உணர்வோசை

இந்தித் திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும்? - ‘சித்திர புத்திரன்’ எழுதியதைப் படியுங்கள்!

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் முதல் குரல் எழுப்பினார்.

1924ம் ஆண்டிலேயே தந்தை பெரியார் இந்தி மொழி எதிர்காலத்தில் திணிக்கப்படும் என்பதை உணர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராகப் பேசியும், தனது குடியரசு நாளிதழில் இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து எழுதியும் வந்தார். ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் அவர் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தி எதிர்ப்பு பற்றி ‘குடியரசில்’ (7.3.1925) ‘தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் இரகசியமும்’ என்ற தலைப்பில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் எழுதப்பெற்ற கட்டுரையின் சில பகுதிகள் :

“இந்திக்காக செலவாகியிருக்கும் பணத்தின் பெரும்பாகம் பார்ப்பனரல்லாதாருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர் பார்ப்பனர்கள். தமிழ்நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 100க்கு 97 பேர் பார்ப்பனரல்லாதாராயிருந்தும் 100க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்கள்தாம் இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர்களாயுள்ளனர்.

பார்ப்பனரல்லாதவர் 100க்கு 3 பேர்களாவது இந்தி படித்தவர்களாயுள்ளனரா என்பது சந்தேகம். இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை.

ஆனால் இந்திக்கு எடுத்துக் கொள்வதைப் போல 100க்கு ஒரு பங்கு கவலைகூட தமிழ்மொழிக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், இந்தி படித்த பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் கெடுதலையும் நினைக்கும்போது இதைப்பற்றி வருந்தாமலும், இம்மாதிரி பலன்தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும் நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத் தனத்திற்கும் வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை.

இந்தியைப் பொதுமொழியாக்க வேண்டும் என்ற கவலையுள்ளவர்கள்போல் தேசத்தின் பேரால் ஆங்காங்கு பார்ப்பனர்கள் பேசுவதும் அதை அரசுப் பள்ளிகள் முதலிய பல இடங்களில் கட்டாயப் பாடமாக்க முயற்சி செய்வதும் யார் நன்மைக்கு?

இனி கொஞ்சகாலத்திற்குள் இந்திப் பிரசாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலுள்ளது.

பொதுவாய் இந்தி என்பது வெளிமாநிலங்களில் பார்ப்பன மதப் பிரச்சாரம் செய்யக் கற்பித்துத்தரும் ஒரு வித்தையாகிவிட்டது. இந்த ரகசியத்தை நமது நாட்டுப் பாமர மக்கள் அறிவதே இல்லை; இரண்டொருவருக்கு அதன் ரகசியம் தெரிந்தாலும் பார்ப்பனர்களுக்குப் பயந்துகொண்டு தாங்களும் ஒத்துப்பாடுகிறார்கள் யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களைத் தேசத்துரோகி என்று சொல்லிவிடுகிறார்கள்.

தமிழ்மொழி நம்முடைய தாய் மொழி; அது மிகவும் உயர்ந்த மொழி; அஃது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி; சமயத்தை வளர்க்கும் மொழி; பழமையின் மொழி; உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லப் பெறுகின்ற காரணத்தால் நான் இந்தியை எதிர்த்துப் போராடவில்லை.

தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைக்கிறேன் என்றால் தமிழைவிட இந்தி மோசமான மொழி; தமிழைவிட இந்தி எந்தவிதத்திலும் மேலான மொழி அல்ல; தமிழைவிட இந்தி கீழான மொழி; தமிழுக்குப் பதில் நமக்கு இந்தி வரத்தகுதியற்றது; இந்தி வருவது நன்மை அல்ல என்ற காரணத்திற்காகத்தான்.

அரசு நடந்துகொள்ளும் போக்கில் இந்தியைக் கட்டாயமாக்குவதும், அதை அரசியல் மொழியாக்குவதும் அலுவல் தகுதிக்கு இம்மொழிப் பாண்டித்யத்தைச் சேர்ப்பதும் திராவிட மக்களை வம்புச் சண்டைக்கு இழுக்கும் அகம்பாவ ஆணவக் காரியமாகும்.

“இந்தியைப் பொதுமொழியாக்குவதால் நாட்டிற்கு நன்மை இல்லை. அதனால் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்குத் தடை உண்டாகும்; தமிழ் மொழியின் வளர்ச்சியும் குன்றும்” என்று எழுதியுள்ளார் தந்தை பெரியார்.

இதுமட்டுமல்லாமல், 1924ல் காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் அப்போதே இந்தியை எதிர்த்து முழங்கினார்.

1924ம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாலையில் நடைபெற்ற 30-வது காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பெரியார் தமது உரையில் கூறியதாவது :

“தமிழ் மொழியின் பழமையையும் தமிழ் மக்களின் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களில் காணலாம். தமிழரசர்கள் யவனதேசம், உரோமாபுரி, பாலஸ்தீனம் முதலான தேசங்களோடு வியாபாரம் செய்ததும் அவ்வியாபாரத்திற்கு ஏற்ற தொழில்கள் நாட்டில் நிறைந்திருந்ததும் பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை விளங்கச்செய்யும்.

வங்காளிக்கு வங்க மொழிப் பற்றுண்டு. மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு. ஆந்திரனுக்கு அவன் மொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்கு தமிழில் பற்றில்லை. இது பொய்யோ? தமிழ்நாட்டில் தமிழ்ப் புலமை மிகுந்த தமிழர்கள் எத்தனை பேர்? ஆங்கிலப் புலமையுடைய தமிழர்கள் எத்தனை பேர்? என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கும். தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்” என்று பேசினார் பெரியார்.

பெரியாரின் திராவிட இயக்கம் அவர் வகுத்துத் தந்த பாதையில் இன்றும் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து களம் கண்டு வருகிறது.