உணர்வோசை

பாசிசமும், எமர்ஜென்சி நிலையும் ஒருசேர உருக்குலைத்த காஷ்மீர் - பத்திரிகையாளர்களின் ‘திகில்’ அனுபவங்கள் !

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 4ம் தேதியில் இருந்தே ஜம்மு காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பின்னர் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எந்த ஒரு தொலைத்தொடர்பு வசதியும் இல்லாமல், அவரசத்திற்கு எந்த உதவியையும் நாடமுடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆனால், மத்திய அரசோ காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என்றும், செல்போன், இணையம், கேபிள் போன்ற சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறிவருகிறது.

இன்றளவும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுச் சிறையில் அடைபட்டும், காஷ்மீர் மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகள் போலவும் இருந்து வருகின்றனர். காஷ்மீர் எதிர்கட்சித் தலைவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை சந்திக்க டெல்லியில் இருந்து சென்ற சில கட்சித்தலைவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீர் மக்கள் வெளிமாநிலங்களில் உள்ள தங்களது உறவினர்களிடம் பேசுவதற்காக ஸ்ரீநகரில் உள்ள போலிஸ் துணை ஆணையர் அலுவலகத்தில் பொது தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர செய்திகளை மட்டுமே மக்கள் தெரியப்படுத்திக் கொள்ளமுடியும் எனவும் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது.

இது இப்படி இருக்க, காஷ்மீரில் பத்திரிகைகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல பத்திரிகைகள் முடக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட் சேவை இல்லாததால் காஷ்மீரில் மக்கள் படும்பாடு குறித்து செய்தி அனுப்ப செய்தியாளர்கள் திண்டாடி வருகின்றனர்.

இதைத்தான் மோடி அரசின் ‘தகவல் முற்றுகை’ என்று மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பத்திரிகையாளர்களின் செயல்பாடு, ஊடகங்களின் நிலை இவற்றை பற்றி களஆய்வு செய்து , நியூஸ் லாண்டரி இணைய இதழின் ஆசிரியரும், இளம் பத்திரிகையாளருமான ஆயுஷ் திவாரி பரபரப்பான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.

இந்த கட்டுரையில் காஷ்மீரில் ஊடகங்களின் நிலை, தகவல் முற்றுகையை அங்குள்ள ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றை விலாவரியாக எழுதிள்ளார். பல்வேறு சுவாரசியமான தகவல்களையும், அதிர்ச்சிகரமான அனுபவங்களையும் கொண்டுள்ள ஆயுஷ் திவாரியின் ஆங்கில கட்டுரையின் சாரம்சம் வருமாறு...

காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கிருந்து தகவல்களை அளிப்பது எளிதானது அல்ல, குறிப்பாக காஷ்மீருக்கு வெளியில் இருந்து வந்த ஒரு நிருபருக்கு அவமதிப்பு ஏற்படுவது காஷ்மீரைப் பொறுத்தவரை சடங்காகிவிட்டது. காஷ்மீரின் தலைநகரில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்திய ஊடகவியலாளர்களை, "பிரச்சாரகர்கள்", "காரியவாதிகள்" மற்றும் "விலை பேசக்கூடியவர்கள்" என்று வாழ்த்துமழை பொழிந்து அழைக்கிறார்கள்.

காஷ்மீர் மக்கள், இந்திய ஊடகவியலாளர்களை பார்த்து பணிவுடன் சொல்வது இதுதான். "நாங்கள் உங்களுடன் பேசுவோம், ஆனால் நீங்கள் எங்கள் பக்கத்தை சொல்ல மாட்டீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்".

காஷ்மீர்வாசி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு இரண்டு எதிரிகள் உள்ளனர். மோடி அரசு மற்றும் இந்திய ஊடகங்கள். முதலாவது எங்கள் வாழ்க்கையை நரகமாக்குகிறது, அடுத்தது இங்கு எல்லாம் இயல்பாக இருக்கிறது என்று சொல்லி வருகிறது” என்றார் காட்டமாக.

