உணர்வோசை
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தையைக் கொன்ற 3 மகள்கள் : விடுவிக்கக் கோரி போராடும் லட்சக்கணக்கான மக்கள்
பெண்கள் மீது வன்முறை ஏவப்படும் போது, அவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள நடத்தப்படும் தற்காப்புத் தாக்குதல் குற்றமாகாது. சமீபத்தில் வெளியான அஜித் நடித்திருந்த ‘நேர்கொண்ட பார்வை ’ என்கிற தமிழ் சினிமா இதையே வலியுறுத்தி இருந்தது. இதேபோன்று ஒரு சம்பவம் ரஷ்யாவிலும் சமீபத்தில் நிகழ்ந்து உள்ளது.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசித்துவந்தவர் மிகெய்ல் கச்சதுர்யன். 57 வயதான இவர், மாஸ்கோவின் மிகப்பெரிய செல்வந்தர் என்றும் மாபியா கும்பல் தலைவன் என்றும் அறியப்பட்டவர்.
இவருடைய மனைவி அவ்ரெலியா. இவர்களுக்கு 3 மகள்கள். கிறிஸ்டினா, ஏஞ்சலினா, மரியா என மூவருக்கும் முறையே 19,18,17 வயதுடையவர்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கச்சதுர்யன் கொடுமை தாங்க முடியாமல் மனைவி அவ்ரெலியா வீட்டை விட்டு வெளியேறித் தனியே வசிக்கத் தொடங்கி விட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது சொந்த மகள்களை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார் கச்சதுர்யன். தனது மகள்கள் யாரிடமும் பேசக்கூடாது, குறிப்பாக உறவினர்களைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறியவுடன் தனது மகள்களான கிறிஸ்டினா, ஏஞ்சலினா ஆகியோரைப் பலாத்காரம் செய்துள்ளார்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாய்… தனது சொந்த மகள்களையே பலவந்தப்படுத்திய காமுகனின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. மூன்று பெண்களும் கடுமையான துயரை அனுபவித்து வந்தனர். தங்கள் தாயாரிடம் கூட இதைச் சொல்ல முடியவில்லை.
வகுப்புத் தோழிகளிடம் தங்களுக்கு நேரும் கொடுமை குறித்துச் சொல்லிக் கதறியிருக்கிறார்கள். போலீசிடம் போகலாமா என ஆலோசனை செய்திருக்கிறார்கள். அதில் சிலர், சமூகத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி கச்சதுரியன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வார் என்று சில தோழிகள் கூறியிருக்கின்றனர். இதனால் மூவரும் போலீசுக்கு செல்லும் முடிவை கைவிட்டு தொடர்ந்து கொடுமையை அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள், தன் அறையைச் சுத்தம் செய்யவேண்டும் என்று ஒவ்வொரு மகளையும் தனித்தனியே அழைத்து அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே எனப்படும் மிளகுபொடியை அடித்து இருக்கிறார். மிளகு பொடியின் எரிச்சல் தாங்காமல் ஒவ்வொருவரும் துடித்துத்துள்ளனர். தட்டிக்கேட்ட மூத்த மகள் கிறிஸ்டினாவை சகட்டு மேனிக்கு தாக்கியிருக்கிறார் கச்சதுரியன்.
மூவரும் காயங்களுடன் தங்கள் அறைக்குத் திரும்பி கட்டிப்பிடித்துக் கதறிக் கொண்டே திட்டம் ஒன்றைத் தீட்டி இருக்கிறார்கள்.
அது என்ன திட்டம்? கொடூரத்தந்தை கச்சதுரியனை கொலை செய்தால்தான் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று முடிவு எடுத்தனர் சகோதரிகள். இரவில் மதுபோதையுடன் உறங்கச் சென்ற கச்சதுரியன் நன்றாகத் தூங்கிவிட்டாரா என்று சோதித்து விட்டு மூவரும் அறைக்குள் நுழைந்துள்ளனர்.
தங்கள் கொலைத் திட்டத்தைச் செயல்படுத்த சமையல் அறையில் இருந்த கத்தி, சுத்தியல் போன்ற ஆயுதங்களுடன் கத்ததுரியனை நெருங்கி தொடர்ச்சியாக 30 முறை கத்தியால் குத்தியும், சுத்தியால் அடித்தும் படுகொலை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களாகவே போலீசுக்கு போன் செய்து சரண் அடைந்துள்ளனர். போலீசார் மூவரையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். கடந்த ஓராண்டாக இந்த வழக்கின் அடிப்படை விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பெண்களுக்கு எட்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.ஆனால், தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே, 3 பெண்களும் இந்த செயலை செய்தார்கள் என்று சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்களின் தாயாரும் தனது மகள்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
ரஷ்யாவின் பிரபல வழக்கறிஞர்களும், சமூக ஆதரவாளர்களும் கூறுகையில், சமீபத்திய ஆண்டுகளில் குடும்ப வன்முறைக்கான தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களுக்கு மோசமான சட்டப் பாதுகாப்பை சுட்டிக்காட்டி, இளைஞர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
சிறைத் தண்டனைக்கு பதிலாக, சகோதரிகள் உளவியல் மறுவாழ்வு பெற வேண்டும் என்று பெண்களின் உரிமைக்கான அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
3 இளம் பெண்களுக்கும் ஆதரவாக ரஷ்யாவில் தொடர்ச்சியான பேரணிகள், அரசின் கவனத்தை ஈர்க்கும் நாடகங்கள் போன்றவற்றை சமூக ஆர்வலர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தப் பெண்களுக்காகக் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆதரவு பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணியில் இசைக்குழுவினர் பாடல்கள் இசைத்து ஆதரவு திரட்டினர். நன்கொடைகள் மற்றும் டி-ஷர்ட் விற்பனை மூலம் பார்வையாளர்கள் 176,600 ரூபிள்கள் சகோதரிகளின் பாதுகாப்பு நிதியாக திரட்டினர்.
ரஷ்யா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் குறிப்பாக, நியூயார்க்கிலிருந்து பெர்லின், வான்கூவர் முதல் யெரெவன், லண்டன் முதல் புவெனஸ் எயர்ஸ் என ரஷ்ய தூதரகங்கள் முன்பாக மூன்று சகோதரிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
3 சகோதரிகளின் வழக்கு விவகாரம் தற்போது ரஷ்ய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் செய்தித் தொடர்பாளர் ருஸ்லான் ஷேவர்டினோவ் 3 சகோதரிகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.
3 லட்சத்திற்குக்கும் அதிகமானோர் சகோதரிகளை விடுவிப்பதற்கான இணையதள மனுவில் கையெழுத்திட்டுள்ளனர் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே சிறிய போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கிய 3 சகோதரிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ரஷ்யாவில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. வீட்டுச்சிறையில் உள்ள மூன்று பேரும், நரகத்தில் இருந்து நாங்கள் தப்பித்துள்ளோம். சிறையைவிட கொடுமையானது அது என்கின்றனர். இந்த சகோதரிகளின் விடுதலையை ஏராளமானோர் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், வழக்கின் முழு விசாரணை இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, ரஷ்யா ‘நேர்கொண்ட பார்வை’யுடன் 3 சகோதரிகளின் வழக்கை அணுகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!