உணர்வோசை
நிர்மலா சீதாராமனின் கோபத்துக்கு ஆளாகியிருக்கும் மில்லென்னியல்ஸ் என்பவர்கள் யார் தெரியுமா? - ஓர் அலசல்!
மிக சமீபத்தில்தான் இந்த வார்த்தை பிரபலம் அடைந்து வருகிறது. எனக்குத் தெரிந்து நான் இவ்வார்த்தையை கேள்விப்படத் தொடங்கியது ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால். கேட்டதுமே இயல்பான அறிவுடன் இவ்வார்த்தைக்கு அர்த்தமாக தோன்றிய விஷயம்: ‘மில்லென்னியம் என்பது ஆயிரம் ஆண்டுகளை குறிப்பது. ஆக 2000ம் வருடத்தை ஒட்டிப் பிறந்தவர்கள் மில்லன்னியல் என அழைக்கப்படுவார்கள் போலும்!’. ரொம்ப சிம்பிளான புரிதல்தானே! பின் அவர்களை படிக்கும்போது பல சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிய வந்தன. அதற்கெல்லாம் பிறகு, மில்லென்னியல்களை நேராக சந்தித்து, உறவாடி, நட்பு பாராட்டும் சூழல்கள் வாய்த்தன பாருங்கள். நிர்மலா சீதாராமனை காட்டிலும் அதி அற்புதமான அனுபவங்கள் வாய்த்தன.
மில்லென்னியல்கள் என்பவர்களை தோராயமாக எண்பதுகளில் இருந்து இரண்டாயிரமாவது ஆண்டுக்குள் பிறந்தவர்கள் என சொல்லலாம். ஆனால் மில்லென்னியல்களின் குணங்கள் என இன்று கொடுக்கப்படக்கூடிய விஷயங்களை வைத்து பார்த்தால், இந்தியாவை பொறுத்தவரை 90களுக்கு பின்னர் பிறந்தவர்களையே மில்லென்னியல்கள் என அழைக்க முடியும். ஏனென்றால் மில்லென்னியல்களின் குணங்களில் ஒன்றாக சொல்லப்படுவது 'தொழில்நுட்பங்களில் தொலைந்து கிடப்பது'. நமக்கு தொழில்நுட்பம் எப்போது வாய்த்தது என யோசித்து பாருங்கள். 1990களில் உலகச்சந்தைக்கு வாசல்கதவை திறந்து விட்ட பிறகுதான்.
Mp3 டேப்ரிக்கார்டர் கேசட்டில் 60 பாடல்கள் பதிய முடியுமென்பதை தெரிந்து கொண்டு, பிடித்தமான 60 பாடல்களை எழுதி பட்டியலிட்டு கொண்டு சென்று கடையில் கொடுத்தால், இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு கடைக்காரர் வர சொல்வார். கைக்கு வரும் அந்த கேசட்டில் மனதுக்குப் பிடித்த அத்தனை பாடல்களும் ஒருங்கே இருக்கிறதென்ற பூரிப்பில் தினமும் போட்டுக் கேட்டு கொண்டாடிய காலம் ஒன்றிருந்தது. அங்கிருந்து தொடங்கி பிறகு டேப் ரிக்கார்டர் என்பதே தொலைந்து சிடி என்ற லோக வழக்கத்துக்குள் புகுந்து, பின் அதையும் தாண்டி 'ஐபாட்'டுக்கு வந்து, இணையத்துக்கு வந்து தற்போது மொபைலுக்கு வந்து நிற்கிறது என் இனிய பாடல்கள்.
