உணர்வோசை
கிரிக்கெட்டின் அத்திவரதர், சச்சின் டெண்டுல்கர்! : தனி மனிதன் கார்ப்பரேட் அடையாளமாக மாறிப்போனதன் பின்னணி!
எனக்கு கிரிக்கெட் அறிமுகமான காலத்தில் சச்சின் டெண்டுல்கர் மட்டையைச் சுழற்றிக் கொண்டிருந்தார். சச்சினின் கிரிக்கெட் மட்டை சுழற்றும் விதமும் நின்று நிதானமாக விளையாடும் தோரணையும் அனைவருக்கும் ஒரு பெரும் நனவுச்சுவடு. உலகின் வெவ்வேறு நாடுகளுக்கு இந்திய அணி பயணித்து தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் அணிகளை வீழ்த்தி ஜெயிக்கும்போது இந்திய மக்கள் ஓவ்வொருவரும் தாங்களே ஜெயித்தது போல் கொண்டாடினர். குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதும்போது ஒரு போருக்கான சூழல் நிலவியதை எவரும் மறந்திருக்க முடியாது.
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டையும் வீரர்களையும் பற்றி பல மேற்கோள்கள் கூறியிருந்தாலும் அவருக்குமே சேர்த்து பொருந்துகிற முக்கியமான ஒரு மேற்கோள் உண்டு.
‘ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு முக்கியத்துவம் இருப்பதாக நம்புகிறேன். அதே முக்கியத்துவம் விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் கூட இருக்கிறது.’சச்சின் டெண்டுல்கர்
ஆம். எந்த விளையாட்டும் ஒரு சமூகத்தின் அரசியலையும் பொருளாதாரத்தையும் பிரதிபலித்தே இருக்க முடியும். பொதுப்புத்தி நினைப்பது போல் விளையாட்டு சமூகத்துக்கு வெளியே நிகழ்வது அல்ல. சமூகத்தின் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கியவையே விளையாட்டுகளும்.
1989ம் ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் அப்போது வேண்டுமானால் அவருடைய காலகட்டத்து முக்கியத்துவத்தை உணராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமூகத்தின் அரசியலும் பொருளாதாரமும் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தது. அடுத்த இரண்டு வருடங்களில் உலக மூலதனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயாராகிக் கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம் சச்சின் டெண்டுல்கரை தனக்கான தூதுவராக தத்தெடுத்துக் கொண்டது.
1990களில் இந்தியப் பொருளாதாரம் தாராளமயக் கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. பன்னாட்டு நிறுவனங்களின் வணிகம் பல வகைகளில் இந்தியாவுக்குள் நுழையத் தொடங்கியது. என்றுமே இல்லாத அளவுக்கு உலக அழகிப் போட்டிகள் கொண்டாடப்பட்டதும், ஐஸ்வர்யா ராய்க்கு சூட்டப்பட்ட கிரீடமும் இந்தியா உலக மூலதனத்துக்கு சூட்டிய கிரீடமாகவே இன்றைய அரசியல் புரிதல் பார்க்கிறது. ஒப்பனை பொருட்களின் சந்தைக்கு உலக அழகி போட்டிகள் எப்படி அடித்தளம் வகுத்தனவோ அதே போலவே எல்லா வித சந்தைகளுக்கும் கிரிக்கெட் விளையாட்டு அடித்தளங்கள் அமைத்துக் கொடுத்தது.
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆடியது மட்டுமல்லாமல் பெப்சி தொடங்கி தொலைக்காட்சி நிறுவனம் வரை எல்லா சந்தைப் பொருட்களுக்கும் விளம்பரத் தூதராக மாறினார். டெண்டுல்கரின் கிரிக்கெட் விளையாடும் திறமை மீது பன்னாட்டு நிறுவனங்கள் பந்தயம் கட்டின. பந்தயத்தில் வெற்றியும் பெற்றன. டெண்டுல்கர் புதுவகை இந்தியாவின் முகமாக மாறினார்.