இந்திய ஊடகங்களைப் பற்றி காஷ்மீரிகள் இவ்வாறு புரிந்து கொண்டிருக்கும் நிலையிலும் கூட வெளியூர் மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கில் தகவல் முற்றுகையையும் தவிடுபொடியாக்கி விட்டு செய்திகளை அளித்து வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் 5 முதல், காஷ்மீரில் தொலைபேசிகள் மற்றும் செல்பேசிகள் இயங்கவில்லை.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய அரசு ஊடக இயக்கத்தை கட்டுப்படுத்தி வைத்துள்ளது என்பதை இங்குள்ள ஊடகவியலாளர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார்கள். இதற்கு முன் தகவல்களைச் சேகரிப்பதற்கும் அனுப்புவதற்கும் ஒருபோதும் மோசமாக இருந்ததில்லை என்று இந்துஸ்தான் டைம்ஸின் ஸ்ரீநகர் பணியகத் தலைவர் மிர் எஹ்சன் கூறுகிறார், அவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரில் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார்.

இருப்பினும், இங்குள்ள ஊடகவியலாளர்கள் தகவல் முற்றுகையில் இருந்து தப்பித்து தங்கள் செய்திகளை அனுப்ப ஒரு வழியைக் கண்டறிந்துள்ளனர். காஷ்மீரில் நடக்கும் தகவல்களை சேகரித்து, அவற்றை வேகவேகமாக தட்டச்சு செய்து அதை தங்கள் பென் டிரைவில் மாற்றி டெல்லிக்கு செல்லும் பயணிகள் மூலம் தங்கள் ஊடக அலுவலகங்களுக்கு கொடுத்து அனுப்புகின்றனர். இதுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ‘பென்டிரைவ் ஊடகவியல்’.

வயர் செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் முக்தர் பாபா கூறுகையில், “நாங்கள் கற்காலத்திற்கு திரும்பி வருகிறோம். நாங்கள் எங்கள் குடும்பங்கள், எங்கள் நண்பர்கள் மற்றும் எங்கள் சகாக்களுடன் தொடர்பு கொள்ளவில்லை. நான் உயிருடன் இருக்கிறேனா என்று அவர்களுக்குத் தெரியாது, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது ” என்கிறார்.

பத்திரிகையாளராக பணியாற்றும் முக்தர், “இதுபோன்ற நிலை ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். 1990 களில் மோசமான நிலை ஏற்பட்டபோது கூட தொலைபேசிகள் வேலைசெய்து வந்தன” என்கிறார் முக்தர்.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஈடிவி பாரத்தின் ஸ்ரீநகர் பணியகத் தலைவர் முகமது சுல்கர்னைன் கூறுகையில், “தனது குழுவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது ஒரு கவலையான மர்மமாகவே உள்ளது. எனக்கு கீழ் 25 நிருபர்கள் உள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள ஆறு பேருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். ஆனால் எனது மாவட்ட நிருபர்களின் தலைவிதி எனக்குத் தெரியாது. அவை பாரமுல்லா, அனந்த்நாக், புல்வாமா மற்றும் சோப்பூர் ஆகிய இடங்களில் பரவியுள்ளன. அங்கே என்ன நடக்கிறது என்பது கடவுளுக்குத் தெரியும் ” என்றார்.

காஷ்மீர் உள்ளூர் பத்திரிகையாளர்களின் நிலை மோசமாக உள்ளது. ஸ்ரீநகரில், திடீரென முளைத்துள்ள துணை ராணுவ சோதனைச் சாவடிகளை கடக்க அவர்கள் பொய் சொல்ல வேண்டும். ஒருவர் பத்திரிகையாளர் என்று சொல்வது நல்ல பதில் அல்ல. "உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் உறவினர் நான்" என்று கூறி தான் சோதனைச் சாவடிகளை அவர் கடக்க வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் சோதனைச் சாவடிகளின் இயக்கத்தின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் தான் அங்குள்ள பத்திரிகையாளர்கள் தகவல்களை சேகரித்து அனுப்புகிறார்கள்.

ஸ்ரீநகரில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் பத்திரிகையாளர் பஷாரத் மசூத் கூறுகையில், "நாங்கள் எங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறுகிறோம், ஆனால் நாங்கள் எப்போது திரும்புவோம் என்பது எங்களுக்குத் தெரியாது” என்கிறார்.