சிடியிலிருந்து மொபைலுக்கான இந்த இடைப்பட்ட பயணம் மட்டும் ஒரு வழக்கமான காலச்சூழலில் நடைபெறுவதென்றால் குறைந்தது ஒரு நூற்றாண்டு ஆகும். செல்லுலாய்டில் இருந்து டிஜிட்டலுக்கு வந்த சினிமாவும் மை அச்சிலிருந்து டிஜிட்டலுக்கு மாறிய அச்சுத்துறையும் அந்த ஒற்றை தாண்டலுக்கே 60 வருடங்கள் எடுத்துக் கொண்டன. கேசட் டு மொபைல் என்கிற நான்கைந்து கட்ட வளர்ச்சிகளை தாண்ட வெறும் முப்பதே வருடங்கள் ஆகியிருக்கின்றன. இப்படி அசுரப் பாய்ச்சலில் காலமும் தொழிநுட்பமும் இருந்த கட்டத்தில் இவ்வுலகில் உதித்தவர்களே மில்லென்னியல்கள் என்றழைக்கப்படுபவர்கள்!
உங்களுக்கு இந்நேரத்துக்கு சலிப்பு வரலாம். ‘அந்தக் காலமெல்லாம் எவ்வளவு அற்புதமாக இருந்தது தெரியுமா?’ என ஆரம்பிக்கப் போகிறான் என்று கூட நினைப்பீர்கள். கவலைப்படாதீர்கள். நான் அப்படிச் சிந்திப்பவன் அல்ல.
எல்லாக் காலமும் உலக வரலாறுக்கும் மனித பரிணாமத்துக்கும் ஏதோவொரு வகையிலேனும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அந்தந்த காலங்களில் நேரும் மாற்றங்களை அவதானித்து அவை உருவாக்கக்கூடிய சமூக - பொருளாதார -உளவியல் மாற்றங்களை ஒரு கூட்டம் எழுதி வைக்கும். அந்த கூட்டத்தைச் சேர்ந்தவன் மட்டுமே நான். வேறேதுமில்லை. ஆகவே நம்பி மேலே படிக்கலாம்.
மில்லென்னியல்களின் குணங்கள் என பரவலாக சொல்லப்பட்டிருப்பவை என்னவென முதலில் அறிந்து கொள்வோம்.
தொழில்நுட்பத்துக்கு அடிமையாய் இருப்பார்கள், உடனடி அங்கீகாரத்துக்கும் புகழ்ச்சிக்கும் பெருவிருப்பு கொண்டிருப்பார்கள். உலகின் எல்லா விஷயங்களையும் சமூக வலைதளத்துக்குள் கண்டெடுத்துவிட முடியும் என நினைப்பார்கள். நுகர்வுக்கு அடிமையாகி இருப்பார்கள். எதிலும் மிக எளிதாகச் சலிப்படைந்துவிடுவார்கள். வாழ்வையே சாகசமாக அணுகுபவர்கள். தன்னிலையில் இருந்து மட்டுமே மொத்தத்தையும் சிந்திப்பார்கள்.
கிட்டத்தட்ட நல்லவையாகவும் ஆர்வமூட்டுபவையாகவும் தோன்றினாலும் இவற்றுள் பல சமூக பொருளாதார சிக்கல்கள் ஒளிந்துள்ளன. அதுவும் நிலப்பிரபுத்துவ மனநிலை மற்றும் சூழலில் வளர்ந்த நமக்கு அதிகமாகவே சிக்கல்கள் இருக்கின்றன.
வெளிப்படையாகத் தெரியக்கூடும் முதல் சிக்கலில் இருந்து தொடங்குவோம்.
மிகவும் அருவருப்பான, காரியம் ஆவதற்கு மட்டுமே என, ஒரு புன்னகையை எல்லா நேரங்களிலும் சுமந்து கொண்டிருப்பார்கள். எல்லா இடங்களிலும் தன்னை முன்னிறுத்துவதற்கு படாத பாடு படுவார்கள். அக்காலத்தில் கற்றுத் தெளிந்து அடையும் செருக்கை, கற்கத் தொடங்கும்போதே அணிந்து கொள்வார்கள்.
