.
இந்த தலைப்பில் பேசப்படும் முதல் ஆய்வின் தலைப்பு என்ன தெரியுமா? ‘சாதி பேசி ஆதாயம் பெறுவதை ஒழிக்கும் வழி’! அதில் பேசுகிற மாணவர், ‘ஒரு சில தனி மனிதர்கள் எப்படி சாதியை பேசி ஆதாயம் பெறுகிறார்கள் என்பதையும் அதன் வழி வருணாசிரம தர்மத்தையும் இந்து மதத்தையும் எப்படி அவதூறு பேசுகிறார்கள் என்பதையும் இந்த ஒரு புத்தகத்தை வைத்து நான் விளக்கவிருக்கிறேன்’ என கூறிவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார். அந்த புத்தகத்தின் அட்டையில் அண்ணல் அம்பேத்கரின் படம் இருக்கிறது. புத்தகத்தின் பெயர் ‘சாதியை ஒழிக்க வழி’!
பார்ப்பனீயத்தை முன்னெடுத்து கருத்தரங்குகளாகவும் ஆய்வுகளாகவும் ஐ.ஐ.டி நிறுவனம் திராவிட இயக்கத்தின் அரசியல் கருத்தியலை பற்றியும் தமிழர் சமயம் எப்படி பார்ப்பனீயம் ஆக முடியாதென்பதை மதச்சார்பின்மை பற்றியும் இஸ்லாமிய வெறுப்பை பற்றியும் அரசியல் மதம் கலப்பதன் பிரச்சினைகள் பற்றியும் ஆய்வுகளையோ கருத்தரங்குகளையோ நடத்தியிருக்குமா என தெரியவில்லை.
திராவிட இயக்கத்தை பற்றிய துவேஷமும் இந்தியாவில் ஆரியர்களின் வருகை குறித்தும் அப்பட்டமான வெறுப்பு விதைக்கும் விதங்களில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் சுதர்சன் பத்மநாபன் அமர்ந்திருக்கிறார். அத்தகைய மனிதரைத்தான் ஃபாத்திமா தன் மரணத்துக்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டிருக்கிறார்.
சுதர்சன் பத்மநாபன் என்ற பெயரை இட்டு தேடுபொறியில் தட்டிவிட்டால், அவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் தேடுபொறி கொண்டு வந்து காட்டுகிறது. அதில் ஒரு முக்கியமான புத்தகமும் இருக்கிறது.
தலைப்பு என்ன தெரியுமா? Becoming Minority : How Discourses and Policies Produce Minorities in Europe and India. அதாவது ‘சிறுபான்மையினராக மாற்றப்படும் தன்மை: கொள்கைகளும் போக்குகளும் எப்படி ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் சிறுபான்மையினரை உருவாக்குகிறது’ என மொழிபெயர்க்கலாம்.
தலைப்பிலேயே சிறுபான்மை மதங்களை பற்றியும் மொழியினரை பற்றியும் என்ன விதமான கருத்துகள் புத்தகத்தில் இருக்கும் என்பதை ஊகித்துவிட முடியும். எனினும் புத்தகத்தை படிக்காமல் கருத்து தெரிவித்துவிடக் கூடாதென படிக்க தொடங்கினாலே போதும். பக்கத்துக்கு பக்கம் வெறுப்பு உங்கள் முகத்தில் தெறிக்கும்.
சுருங்க சொல்வதெனில் ‘காலனியாதிக்கத்தின் தொடர்ச்சியாகவே சிறுபான்மை தொகுதி என்பது அரசியலில் நிறுத்தப்படுகிறது என்பதாகவும் ஓட்டரசியலின் விளைவாகவே அவர்களை பெரும்பான்மையுடன் கலக்க விடாமல் கட்சிகள் வைத்திருக்கின்றன என்பதாகவும் அதனாலேயே வெறுப்பரசியல் திட்டமிட்டு விதைக்கப்படுவதாகவும்’ புத்தகம் பேசி செல்கிறது.
நிலவரம் இப்படியிருக்க சமூக தளங்களில் தன்முனைப்பு மட்டுமே கொண்ட அரைவேக்காடுகளில் சில, சுதர்சன் பத்மநாபனை மட்டுமே திராவிட, அம்பேத்கரிய, கம்யூனிச கட்சிகள் விமர்சிப்பதாக குறிப்பிடுகின்றனர்.
அதற்கு காரணமாக, ஃபாத்திமா குற்றம் சாட்டியிருக்கும் இன்னொரு நபரான மிலிந்த் ப்ரெஹ்மே என்பவர் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் எவர் செய்தாலும் குற்றமே. ஆனால் உண்மை தெரியாமல் குற்றஞ்சாட்டுவது சரியான அரசியலும் கிடையாது.
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தில் மிலிந்த் உறுப்பினராக இல்லை. ஐ.ஐ.டி நிர்வாகத்தின் பிரதிநிதியாக மட்டுமே இருந்தார். இதைப் பற்றி செய்திகள் பல வந்திருக்கின்றன.
