உணர்வோசை
“மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின்னிருக்கும் சதி” - அன்றே அம்பலப்படுத்தினார் தந்தை பெரியார் !
நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டு பல ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்த படுபாதக சம்பவம் குறித்தான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. ஆனால், தேசப்பிதாவின் படுகொலைக்குப் பின்னால் எந்த சக்தி இருந்தது? என்பதை அன்றே தோலுரித்துக் காட்டிய தந்தை பெரியாரின் செயல் இன்றும் நினைத்துப் பார்க்கப்படுவதற்கு பெரியாரின் அசாத்திய துணிச்சலும், ஒரு பிரச்சினை குறித்த நுண்ணிய அவதானிப்புமே காரணமாகும்.
காந்தியார் மறைவையடுத்து திராவிட இயக்கம் அதிர்ச்சி அடைந்தது. தந்தை பெரியார் மகாத்மா காந்தியின் படுகொலையை துக்கநாளாக அறிவித்தார். திராவிடர் கழகம் சார்பில் மகாத்மாவுக்காக அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த தேசத்திற்கு காந்திதேசம் என்று பெயர் வைக்கவேண்டும் என்றார் பெரியார்.
காந்தி கொலையுண்ட செய்தியைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த பெரியார், “காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது.
இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் சதி முயற்சி இருந்திருக்கவே வேண்டும்.
அது காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ, உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயே தான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலிஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும்.
இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்” (குடிஅரசு, 31-1-1948) என்று தனது அனுதாபத்தை தெரிவித்தார். மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் உள்ள சதியை அவர் அப்போதே அம்பலப்படுத்தினார்.
காந்தியார் கொலைக்குப் பிறகு வடஇந்தியாவில் நிலவி வரும் மதவெறி தமிழகத்திற்குள் எட்டிப்பார்க்கக் கூடாது என்று தந்தை பெரியார் உறுதியாக இருந்தார். இதுகுறித்து அவர், “பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்கள் அனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன்.
கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகவே, தோழர் காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார். மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது. அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை ஏற்றுவிட்டன.
காந்தியார் மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக்குரியதாகும். பலதரப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொண்ட காந்தியார், இக்கொடுந் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறாரென்றால், இது மிகவும் வெறுக்கத்தக்கதாகும். இக்கொலையாளியை ஆட்டிப் படைக்கும் சதிக்கூட்டமொன்று திரைமறைவில் வேலை செய்து வர வேண்டும்.
வட இந்தியாவில் நடைபெற்றுவரும் காரியங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியாகும். காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாவத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலைக்க வைப்பர் (குடிஅரசு,7-2-1948) என்று கூறினார்.
திராவிடர்கள் ஒதுபோதும் மதவெறிக்கு பலியாகமாட்டார்கள் என்று பெரியார் உறுதிபடக்கூறினார். இதுமட்டுமல்ல இந்துத்துவா அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் - ஜனசங்கம் ஆகியவற்றை தடைசெய்வதோடு மட்டுமல்லாமல் வருணாசிரமத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.
இதுகுறித்து‘காந்தியார் முடிவு’ என்ற தலைப்பில் 7.2.1948 தேதியிட்ட குடியரசு இதழில், ‘காந்தி பலியாக்கப்பட்டதன் காரணமாய், இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மமுறை, அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை) முறை இனி கிடையாது. வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்திய சுயராஜ்ஜியத்தில் இனி அனுஷ்டிக்கப்படக்கூடாது.
இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும் என்று சுயராஜ்ய சர்க்கார் பேரால் ஏற்பாடு செய்வார்களேயானால் இந்த நாட்டைப் பிடித்த எந்தவிதமான கேடும் ஒரே அடியாய் தீர்ந்துவிடும் என்றும், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்றவற்றைத் தடைசெய்வது மட்டும் போதாது’ என்று அறிக்கை வெளியானது.
ஆக, காந்தியார் படுகொலைக்குப் பிறகு பெரியார் தடை செய்யச் சொன்ன வர்ணாசிரமங்களும், இத்துத்துவ அமைப்புகளும் தமிழ்நாட்டிற்குள் தங்கள் பேயாட்டத்தை ஆட முயற்சித்தும் முடியாமல் போவதற்கு காரணம், தந்தை பெரியார் என்ற ‘தமிழரின் உயிர்வேலி’ தமிழரையும், தமிழகத்தையும் காத்து நிற்பதால்தான்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!