எழுத்தாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. ஒரு சாட்சியின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 11ம் தேதி, நான்கு பத்திரிகையாளர்கள் குழு ஸ்ரீநகரின் புறநகரில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் தளமான சவுராவுக்குச் சென்றது. அங்கு அவர்கள் சிறப்பு செயல்பாட்டுக் குழு பணியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பத்திரிகையாளர்கள் தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டிய பிறகும் கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒரு வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஊழியர்கள் ஒரு பத்திரிகையாளரை காலில் பல முறை தாக்கினர் என்று நேரில் கண்டவர் குற்றம் சாட்டினார். இந்த பத்திரிகையாளர் ஒரு சர்வதேச பத்திரிகையில் பணியாற்றி வருகிறார் எனக்கூறப்படுகிறது.

ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் பகுதியில் ஒரு தேசிய பத்திரிகை அலுவலகத்தில் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கூடி, நிலவும் சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கின்றனர்.

அங்கு ஒரு சோபா இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் தரையில் உட்கார்ந்து கொண்டு என்.டி.டி.வி, பி.பி.சி மற்றும் அல் ஜசீரா சேனல்களை மாற்றி, மாற்றி பார்த்து வருகின்றனர். அங்குள்ள ஒரு சிறிய அறையில் முட்டை, பால், பழம் மற்றும் கப் நூடுல்கள் சேமிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு சட்டத்தை சமாளிக்க இவை உதவுகின்றவாம்.

சஃப்வத் சர்கர் என்னும் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், ஸ்ரீநகரில் ஒசைப் அல்தாஃப் (வயது 17) எனும் சிறுவனின் மரணம் குறித்து செய்தி ஒன்றை அனுப்பினார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி கிரிக்கெட் விளையாடும் போது அல்தாஃப், சி.ஆர்.பி.எஃப் வீரர்களால் நெருக்கடிக்கு ஆளானதாக கூறப்படுகிறது, அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்று ஜீலம் நதியில் குதித்த போது நீரில் மூழ்கினார்.

ஊரடங்கு உத்தரவு போன்ற நிலைமையால், இந்த தகவல் நத்தை வேகத்தில் பயணித்து, 30 மணி நேரம் கழித்து ஆகஸ்ட் 6 மாலை பத்திரிகையாளர் சர்கரை அடைந்தது. அவர் தகவலை உறுதி செய்து, செய்தியை தட்டச்சு செய்து, பென் டிரைவில், ஆகஸ்ட் 7ந் தேதி அன்று டெல்லிக்குச் சென்ற ஒரு பத்திரிகையாளரிடம் ஒப்படைத்தார். “ஆனால், அந்த செய்தி வெளியிடப்பட்டதா என்று தனக்கு தெரியவில்லை ”என்கிறார் சர்கர்.

உள்ளூர் பத்திரிகையாளர்கள் தற்போது ஏகப்பட்ட கெடுபிடிகளை சந்தித்து வருகின்றனர். "நான் இங்கு 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன், அவர்கள் எனக்கு பாஸ் வழங்க மறுப்பது இதுவே முதல் முறை" என்று இந்துஸ்தான் டைம்ஸின் எஹ்சன் கூறுகிறார்.

தி ட்ரிப்யூனின் நிருபரும் காஷ்மீர் பிரஸ் கிளப்பின் பொதுச் செயலாளருமான இஷ்பாக் தாந்த்ரி, ஒரு நாள் பாஸ் பெறுவதற்காக பிரதேச ஆணையாளரை சந்தித்ததாகக் கூறுகிறார். "அவர்கள் என்னை அவருடைய அலுவலகத்திற்கு வெளியே கிட்டத்தட்ட அரை மணி நேரம் காத்திருக்கச் செய்தனர். நான் பொறுமையிழந்து விட்டுவிட்டேன். இது ஒரு முழுமையான தகவல் முற்றுகை. பிரஸ் கிளப்பில் இணைய இணைப்பும் முறிந்துவிட்டது. அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கும் ஒரே சேவை கேண்டீன்” என்கிறார் தாந்த்ரி.

