உணர்வோசை
‘முள் கிரீடம்’ : ஏழு வாரமாக காலியாக இருக்கும் காங்கிரஸ் தலைவர் பதவி - ஏற்பதற்கு யாரும் தயாராக இல்லையா?
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை அதிரடியாக ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் விலகும்போதே, சோனியா காந்தியோ, பிரியங்கா காந்தியோ இனி தலைவர் பொறுப்புக்கு வரமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
கோவாவில் ஆட்சிக் கலைப்பு, கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் ஆகிய விவகாரங்களில் காங்கிரஸ் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ராகுல் பதவி விலகி ஏழு வாரங்கள் கடந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியால் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லையா என கட்சிக்குள்ளேயே கேள்விகள் முளைக்கத் தொடங்கியிருக்கின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, மோதிலால் வோரா ஆகியோர் காங்கிரஸின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் ஒப்புக்கொள்வார்களோ, இல்லையோ, காங்கிரஸ் கட்சியில் இரு அணிகள் செயல்பட்டு வருவது உண்மை. ஒரு அணி இளம் தலைவரான ராகுலின் பின்னே செல்லும் இளையவர்களைக் கொண்டது. இன்னொரு அணி மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது. இரண்டு தரப்பினருமே ராகுல் காந்தியை விரும்புபவர்கள் தான். ராகுலின் பின்னே அணிவகுக்கும் இளம் நிர்வாகிகள் புதிய தலைவராக காங்கிரஸுக்கு புத்துயிர் அளிக்க விரும்பும் இளைஞர் ஒருவர் வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
புதிய பிரச்னைகளுக்கான தீர்வுகளை பழைய லென்ஸ் கொண்டு பார்க்க நினைக்கிறார்கள் மூத்த தலைவர்கள். ஆனால், அவர்களும் நேருவின் வாரிசுகள் தான் காங்கிரஸின் தலைவராக இருக்க விரும்புகிறார்கள். ராகுல் கட்சிக்குள் சாட்டையை சுழற்றுவதற்குள் தங்களில் ஒருவர் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.
பா.ஜ.க தலைவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வாக்கு வங்கிகளை தங்கள் பக்கம் திருப்ப முயற்சித்து வருகின்றனர். அதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் தலைவராக நியமிக்கலாம் என சில தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன்படி, சுஷில்குமார் ஷிண்டே, மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரின் பெயர்கள் தலைமை பதவிக்கு அடிபடுகின்றன.
ஆனால், 75 வயதைக் கடந்துவிட்ட இந்த இரு மூத்த தலைவர்களையும் இளம் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ள அடம்பிடிப்பார்கள். பா.ஜ.க-வுக்கு நிகராக செயல்பாட்டைத் தீவிரப்படுத்த ராகுலுக்கு நெருக்கமாக இருக்கும் இளம் நிர்வாகிகள் இளம் தலைவரை நியமிக்க வலியுறுத்துவார்கள்.
உத்தர பிரதேசத்தின் ஜோதிராதித்ய சிந்தியா, ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா ஆகியோர் காங்கிரஸ் தலைவருக்கான ரேஸில் இருக்கின்றனர். காங்கிரஸில் ஜோதிராதித்ய சிந்தியா தலைவராவதற்கு பச்சைக் கொடிகள் பறக்கின்றன.
தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுலைத் தவிர ஜோதிராதித்யா சிந்தியா, மிலிந்த் தியோரா ஆகியோர் மட்டுமே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். வேறு முக்கிய நிர்வாகிகள் யாரும் பதவி விலகத் தயாரில்லை என்பதே ராகுலுக்கு அதிருப்தியைக் கொடுத்திருக்கிறது.
சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியை நடத்தியபோது அகமது பட்டேல் சோனியாவுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் செயல்பட்டார். அவரே அப்போது வலிமை வாய்ந்த சக்தியாகவும் கட்சிக்குள் செயல்பட்டார். ராகுல் தலைவரான பிறகு அந்தச் சூழல் இல்லை.
யார் தலைவரானாலும், காங்கிரஸ் கட்சியின் மூன்று காந்திகளின் (சோனியா, ராகுல், பிரியங்கா) விருப்பப்படியே செயல்பட வேண்டியிருக்கும். அதுபோக, கட்சிக்குப் புத்துயிர் அளித்தாலும், அதைத் திரும்ப காந்தி குடும்பத்திற்கே கையளிக்க வேண்டியிருக்கும் என்பதால் காங். தலைவர் எனும் முள் கிரீடத்தைச் சுமக்க யாரும் தயாரில்லை என காங்கிரஸ் கட்சி வட்டாரத்துக்குள் முணுமுணுப்புகள் கேட்கின்றன.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!