சோகம் என்னவென்றால் தமிழ் தேசியர்கள் இதுதான் வாய்ப்பு என கருதி திராவிட, அம்பேத்கரிய, கம்யூனிச கட்சிகளை பிறாண்ட ஓடி வருவதுதான். ஐ.ஐ.டி நிர்வாகம் நடத்தும் கருத்தரங்குகளை சில மணி நேரங்கள் செலவழித்து பொறுமையாக பார்த்தால், அவர்கள் பரப்பும் விஷம் திராவிடத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழுக்கும் தமிழர் பெருமைக்குமே எதிரானது என்ற விஷயம் புரிந்துவிடும்.
ஃபாத்திமா குற்றஞ்சாட்டியிருக்கும் மற்றுமொரு நபர் ஹேமச்சந்திர கரா. அவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் கொண்டிருக்கும் அரசியலை பற்றி பெரிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனினும் இந்த கட்டுரை யாரும் குற்றஞ்சாட்ட எழுதப்படவில்லை. அதற்கென விசாரணைகளும் முறைகளும் இருக்கிறது.
அவை சரியாக நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். இந்த சமூகம் கொண்டிருக்கும் அமைப்புக்கேற்பவே விளைவுகளும் தீர்வுகளும் கிடைக்கும். அவற்றை தாண்டி இக்கட்டுரையின் முக்கிய நோக்கம், ஐ.ஐ.டி என்ற கல்வி நிறுவனத்தில் நடக்கும் மரணங்களுக்கு யார் காரணம் அல்லது எது காரணம்?
‘என் பெயரே அவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது’ என ஃபாத்திமா குறிப்பிட்டிருக்கிறார் என்றால் அந்த அவர்கள் யார்? அந்த அவர்கள் கொண்டிருக்கும் சிந்தனை முறை மற்றும் அரசியல்கள் என்ன?
எந்தவொரு நிறுவனத்திலும் அமைப்பிலும் அதிகாரத்தில் எந்த சிந்தனை இருக்கிறதோ எந்த அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதுவே அந்த அமைப்பு முழுக்க, நிறுவனம் முழுக்க வழிந்தோடும். அந்த வகையில் ஐ.ஐ.டி நிறுவனத்தில் நிலவும் அரசியல் என்ன? ஐ.ஐ.டி நிர்வாகம் என்ன சிந்தையை கொண்டிருக்கிறது?
'சிறுபான்மையினராக மாற்றப்படும் தன்மை' என புத்தகம் தொகுக்கும் நபரின் பார்வையில் சிறுபான்மை மதத்தை சேர்ந்த பெண் என்னவாக தெரிவாள்? என்ன மாதிரியான மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும்? எந்த மாதிரியான வார்த்தைகள் உதிர்க்கப்பட்டிருக்கும்?
மதிப்பெண்கள், தேர்வு, தனிமை போன்றவற்றுடன் பார்ப்பனீய ஆதிக்க சிந்தனையும் ஒடுக்குமுறையும் சேர்கையில் அங்கு படிக்கும் மாணவனுக்கு கிடைப்பது என்னவாக இருக்க முடியும்?
ஒடுக்குமுறை அல்லது மரணம்!
ஐ.ஐ.டி மரணங்களுக்கு அடிப்படை காரணம் பார்ப்பனிய அதிகாரம், பார்ப்பனிய சிந்தை, பார்ப்பனிய அமைப்பு, பார்ப்பனிய ஆதிக்கம்!
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் யாவும் காவி படிந்து கறைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், நம்மூருக்குள் அமர்ந்து கொண்டு திராவிடத்தையும் பெரியாரையும் அம்பேத்கரையும் தமிழையும் இடதுசாரிகளையும் எதிர்க்கும் கூடாரமாக இருக்கிறது ஐ.ஐ.டி.
இந்து மதத்தையும் ஆரியத்தையும் தமிழையும் ஒன்றென நிறுவும் திரிபுவாத கருத்துகளை ஆய்வுகளென செய்யும் ஆர்.எஸ்.எஸ் மடமாக மாறியிருக்கிறது ஐ.ஐ.டி. இங்கிருந்துதான் நம் குழந்தைகள் அறிவை பெற இருக்கின்றன என்னும்போது அவர்கள் நமக்கு எதிராகவே எதிர்காலத்தில் நிற்பார்கள் என்பதே சாத்தியம்.
ஃபாத்திமா மட்டுமின்றி இனி வேறெவரையும் பறிகொடுத்திட கூடாதெனில் நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். ஐ.ஐ.டி.யில் அரசியல் ரீதியாகவும் இட ஒதுக்கீடு ரீதியாகவும் இருக்கும் சர்ச்சைகளை விசாரணைக்குட்படுத்த வேண்டும்.
காவி இருக்கும் இடங்கள் யாவும் அடித்து துவைத்து அலசி கழுவி சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தை உறுதிப்படுத்திட மாநில பிரதிநிதித்துவ அமைப்புகளை ஐ.ஐ.டி வளாகத்துக்குள் உருவாக்கிட வேண்டும்.
இல்லையெனில், இடம் கேட்டு வந்தவன் மொத்த வீட்டையும் பறித்துக் கொண்டு போவான்!
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!