முக்தர் பாபா என்னும் பத்திரிகையாளர் கூறுகையில், "பத்திரிகையாளர்கள் மீது இங்குள்ள அதிகாரிகளுக்கு எப்போதுமே ஒரு கருப்பு- வெள்ளை அணுகுமுறை உள்ளது" என்றார். மேலும் அவர் கூறுகையில், “நீங்கள் காஷ்மீருக்கு வெளியில் இருந்து வந்தால், அவர்கள் உங்களை இந்தியராகப் பார்க்கிறார்கள், உங்களை அதிகம் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதற்கு மேல் நீங்கள் இந்துவாக இருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். கடவுளால் நீங்கள் ஒரு உள்ளூர் பத்திரிகையாளராக இருந்தால், அதுவும் ஒரு காஷ்மீர் முஸ்லீமாக இருந்தால், அதுவும் உங்களை இரண்டாம் தர குடிமகனாகவே கருதுவார்கள்”என்றார்.

370 ரத்து செய்யப்பட்டதில் ஸ்ரீநகரில் மக்கள் மகிழ்ச்சியடைவதாகக் கூறும் ஊடக அறிக்கைகள் பத்திரிகையாளர் வட்டாரங்களில் இழிவாக சிரிக்கப்படுகின்றன. "இது மொத்த பங்கம்" என்று ஒரு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறினார்.

“நான் பல ஆண்டுகளாக இங்கிருந்து பணியாற்றி வருகிறேன், காஷ்மீர் மக்களின் நிலையை பக்கம் பக்கமாக செய்தியாக அனுப்பியுள்ளேன். அரசின் இந்த முடிவில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. இவர்களுக்கு காஷ்மீரை பற்றித் தெரியாது ” என்றார் அந்த மூத்த பத்திரிகையாளர்.

ஸ்ரீநகரைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்செய்தியாளர், ரிஃபாத்தின் கூறுகையில், ஒரு பெண் நிருபராக இருப்பது இந்த நேரத்தில் அதன் நன்மை தீமைகளைக் கொண்டுள்ளது. செய்தியாளர்களைப் பொறுத்தவரை, இங்கே நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. முதல் நாளில், பல இடங்களில் என்னை படைகள் தடுத்து நிறுத்தி, நான் ஒரு பத்திரிகையாளர் என்று சொன்னபோதும் திரும்பிச் செல்லும்படி கூறினர். பத்திரிகையாளர்களின் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை என்ற உத்தரவு இருப்பதாக அவர்கள் கூறினர். எனவே நான் மற்ற இடங்களில் பொய் சொல்ல வேண்டியிருந்தது. நான் ஒரு நோயாளியைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னேன். இதன்பின்னர் நான் அந்த இடத்தை கடக்க அனுமதி தந்தார்கள்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “செய்தியாளர்களில் பலர் தங்கள் குடும்பங்களுடன் தொடர்பில் இல்லை. நாங்கள் அனுப்பும் செய்திகள் வெளியிடப்பட்டதா? என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், ஆனால் எங்கள் கைகள் பிணைக்கப்பட்டுள்ளன ” என்றார்.

காஷ்மீரில் 12 ஆண்டுகளாக வெளிவரும் பத்திரிகை ரைசிங் காஷ்மீர். அதிக அளவில் விநியோகிக்கப்படும் இந்த பத்திரிகை 16 முதல் 18 பக்கங்கள் வரை வெளிவரும். ஆனால், கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் முறையாக வெறும் நான்கு பக்கங்களுடன் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீநகரின் பிரஸ் காலனியில் உள்ள ரைசிங் காஷ்மீர் அலுவலகத்தில், ஆசிரியர்கள், நிருபர்கள் மற்றும் சில பார்வையாளர்கள் ஆறு கணினிகளுடன் ஒரு சிறிய அறைக்குள் நெரிசலில் உள்ளனர். செய்தித்தாள்களின் அடுக்குகள் ஒரு மூலையில் இருக்கின்றன. ஒரு சிறுகுழுவாக இந்த பத்திரிக்கை இயங்கி வருகிறது.