நான் கிரிக்கெட் பார்த்த காலத்தில் டெண்டுல்கரும் அணியில் இருந்தார். பல முறை மிக துச்சமாக ஆட்டமிழந்திருக்கிறார். ஆனாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்கி விளம்பரங்கள் வரை டெண்டுல்கரே நிறைந்திருந்தார். அவர் பவுண்டரிகளை நோக்கி விளாசிய பந்துகள் பட்டு விழுந்த பதாகைகளை கண்டு நாம் ‘ஃபோரா, சிக்ஸரா’ என முடிவு செய்து கொண்டிருந்தோம். அந்தப் பதாகைகள் தாங்கிய நிறுவனங்களின் பெயர்கள் நாமறியாமலேயே நம் மனங்களுக்குள் இறங்கிக் கொண்டிருந்தன.
டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்த அதே காலத்தில்தான் அசாருதீனும் இருந்தார். ஜடேஜா இருந்தார். பின்னர் ட்ராவிட் வந்தார். ராபின் சிங் வந்தார். இன்னும் பல திறமையான வீரர்களும் அணியில் இருந்தனர். ஆனால் எவருக்கும் கிடைத்திடாத வெளிச்சமும் பேரும் டெண்டுல்கரை சுற்றியே சூல் கொண்டிருந்தது.
டெண்டுல்கர் மீதான பிரமை எந்தளவுக்கு ஊக்குவிக்கப்பட்டதெனில், பல திறமையான வீரர்கள் இருந்தும் டெண்டுல்கர் என்ற தனி மனிதனின் ஆட்டமிழப்பு மொத்த நாட்டையும் நம்பிக்கை இழக்கச் செய்யும் அளவுக்கு இருந்தது. ரசிகர்களுக்கு மட்டும் அந்த மனநிலை இருக்கவில்லை. டெண்டுல்கர் அவுட் ஆகிறாரென்றால், மொத்த அணியுமே கூட தன்னுடைய நம்பிக்கை இழக்கும் நிலையில் இருந்தது. சடசடவென பிற வீரர்களும் ஆட்டமிழந்து மொத்த அணியும் இரட்டை இலக்க ஸ்கோருடன் சுருண்ட கதையெல்லாம் நடந்தது.
டெண்டுல்கர் விற்ற டிவி, ஓட்டிய பைக், அமர்ந்த சோஃபா, பற்ற வைத்த அடுப்பு, உடுத்திய உடை, குடித்த குளிர்பானம், வாங்கிய வீடு என விளம்பரங்களில் தோன்றிய அனைத்தையும் நம் வீட்டில் நிறைத்து வைத்தோம். பயன்படுத்துகிறோமோ இல்லையோ வீட்டில் இருந்தன. மொத்த உலக மூலதனத்தையும் இந்தியாவுக்கும் நமக்கும் கொண்டு வந்து சேர்த்தது டெண்டுல்கர்தான் என கூறுவது அதிகம்தான் எனினும் தாராளமயத்துக்கான முதல் தூதுவராக இருந்ததென்னவோ டெண்டுல்கர்தான்.
ஒரே ஒரு டெண்டுல்கர் வீட்டு பொருட்களிலிருந்து, வாகனங்கள், குளிர்பானங்கள், உண்பண்டங்கள், உடை, சிகை வெட்டு வரை எல்லாவற்றையும் பயன்படுத்துவதைப் பார்த்து, நாமும் அபரிமிதமான பண்டங்களின் பயன்பாட்டுக்கு பழக்கப்பட்டோம். அதீத நுகர்வு வெறி வாழ்க்கையின் இயல்பான ஒரு அங்கமாக மாற்றப்பட்டது.
சச்சின் டெண்டுல்கரின் ஆளுமையில் மிக முக்கியமான இன்னொரு விஷயமும் நம்மைத் தொற்றியது. அமைதியாக தான் உண்டு, தன் வேலை மட்டுமே உண்டு என்கிற தனிமனிதவாதம் பரவலாக்கப்பட்டது. அணியோடு இயைந்து விளையாடுவது என்பது போய் தனி நபராக தன்னை முன்னிறுத்தும் போக்கு டெண்டுல்கரிடம் அதிகம். அதற்கு அவர் மட்டும் காரணம் அல்ல. ரசிகர்களாகிய நாமும்தான்.
சச்சின் டெண்டுல்கரை பற்றியும் அவரது கிரிக்கெட் பற்றியும் மிக அதிகமாக போற்றப்பட்டு அவரது பிம்பம் ஊதிப் பெருக்கப்பட்டதால், தன்னளவில் ஏதேனும் ஒரு சாதனையை ஒவ்வொரு ஆட்டத்திலும் நிகழ்த்திக் காட்டவேண்டிய கட்டாயத்துக்கு டெண்டுல்கர் தள்ளப்பட்டார். எதிர்பாராமல் சீக்கிரம் ஆட்டமிழந்துவிட்டால், ரசிகர்களான நாம் சும்மா இருந்துவிடவில்லை. அவரைக் குறை சொல்லி மட்டப்படுத்தி கீழ்த்தரமாகவெல்லாம் விமர்சித்தோம்.