கருவிலேயே திருவும் அறிவும் கொண்டிருந்தவர்கள் எனத் தங்களைத் தாங்களே நம்புவார்கள். முக்கியமாக மனிதர்களை, அவன் எத்தகையவனாக இருந்தாலும் தனக்கான வாய்ப்பாக மட்டுமே பார்ப்பார்கள். தான் ஏறவிருக்கும் ஏணியில் அவனை எப்படி படிக்கட்டாக்குவது என்பது மட்டுமே அவர்களின் சிந்தனையாக இருக்கும்.
இந்த வகையிலான வாழ்க்கை மற்றும் சிந்தனை முறை முன்னிருக்கவில்லையா எனக் கேட்டால், இருந்திருக்கிறது. எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறது. அவற்றுக்கு பிழைப்புவாதம், சுய தம்பட்டம், அகங்காரம் என்றெல்லாம் நாம் பெயர் சூட்டியிருக்கிறோம். அத்தகையானோர் குறைந்த சதவிகிதத்துக்கு இருந்தார்கள். காரணம், அவர்களை சமூகம் அப்போது நல்லுதாரணங்களாகக் கொண்டதில்லை.
இந்தத் தலைமுறைக்கு எந்தக் காலத்தையும் விட அறிவு என்பது விரல் நுனியில் இருக்கிறது. எலியின் ஒரு க்ளிக்கில், ஒரு ஸ்க்ரீன் இழுவையில் இருக்கிறது. அவற்றை எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். சந்தேகமே இல்லை. ஆனால் அந்த அறிவை, அந்த கற்றலை கொஞ்சமேனும் ப்ராசஸ் செய்கிறார்களா எனக் கேட்டால், இல்லை என்பதே பதில்.
அறிவுக்கும் வளர்ச்சிக்குமான பாதைக்கு இயல்பாக கற்று, விவாதித்து, திருத்தி, உணர்ந்து, வாழ்ந்து பின் போதிப்பது என்பதே முறைமையாக இருந்திருக்கிறது. ஒரு தகவலை நாம் process செய்தால் மட்டுமே அதை synthesise செய்ய முடியுமென்கிறது அறிவியல். ஆனால் நம் மில்லென்னியல்கள் அறிவியலையே லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திறமை படைத்தவர்கள் என்பதால், நாம் சொல்வதைப் பொருட்படுத்த மாட்டார்கள். அட, பெரியாரின் அறிவுத் தேடல் பாணியே அப்படி இருந்ததுதானே! அதனால்தானே அது பகுத்தறிவு!
ஒரு விஷயம் கற்கப்பட வேண்டுமென்பதற்கு அடிப்படைக் காரணமே அதை அலசி ஆராய்ந்து புரிந்து சரி தவறு தெரிந்து சரியை பின்பற்ற வேண்டுமென்பதுதான். ‘எதையும் செய்ய மாட்டேன்... வெறுமனே அடையாளத்துக்கும் புகழுக்கும் மட்டும் பயன்படுத்துவேன்’ என்றால் அதற்குப் பெயரே பிழைப்புவாதம். தன்முனைப்பு. எல்லாம்.
மார்க்ஸ்ஸின் வழியில் சொல்வதெனில், நிலப்பிரபுத்துவ குழு முறைகளை முதலாளித்துவம் உடைத்து உங்களை வெளியேற்றியது. குறைந்தபட்சம் போன தலைமுறையில் இருந்த அளவுக்கான அணுக்கம் குழு முறைகளுடன் இவர்களுக்கு இருக்கவில்லை. தனி வாழ்க்கை, தனி விருப்பம், தனி அனுபவம், தனிமை போன்ற வார்த்தைகளே மில்லென்னியல்களுக்கு பிடித்த வார்த்தைகள். அந்த வார்த்தைகளே அவர்களுக்கு விருப்பமாகவும் பிரச்சினையாகவும் இருக்கும் முரணை இயல்பாகக் காணலாம். சோகத்தின் உச்சம் என்னவென்றால் அந்த முரணை அவர்களும் உணர்ந்தே இருப்பார்கள்.
