உணர்வோசை
என் தேசம் இறவாமல் காத்தவர் அண்ணா! - வங்க ஆய்வறிஞரின் கட்டுரை
பாகிஸ்தானின் உருது ஆதிக்க ஆட்சியிலிருந்து ‘கிழக்கு பாகிஸ்தான்’ விடுதலையடைந்த ‘வங்கதேச மக்கள் குடியரசு’ என்ற நாடு 1971 – ல் உருவானபோது, அரசியல் விடுதலை, பிரதேச எல்லை விடுதலை என்பதைத்தவிர, இன்னொரு வகையிலும் அந்த விடுதலை முக்கியத்துவம் பெற்றது. வெவ்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளை ‘ஒரே மதம்’ என்ற பிணைப்பு இணைக்கும் பசையாகச் செயல்படும் என்ற நம்பிக்கையைத் தகர்த்த விடுதலை அது.
தெற்காசிய மக்களை 'ஒரே நாடு' என்றோ, 'இரு நாட்டவர்' என்றோ கட்டுப்படுத்திவிட முடியாது; அவர்கள் ‘பல தேசிய இனத்தவர்’ என்பதையே வங்கதேச விடுதலை நிரூபித்திருக்கிறது. பல தேசிய இனங்களுள்ள நாட்டில், பல்வேறு இனங்களிலிருந்து பல தந்தையர் உருவாகின்றனர். அப்படி உருவானவர்களில் முதன்மையானவர் அண்ணா என்றே நினைக்கிறேன். தமிழர்களின் தலைவர், இன்று பல்வேறு இன மக்களுக்கும் ஆதர்சமாகத் திகழ்கிறார். அண்ணா ஒரு மாநிலத்துக்கு, ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமல்ல, உலக வரலாற்றில் இடம்பெற வேண்டிய தலைவர் என்பதை அவரது அரசியல் பணி உணர்த்துகிறது.
இந்தியாவைக் காக்க அண்ணா வழியே உகந்தது
இந்தியக் குடியரசின் ஜனநாயகமும் ஒற்றுமையும் அதன் கூட்டாட்சிக் கட்டமைப்பில் தான் வாழ்கின்றன. இதை உணர்ந்திருந்ததால்தான் 1946-ல் இந்திய சுதந்திரம் தொடர்பாக இறுதிசெய்ய, பிரிட்டனிலிருந்து வந்த கேபினட் அமைச்சர்களைக் கொண்ட தூதுக் குழு மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் கூட்டமைப்பாக இந்தியாவைச் சிந்தித்தது. மத்திய அரசுக்கு வெளியுறவுத்துறை, ராணுவம், ரூபாய் நோட்டு அச்சடிப்பு. தகவல் தொடர்பு, ரயில்வே போன்றவை மட்டும் பொறுப்புகளாக இருக்கும். ஏனையவை அனைத்தும் மாநிலங்களின் அதிகாரத்தில்! அதாவது, இப்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தைவிடச் சற்றே நெருக்கமான நாடுகளின் கூட்டமைப்பாக இந்திய அரசு இருந்திருக்கும். அண்ணாவும் இதையே வலியுறுத்தினார்.
ஒரு வங்காளி என்ற முறையில் கூறுகிறேன். அண்ணா இப்போதும் வாழ்கிறார். ஆதிக்கவாதத்துக்கு எதிராக தேசியம் போராட்டம் நடத்தும் போதெல்லாம் அண்ணா வாழ்கிறார். அண்ணா இன்னமும் வாழ்கிறார் என்று ஏன் கூறுகிறேன் என்றால், வங்காளியான என் மீது ‘இந்தி படிப்பது கட்டாயம்’ என்று மத்திய அரசால் திணிக்கமுடியவில்லை. 1965-ல் அண்ணா தலைமை தாங்கி நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் இதற்கு முக்கியக் காரணம். அந்தப் போராட்டத்தால்தான் இந்தி பேசாத நாங்கள் அனைவரும் நிரந்தர மூன்றாம் தரக் குடிமக்களாகிவிடாமல் தப்பித்தோம். அதேசமயம், இந்திய தேசத்தின் இரண்டாம் தரக் குடிமக்களாக, என்றாவது ஒருநாள் முதல் தரக் குடிமக்களாகிவிட வேண்டும் என்ற கனவுகளோடு வாழ்கிறோம். இது தள்ளிப்போடப்பட்ட கனவாகதான் இருக்கிறது.
