உணர்வோசை
அயோத்தி அரசியல் : யார் இந்த லால் தாஸ்? - அயோத்தி கலவரம் உருவானது எப்படி ?
பூஜாரி லால் தாஸ் - இந்தப் பெயரை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனால் அயோத்தி - பாபர் மசூதி இடிப்பு - ராமர் கோவில் கட்டும் பணி இவை யாவும் இந்தியாவில் கடந்த 50 வருடங்களில் வாழ்ந்த யாரும் மறக்க முடியாத வார்த்தைகள். இந்திய அரசியலையும், இந்தியாவின் இறையாண்மை கோட்பாடுகளையும் சோதித்துப் பார்த்த - சோதித்துக்கொண்டிருக்கும் வார்த்தைகள். சரி, யாரந்த பூஜாரி லால் தாஸ்? அவர் தான் ராமர் பிறந்த இடமாக இந்துக்களால் கருதப்படும் அயோத்தியில் நீதிமன்றத்தால் இந்து முறைப்படி பூஜை செய்ய அனுமதிக்கப்பட்ட பூசாரி.
எந்த சம்பவத்தையும் முழுதும் அறிய அதில் சம்மந்தப்பட்ட எல்லா குரல்களையும் கேட்டுத்தான் ஆகவேண்டும். அப்படி நாம் கேட்கவேண்டிய குரல் அவருடையது. அக்டோபர் 30, 1990 விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இந்துத்துவ ஆதரவாளர்களைத் திரட்டி பாபர் மசூதி நோக்கி ஒரு பேரணி நடத்தியது. பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்துத்துவ ஆதரவாளர்கள் பங்கேற்ற இந்தப் பேரணியில் இந்துத்துவ தலைவர்களான உமா பாரதி, அசோக் சிங்கல், சுவாமி வாமதேவ முதலானோர் பங்கேற்றனர்.
ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டவேண்டும் என்பது அவர்களின் முழக்கமாய் இருந்தது. பாபர் மசூதியில் நுழைய நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கும் அங்கிருந்த இந்தோ திபெத்திய எல்லை காவல்படைக்கும் மோதல் வெடிக்கவே, கூட்டத்தைக் கலைக்கக் காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர், இதில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர் என்று அறிவித்தது அப்போது உத்தர பிரதேசத்தை ஆண்ட முலாயம் சிங் யாதவ் அரசு. இதனால் கோபமடைந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் டிசம்பர் 6, 1992ல் இந்துத்துவ ஆதரவாளர்கள் அனைவரும் கூடவேண்டும், அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர்.
இதைப்போன்ற அறிக்கைகளுக்கு அரசாங்கமும், மக்களும் பழகி இருந்தனர், இந்த அறிக்கையினால் பெரும் சேதம் இல்லை என்று குறைத்து மதிப்பீடு செய்திருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது. பூஜாரி லால் தாஸ் ஊடகங்களிடம் பேசியபோது இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகக் ஒரு கருத்தைச் சொன்னார் "விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அயோத்தியின் ராமர் கோவில் விவகாரத்தை அரசியல் ஆக்க முயல்கின்றது; இந்து கடவுள்களின் சிலைகள் எங்கு வைக்கப்பட்டாலும் அந்த இடத்தை கோவிலாக ஏற்கச் சொல்கிறது இந்து தர்மம், அப்படி இருக்க இவர்கள் பாபர் மசூதியை இடிப்போம் என்று சொல்வது மூடத்தனம் என்றார்.
“பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் தான் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கூவும் அமைப்புகள், உண்மையில் வாக்கரசியலைப் பற்றி மட்டுமே யோசிக்கின்றன. அவர்களுக்கு இதனால் நடக்கப்போகும் அசம்பாவிதம் குறித்து கவலை இல்லை” என்றும் கூறினார். இவர் சொன்னதில் உண்மை இருக்கிறது என்பது 1989ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபணம் ஆயிற்று. பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தேர்தலுக்குப் பின்னர் 2ல் இருந்து 85ஆக எகிறியது.
அதுவரை பெரும்பான்மை இல்லாமல் தவித்த பா.ஜ.க அன்றிலிருந்து 20 வருடங்கள் கழித்துத் தனி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்று கூறியிருந்தால் அப்போதைய பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி கூட நம்பி இருப்பாரா என்பது கேள்விக்குறியே. ஆனால் அயோத்தி விவகாரம் இந்திய அரசியலைப் புரட்டிப் போட்டதற்கு அத்வானியும் ஒரு காரணம், அத்வானியின் 'ரத யாத்திரை' பயணம் அதுவரை மக்களின் பண்பாடாக இருந்த இந்து மதத்தை அரசியலாக்கியது என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்.
'ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவோம்' என்ற முழக்கத்தோடு ரதம் போல அலங்கரிக்கப்பட்ட டொயோட்டா வாகனத்தில் தனது 10,000 கிலோமீட்டர் பயணத்தைத் துவங்கினார் அத்வானி. இந்தப் பயணம் அதுவரை தங்கள் ஊரில் இருந்த கரசேவகர்கள்/இந்துத்துவ ஆதரவாளர்களை அயோத்திக்கு வர அழைப்பு விடுத்தது, மும்பையில் ரத யாத்திரை கூட்டத்தில் 'இது கடவுளுக்கான யாத்திரை, இதில் எந்த கலகமோ, சேதமோ நிகழாது' என்று அவர் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில் இந்து - முஸ்லீம் கலவரங்கள் நாடெங்கும் பரவின.
அதே 1990 அக்டோபர் 20ம் தேதியில் கர்நாடகாவில் 19 பேர் பலியானதாகவும், கோண்டாவில் 42 பேர், லக்னோவில் 28, ராஞ்சியில் 3 பேரும் பலியானதாகவும் செய்தித்தாள்கள் தலையங்கம் தீட்டின. இவைமட்டுமா, பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நடந்த கலவரங்களில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர்.
உண்மையில் பூஜாரி லால் தாஸ் சொன்னது போல் இந்த மத அரசியல், தேர்தல் வாக்குகளுக்காக மட்டும் தானா என்ற கேள்விக்கு இரண்டு பதில்கள், இரண்டுமே ஆம் என்றே சொல்லக்கூடும்.
1) மண்டல் கமிஷன் முடிவுகளும் - ராமர் கோவிலும்
நாட்டின் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு மருந்து என்று நம்பப்பட்ட மண்டல் கமிஷன் முடிவுகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலைகள், கல்வி முதலியவற்றில் இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்றது மண்டல் கமிஷன். பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலைகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். இது உயர்சாதி மக்களை பெரும் கோபத்திற்கு ஆளாக்கியது. குறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது அந்த பகுதிகளில் மக்கட்தொகையில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் உயர்சாதி இந்து மக்கள் என்பது கூட இதற்குக் காரணமாய் இருக்கலாம்.
உயர்சாதி மக்களின் வாக்கரசியலை மட்டுமே நம்பி வந்த பா.ஜ.க, அரசின் இந்த முடிவுக்கு பெரும் கண்டனம் தெரிவித்தது. 1989 தேர்தலில் காங்கிரஸ் 197 தொகுதிகள் வென்ற போதிலும் பெரும்பான்மை இல்லாததால், தலா 143 மற்றும் 85 தொகுதிகளில் வென்ற ஜனதா தள் மற்றும் பா.ஜ.க இணைந்து ஆட்சி அமைத்திருந்தன. கூட்டாட்சி என்றபோதிலும் அரசின் இந்த முடிவை பா.ஜ.க எதிர்த்து. நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. இந்த நேரத்தில் தான் அத்வானியின் 'ரத யாத்திரை' துவங்கியது. அதுவரை மக்கள் மனதிலிருந்த சாதி என்கிற அமைப்பைச் சுற்றி நடந்த போராட்டங்கள், மதம் என்னும் பெரும் அமைப்பைச் சேர்ந்த போராட்டங்களை நோக்கி நகர்ந்தன.
அக்டோபர் 23ம் தேதி 1990ம் ஆண்டு பீகாரின் சமஸ்திபூர் பகுதியில் ரத யாத்திரை மேற்கொண்ட அத்வானியை, பீகாரின் அப்போதைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆணையின் பேரில் போலிஸார் கைது செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் பதட்டத்தை உருவாக்கியது. ஆனால் இதைவிட பெரும் கலவரத்தை, இந்தியாவின் மூலை முடுக்குகளைக் கூட நடுங்கவைக்கும் பதட்டத்தை இன்னும் இரண்டு வருடங்களில் சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் உணரவில்லை. இந்த நிகழ்வுக்குப் பிறகு பா.ஜ.க, வி.பி.சிங் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டது. வெறும் 16 மாதங்களே நடந்த கூட்டாட்சி கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது.