மில்லென்னியல்களின் காதல் வகை உறவுகள் யாவுமே பெரும்பாலும் ‘நான் தூக்கி வளர்த்த துயரம் நீ’ என்கிற பாணியிலேயே இருக்கும். காதலை ஒரு பாணியில் விரும்புவார்கள். அந்த பாணி அவர்களின் பாணியாக மட்டுமே இருக்கவேண்டும். அடுத்தவரின் பாணியில் இருந்தால் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். குறைந்தபட்சம் அந்த அடுத்தவரின் பாணியுடன் தன் பாணி ஒத்துப்போகும் மையப்புள்ளியை கண்டுபிடிக்கும் முயற்சியைக் கூட எடுக்க மாட்டார்கள். பிறகு, தனிமையில் உழல்வதாகப் புலம்புவார்கள்.
The very basic idea of love, that it should be mutual என்பது தெரிந்தாலும் தவிர்த்துக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் அது கொடுக்கும் துயரத்தையும் வெறுமையையும் ரசிப்பார்கள். அதாவது காதலிக்க விரும்புவார்கள். காதலிக்கும்போது அது உடைய வேண்டுமென தீவிரமாக வேலை பார்ப்பார்கள். பிரிந்த பிறகு தனிமையில் உருகுவார்கள்.
பணியிடம், தொழில் என்றெல்லாம் வந்தால் எந்தவித தயக்கமுமின்றி கழுத்தை அறுத்துவிட்டு பல்லைக் காட்டும் மகோன்னதத்தைக் கொண்டிருப்பார்கள். தலைமையில் இருப்பவரிடம் மட்டுமே அண்டி தன் வாழ்க்கையை உயரத்துக்குக் கொண்டு வந்திட விரும்புவார்கள். அவர்களைச் சுற்றி இருக்கும் சக பணியாளர்களைப் பற்றி எந்த பொருட்டுமே இருக்காது. அவர் எவரெனினும். அறிவைக் கொண்டு சொந்த உழைப்பில் முன்னேறுவது என்பதெல்லாம் அகராதியிலேயே இருக்காது.
பயணம் செல்வார்கள். ஆனால் மக்களுடன் புழங்க மாட்டார்கள். பறவை, மரம், ஆறு என ஒரு தனித்த தன்மை வாய்ந்த நபராக மட்டுமே தங்களை காட்ட முயலுவார்கள். அந்தப் பயணங்கள் யாவும் சமூக தளங்களிலும் வாட்சப் ஸ்டேட்டஸ்களிலும் நிரம்பியிருக்கும். ‘நான் இந்தப் பகுதிக்குச் சென்றேன்’ என அறிவிப்பதே அவர்களுக்கு முக்கியமாக இருக்கும். அந்த பகுதியில் இருத்தல் அல்ல!
அடிப்படையான எல்லா மில்லென்னியல்களிடமும் ‘நான்’ என்கிற முன்னிறுத்தலும் முனைப்பும் ‘தனியாகுதல்’ தன்மையும் இருக்கும். ஆங்கிலத்தில் individualism என்போம். தமிழில் தனிமனிதவாதம் என்போம்.
தனிமனிதவாதம் என்பது முதலாளித்துவத்தின் பொறி. 90களில் இந்தியாவுக்குள் நுழைந்த உளவியல். ‘உன்னால் மட்டும்தான் முடியும்’, ‘எவரைப் பற்றியும் கவலைப்படாதே’, ‘உன் வாழ்க்கை உன் கையில்’, ‘Survival of the fittest' என்கிற கோஷங்களின் பிள்ளைகள் இந்த மில்லென்னியல்கள் என்பவர்கள். மனித குலத்தின் அடிப்படை பரிணாமமான குழு வாழ்வியலையே மறுப்பவர்கள். இவையெல்லாம் ஒரு உற்பத்தி உறவின் விளைவுகள்தானே? தனி நபர்களை குற்றம் கூறலாமா என கேட்கலாம்.