2008 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் காஷ்மீரின் நிலைமை மோசமாக இருந்தது என்றும், ஆனால் அப்போதும், பத்திரிகையின் பக்கங்கள் நான்கு பக்கங்களாகக் குறையவில்லை என்று ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் இணை ஆசிரியர் பைசல் யாசீன் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், “2016 இல், என்னால் எனது அலுவலகத்தை அடைய முடியவில்லை. ஆனால் நாங்கள் தொலைபேசிகள் மூலம் தகவல்களை சேகரித்தோம். இப்போது அதனையும் துண்டித்து விட்டார்கள். அப்போது, நாங்கள் பத்திரிகையை பிரிண்ட் செய்ய முடியவில்லை. ஆன்லைன் பத்திரிகையாக நடத்தினோம். இப்போது நிலைமை நேர்மாறாக உள்ளது. இணைய வசதி இல்லாததால், இப்போது ஆன் லைன் பத்திரிகையை கூட நடத்த முடியவில்லை” என்றார்.

முக்கியமான விஷயங்களில் அரசின் நிலைப்பாடு குறித்த தகவல் கூட எங்களது செய்தி அறைக்கு வரவில்லை என்றும், தொலைக்காட்சி செய்தி சேனல்களில் வரும் தகவல்களை நம்பி நிருபர்கள் பெரும்பாலும் தகவல்களை அளிக்க செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது என்கிறார் அவர்.

மேலும், அவர் கூறுகையில் , “நாங்கள் மாநிலங்களவையில் அமித் ஷாவின் உரையை பிரசுரிக்க விரும்பினோம், ஆனால் அதைப்பற்றிய விவரம் எங்களுக்குத் தெரியவில்லை. நான் இறுதியாக ஒரு நிருபரிடம் என்.டி.டி.வி.யில் அமித் ஷா உரையைப் பார்த்து அதை படியெடுக்கச் சொன்னேன். எனவே அடிப்படையில், உள்ளூர் விஷயங்களைப் பற்றி தகவல் அளிக்க ஒரு உள்ளூர் பத்திரிகை இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள சேனல்களை நம்ப வேண்டும் என்ற நிலை உள்ளது”என்றார்.

ஆகஸ்ட் 5 முதல் ஏதேனும் தணிக்கை அல்லது அழுத்தத்தை எதிர்கொள்கிறீர்களா என்று கேட்டபோது, “நிலைமை குறித்து குறைந்த அளவு தகவல்களே இருக்கும்போது, உங்களுக்கு ஏன் தணிக்கை தேவை?” என்று அதிரடியாக பதில் தந்தார்.

ஆகஸ்ட் 10 அன்று, ரைசிங் காஷ்மீர் முதல் பக்கத்தில் ஆறு பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பி.டி.ஐ) கதைகள் இருந்தன. இந்த புகழ் பென் டிரைவ் ஊடகவியலையேச் சாரும்.

“எனக்கு நேற்று டெல்லியில் இருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். அவர் சில பி.டி.ஐ பிரதிகளை தனது பென் ட்ரைவில் சேமித்து வைத்திருந்தார். அவர் அலுவலகத்திற்கு வந்து எங்களிடம் கொடுத்தார்” என்றார் யாசீன்.

காஷ்மீரில் இந்திய அரசாங்கத்தின் தகவல் முற்றுகை இருந்தபோதிலும், இப்பகுதியில் பத்திரிகைக்கு முழு நிறுத்தங்களும் இல்லை. தகவல் தந்திரோபாயமாக ஒடுக்கப்படுகிறது, ஆனால் அது ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு வகையில் செய்தி அறைகளை அடைகிறது.

இங்குள்ள பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் மற்ற ஊடகங்களின் செய்தி அறைகளில் ஒருவருக்கொருவர் உற்சாகத்தைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் உணவைப் பகிர்ந்து கொள்கிறார்கள், தகவல்களைப் பற்றி விவாதிக்கிறார்கள், பிரதிகள் எழுதுவதற்கு உதவுகிறார்கள், ஒன்றாக தகவல்களை அனுப்புகிறார்கள். மிக முக்கியமாக, பென் ட்ரைவ்களில் இருந்து எழுதப்பட்ட வார்த்தையை கடத்துகிறார்கள்.