2) பூஜாரி லால் தாஸ் போலவே நாம் கேட்கவேண்டிய இன்னொரு குரல் அப்போது வருமான வரித்துறையில் துணை ஆணையராக பணிபுரிந்த வி.பி.குப்தாவின் குரல். ராமருக்குக் கோவில் கட்டுவோம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முழங்கத் துவங்கியது. பல கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் நடத்தியது. நாடெங்கிலும் இருந்து 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பெற்ற செங்கற்கள் அயோத்தியில் குவியத் துவிங்கிய அதே நேரத்தில் தான் இந்துத்துவ அமைப்புகளுக்குக் கோவில் கட்டுவதற்காய் நன்கொடைகள் குவியத் துவங்கின.
அப்போது டெல்லியில் வருமான வரித்துறை துணை ஆணையராக இருந்த வி.பி.குப்தா விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு ஒரு அறிவிப்பு விடுக்கிறார். உங்களது கணக்கு வழக்குகளை வருமான வரித்துறைக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதே அது. திரைப்படத்தில் நடப்பது போலவே, அடுத்த 24 மணிநேரத்திற்குள் அவர் அப்போதைய மெட்ராஸுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது இருந்த பா.ஜ.க - ஜனதா தள் அரசு ஒரேநாளில் மொத்த விசாரணையையும் அடக்கிவிட்டதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மேலும் அவர், "வெளிநாடுகளிலிருந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்குப் பணம் வந்ததா / இல்லையா? இதைப்போன்ற அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் பெற ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்கா, யு.கே, கனடா போன்ற நாடுகளில் இந்துத்துவ அமைப்புகள் 200க்கும் மேற்பட்ட கிளைகளோடு இயங்குவது எப்படி?" என்றும் கேள்வி எழுப்பினார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் 1990லேயே சுமார் 18,600,000 ரூபாய் வரை பணம் புழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இன்று வரை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மீதான எந்த வருமான வரித்துறை வழக்குகளும் விசாரிக்கப்படவில்லை.
இப்படி, பணம், அரசியல் கலந்த கலவையாய் மாறிப்போனது அயோத்தி வழக்கு. இந்நிலையில் தான் டிசம்பர், 1992ல் அயோத்திக்கு செல்லும் எல்லா வழித்தடங்களையும் முடக்கியது பா.ஜ.க-வை சேர்ந்த கல்யாண் சிங் முதல்வராக இருந்த உத்தர பிரதேச அரசு, இதனால் லக்னோவில் முடக்கப்பட்ட பா.ஜ.க தலைவர் வாஜ்பாய் டிசம்பர் 5, 1992ல் லக்னோவின் அமினாபாத்தில் கூட்டத்தில் பேசியபோது "கூர்மையான கற்கள் வெளியே இருந்து அயோத்திக்கு வந்தன; யாரும் அங்கே உட்கார முடியாது; தரையைச் சமன் செய்யவேண்டும்; ராமர் கோவில் கட்டப்படும்" என்று கூற கூட்டம் ஆரவாரத்தில் மூழ்கியதைப் பதிவு செய்கிறது அவுட்லுக் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அந்த காணொளி.
டிசம்பர் 6, 1992.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூறியது போலவே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அயோத்தியில் கூடினர், அப்போதைய பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோடு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றோரும் இருந்தாலும் கட்டுக்கடங்காமல் போன கூட்டம், நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட நிலப்பரப்பில் நுழைந்தது. ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் பாபர் மசூதியைச் சேதப்படுத்தத் துவங்கினர். இதனால் நாடு முழுவதிலும் வெடித்த வன்முறையில் 2,600க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் அரசியல், சமூகத் தலைவர்கள் பலரும் அமைதி காக்க வேண்டி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டது.
இந்த கட்டுரையின் குரல்களான பூஜாரி லால் தாஸ் , வி.பி.குப்தா ஆகிய சாமானியர்களின் கரிசனம் நிறைந்த குரல்கள் அமைதிப்படுத்தப்பட்டன. பூஜாரி லால் தாஸ் கலவரத்தில் கொல்லப்பட்டாகத் தெரிவித்தது அரசு. வருமான வரித்துறை துணை ஆணையராக இருந்த வி.பி குப்தா நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இவ்வளவு வருடங்களாக நடந்த வழக்கைப் பற்றியும், தற்போது உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு பற்றியும், 1992ல் நடந்த தேர்தலைத் தொடர்ந்து அயோத்தியில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து அடுத்த கட்டுரை பேசும்.
- சௌம்யா ராமன்
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!