உணர்வோசை
10% இட ஒதுக்கீடு - குறிப்பிட்ட பிரிவினரின் நலனுக்காக சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி
மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான பத்து சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு எதிராக, தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது தமிழகம். சமூக நீதிக்கு எதிரான இந்த இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றும் செயல் என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஜூன் மாதம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின், கிளார்க் பதவிகளுக்கு நடத்தப்பட்ட முதநிலைத் தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை வெளியிட்டிருக்கிறது. அதில் மற்ற பிரிவினர்களுக்கும் கட் ஆஃப் அதிகமாகவும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாகவும் வழங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது இட ஒதுக்கீடு முறைக்கே அநீதி இழைக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் 8593 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில், மாநிலத்திற்கு மாநிலம் கட் ஆஃப் மதிப்பெண்கள் மாறுபடுகிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 421 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில் நேற்று வெளியிட்ட கட் ஆஃப் மதிப்பெண்களுக்கான பட்டியலில், தமிழகத்தில், பொதுப்பிரிவினருக்கு 61.25 மதிப்பெண்களும், ஓ.பி.சி., எஸ்.சி பிரிவினருக்கு 61.25 மதிப்பெண்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 53.75 சதவிகித மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 28.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது, நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்களை விட அதிகமாக மதிப்பெண்கள் எடுப்பவர்கள், தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
இந்த அறிவிப்பு வெளியானது முதலே மக்களிடையே சர்ச்சைகள் எழ ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இன்றும், "#BJPBetrayshindus" என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்துக்களின் காவலன் என்று தன்னை கூறிக் கொண்டு, உயர் வகுப்பினருக்கு உதவுவதற்காக, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு துரோகம் செய்கிறது மத்திய மோடி அரசு என்று இளைஞர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
இதுவரைக்கு மத்தியப் பட்டியலில், மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 22.5 சதவிகித இட ஒதுக்கீடும், ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடும் நடைமுறையில் இருக்கிறது. பொதுப்பிரிவினருக்கான மதிப்பெண்கள் போக, இதர வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதற்காக வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள, EWS பிரிவில் 10 சதவிகித இட ஒதுக்கீடு எந்த மக்கள் தொகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்புகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். மேலும் “இவ்வளவு நாட்கள் இட ஒதுக்கீட்டையே இழிவாகப் பேசி வந்தவர்கள், இப்போது, EWS இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகையைப் பெறுகிறார்கள். ‘வெறும் 35 மதிப்பெண்கள் எடுத்து வேலைக்கு வந்துவிடுகிறார்கள், அவர்களுக்குத் திறமையும் இல்லை. நிர்வாகத் திறனும் இல்லை’ என்று சொல்லி வந்த அவர்கள். இப்போது எஸ்.பி.ஐ. கிளார்க் தேர்வில் 28.5 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தால் போதும் அடுத்தக் கட்ட தேர்வுக்கு போகலாம் என்கிற நிலையை உருவாக்கியுள்ளனர். இந்த பொருளாதார இட ஒதுக்கீட்டு முறை, சாதிய ரீதியான இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதற்கான ஆரம்பப் புள்ளி” என்கிறார்கள்.
இதுகுறித்து விளக்கமளித்த எஸ்.பி.ஐ. நிர்வாகம், “ EWS பிரிவில் குறைந்த நபர்களே விண்ணப்பித்து இருந்ததால்தான், அவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்திருக்கிறது. ஆனால் மற்ற அனைத்து மத்திய அரசுத் துறைகளிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்களைக் கூட எடுப்பதில்லை என்று காரணம் கூறி, அந்த இடங்களை வேண்டுமென்றே காலியாக வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்ட EWS இட ஒதுக்கிட்டு பிரிவினருக்கு மட்டும் மிகக் குறைந்த மதிப்பெண்களை நிர்ணயித்து, அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள் சமூக ஆர்வளர்கள்.
இந்த 10% இட ஒதுக்கீடு, 50.5% பொதுப்பிரிவினருக்கான இடங்களில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. இதனால் மற்ற பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த நேரடி பாதிப்பும் இருப்பதாக தெரியாது. ஆனால் இதில் மறைமுக பாதிப்பு இருக்கிறது. ஏற்கனவே, ஓ.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பொதுப்பிரிவுகளில் போட்டியிட முடியும். இந்த 10% இட ஒதுக்கீட்டின் மூலம் அந்த வாய்ப்புகளை பெரும்பாலும் குறைத்துவிட்டிருக்கிறது மத்திய அரசு.
எண்ணிக்கையில் குறைவான உயர்சாதி பிரிவினர்களுக்கு, 40.5%+10% (மொத்தம் 50.5%) சதவிகிதமாக பிரித்து, கூடுதல் சலுகையை உருவாக்கியிருப்பது சமூக நீதிக்கு எதிரானது என்பதே, இதனால் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த பத்து சதவிகித இட ஒதுக்கீடு என்பது, இட ஒதுக்கீட்டின் கீழ் இல்லாத, வருடத்திற்கு 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ள அனைத்து உயர் சாதிகளுக்குமான வாய்ப்பா? இல்லை ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நலனுக்காக இதர பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியா? என்பது தான் மக்களிடையே எழும் விடை தெரியாத கேள்வி.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்