உற்பத்தி உறவு என்பது பூடகமான விஷயம். அதை முன்னிறுத்துபவர்களைக் கொண்டே அந்த விஷயத்தை அடையாளப்படுத்த முடியும். அவர்கள் ஒரு சித்தாந்தத்தின் foot soldiers. சங்கிகளோடு ஒப்பிடக் கூடாதெனினும் சங்கிகளுக்கு உண்டான சகல விஷயங்களையும் கொண்டவர்கள் இந்த மில்லென்னியல்கள்.
சங்கிகளுக்கு தாம் ஏன் ஆரியத்தை தூக்கிச் சுமக்கிறோம் என்பதே தெரியாது. அந்த அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பார்கள். மில்லென்னியல்களும் தங்களின் வாழ்க்கை முறையென தேர்வு செய்திருப்பதே ஒரு சித்தாந்தத்தைதான். அந்த வாழ்க்கை முறை அவர்களை ஒரு மிகப்பெரும் மனச்சிதைவுக்கு கொண்டு போய்க்கொண்டிருந்தாலும் அதை விட்டு வெளியே வர மறுப்பார்கள். காரணம், அவர்கள் கொண்ட தன்முனைப்பு, தனிமனிதவாதம்!
பரிணாம வெள்ளப்போக்கில் நாம் நிச்சயமாக பின்னோக்கிச் சென்று பழைய சமூகத்தின் குழு முறைகளைக் கொள்ள முடியாது. கொள்ளவும் கூடாது. அந்த முயற்சிகள் அனைத்தையும் அடித்து உடைத்துச் செல்வதே இயக்கவியல்! எல்லாக் காலங்களிலுமே மனித பரிணாமத்தின் இருப்புக்கு அடிப்படைத் தேவையாக இருந்தது குழு வாழ்க்கைமுறை என்ற புரிதல் மட்டுமே நாம் வேண்டுவதெல்லாம்.
மனிதன் உருவானதில் குழு வாழ்க்கை முறைக்கு பங்களிப்பு இருந்தது. பொதுவாக உயிர்கள் எவை எனினும் குழுவாயிருத்தலே பாதுகாப்பு. வாழ்வு. வாழ்வின் நீட்சி எல்லாமும். தனியாக இருக்கும் எதுவும் நீடிக்க முடியாது. குழு வாழ்முறைக்கு தனிமனிதவாதம் உவப்பு கிடையாது.
MP3 கேசட்டிலிருந்து சடாரென மொபைல் இசைக்கு தாவும் தொழில்நுட்பத்தின் வேகத்தில் வாழ்க்கையிலும் தாவித்தாவி ஓடிக் கொண்டிருக்கும் மில்லென்னியல்களின் புரிதலின்மையை பார்க்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது. அவர்கள் சத்தமில்லாமல் இச்சமூகத்துக்கு தேவையான தீங்குகளை அவர்களறியாமல் அனுதினமும் இழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். முதலாளித்துவ உற்பத்தி உறவின் கண்ணிகளாக அவர்களே நின்று செயல்படுகிறார்கள்.
90களுக்குப் பின் பிறந்த எல்லோருமே மில்லென்னியல்களா?
கிடையாது. 90களுக்குப் பின்னான உலகமயமாக்கலை நேரடியாக நின்று பார்த்து அனுபவித்து வளருபவர்களே மில்லென்னியல்கள். இன்றும் இவை எதுவும் தெரியாமல் ஊரில் சாதியைப் பிடித்து அரிவாளை தூக்கிக் கொண்டு ஓடும் இளைஞன் இருக்கிறான். அவன் நிலப்பிரபுத்துவத்தை அடையாளப்படுத்துபவன். அதே போல மில்லென்னியல் என்பவன் முதலாளித்துவத்தை அடையாளப்படுத்துபவன் ஆகிறான்.
நிர்மலா சொல்வது நிச்சயம் உண்மை அல்ல. ஏனெனில் மில்லென்னியல்களுக்கு ஓலா, ஊபர் தேவையே இல்லை. தேவைப்பட்டால் மனிதனின் முதுகில் கூட சவாரி செய்து செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடுவார்கள்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்