அதுபோன்ற தொடர் விமர்சனங்கள் நம் பொதுப்புத்தியின் மனதுக்கு டெண்டுல்கர் மீதான எதிர்ப்புணர்வை உருவாக்கவல்லவை. ஆனால் அவை டெண்டுல்கரை முன்னிறுத்திய சந்தைகளுக்கு ஆபத்தானவை. அதனாலேயே அவர் பவுண்டரிகளையும், செஞ்சுரிகளும் விளாசி ஒவ்வொரு கிரிக்கெட் ஆட்டத்திலும் அசகாயத்தனத்தை நிரூபிக்க வேண்டியிருந்தது. எப்போதாவது இயல்பான ஒரு மனிதனாக அவர் சீக்கிரம் ஆட்டமிழந்தால் நாம் அவரை வீழ்த்தத் தயாராக நின்று கொண்டிருந்தோம்.
அணிக்குள் சேர்ந்து இயங்காத, அப்படி இயங்கினாலும் தன்னுடைய அடையாளத்தையும் பிரத்யேகமாக போற்றி முன்னிறுத்த வேண்டிய கட்டாய தனிமனிதவாதத்தை டெண்டுல்கருக்கு தாராளமயச் சந்தை நிர்ப்பந்தித்தது. அவரைப் பார்த்து வளர்ந்த நாமும் அதே தனிமனிதவாதத்தை எடுத்து நமக்குப் பூசிக் கொண்டோம்.
எந்த அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் பிற மனிதர்களுடன் ஒட்டாமல், காரியத்துக்கு மட்டும் பழகிக் கொண்டு, தனக்கான வேலை ஆவதில் மட்டும் தீவிரம் காட்டிக்கொண்டு, பிறருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் பொருட்படுத்தாமல், சரியான திறமைக்கு மதிப்பையும் கொடுக்காமல் முழுக்க முழுக்க நம்மை மட்டுமே ஆராதித்துக் கொள்ளும் நார்சிசிஸ்டுகளாக உருவாகியிருக்கிறோம்.
எல்லாப் பழியையும் டெண்டுல்கர் மீது போட்டு விடுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். டெண்டுல்கருக்கு திறமையில்லை என்றும் நாம் சொல்லிவிடவில்லை. நிச்சயமாக கிரிக்கெட் விளையாட்டுக்கான திறமை நிறைந்தவர்தான் சச்சின் டெண்டுல்கர்.
ஆனால் அந்தத் திறமையை நாம் கொண்டாடும் அளவுக்கு வந்தது மட்டுமல்லாமல் ஒரு mob hysteria அளவுக்கு மாறிப் போனதற்கு, அவர் மட்டும் காரணமல்ல; அவரின் திறமை மட்டுமேயும் காரணமல்ல. அவருக்குப் பின்னிருந்து அவரை இயக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வு மற்றும் மூலதனச் சந்தையே முழுமுதற் காரணம். டெண்டுல்கரின் காலத்துக்குப் பிறகு அச்சந்தைகள் வெவ்வேறு நபர்களை தத்தெடுத்துக் கொண்டன. அவற்றில் கடைசியானவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நம் தோனி.
மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் ஊரிலோ கல்லூரியிலோ பள்ளியிலோ சச்சினுக்கு நிகராகவோ அல்லது இன்றைய தோனிக்கு நிகராகவோ ஒரு கிரிக்கெட் வீரனைக் கூட நீங்கள் பார்த்ததில்லையா? நான் பார்த்திருக்கிறேன். பலர் இருக்கிறார்கள். அப்படி நீங்கள் பார்த்திருந்தால் அவர்கள் மேலே வராமல் போனதற்கு என்ன காரணம் என யோசித்துப் பாருங்கள். இந்தக் கட்டுரை புரியலாம்.
மூலதனச் சந்தைகளைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கரும் அத்திவரதரும் ஒன்றே. வணிகம் ஆக வேண்டும். லாபம் கிடைக்க வேண்டும். அவ்வளவுதான்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!