உண்மையான தேசியத்தை அண்ணா சிந்திக்கவைக்கிறார்
இந்தி ஆதிக்கத்துக்கு முன் அண்ணாவும் அவருடைய தம்பிகளும் அடிபணியாமல் நின்று, பிற தேசிய இனங்களுக்கு மிகப்பெரிய உதாரணர்களாகியிருக்கிறார்கள். அப்படித் தனித்து நின்றதன் மூலம், தேசியம் என்றால், அதாவது உண்மையான தேசியம் என்றால் என்ன என்று அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறார்கள். இப்போது இந்திய ஒன்றியத்துக்கு மிகப் பெரிய பதற்றத்தைத் தருவது இந்த விஷயம்தான். இந்தி பேசாத மக்களுக்கான இடம் எது என்று வறையறுக்க, இந்தி பேசும் ஆதிக்க வகுப்பு முற்படுகிறது. பெருமுதலாளித்துவத்தின் ஆதரவில் செயல்படும் ஜனநாயக எதிர்ப்புச் சத்திகள் மூலம் தேச ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தேசியவாதிகள் கூறும் விளக்கம் நம்மை எங்கே இட்டுச்செல்கிறது என்று பார்க்க வேண்டும். கூட்டாட்சி அமைப்பை ஆக்கிரமித்துள்ள, டெல்லி ஆதிக்கவாதிகள் எங்களைப் பார்த்து கேட்கிறார்கள், ”நீங்கள் முதலில் இந்தியரா அல்லது வங்காளியா?” இப்படிக் குடியுரிமையையும் தேசிய அடையாளத்தையும் வேண்டும் என்றே மோத விடுகிறார்கள். இப்படி நம்முடைய கடந்த காலத்தைச் சிதைத்து, நிகழ்காலத்தை அடிமைப்படுத்தி, எதிர்காலத்தை நிர்மூலமாக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராடத்தான் அண்ணா நமக்கு மிகவும் தேவைப்படுகிறார்.
தேசிய இனத்தால் நான் வங்காளி, குடியுரிமையால் நான் இந்தியன். நான் ஏன் இந்தியனாக இருக்கிறேன் என்றால், வங்காளியாக வங்காளத்தில் பிறந்ததால்தானே தவிர, இந்தியாவில் பிறந்ததால் வங்காளியாகிவிடவில்லை. முதலில் இந்தியனாக என்னை அனுமதித்துவிட்டு, அதன் பிறகு வங்காளியாகவோ தமிழனாகவோ போக விருப்பமா என்று யாரும் என்னைக் கேட்கவில்லை. என்னுடைய தேசிய அடையாளம் என்பது விரும்பித் தேர்வுசெய்வதல்ல, அது இயற்கையாக வருவது. எனது தாய் என்னிடத்தில் முதலில் பேசிய வார்த்தைகள் வங்கமொழியிலானவை. அவளும் நானும் பேசிக்கொண்டது வங்காளியில். என்னுடைய குடியுரிமை இன்று இந்தியாவுடையது, நாளையே அது கனடா நாட்டினுடையதாக மாறலாம், நானும் பாலிவுட் நட்சத்திரமும் பா.ஜ.க-வின் ஆதரவாளருமான அக்ஷய் குமாரைப் பின்பற்றினால்! வங்காளியாகப் பிறந்த நான் எந்த நாட்டில் இருந்தாலும் வங்காளியாகத்தான் மடிவேன் – தாய்நாடான வங்காளத்தில் மடியவே நான் விரும்புகிறேன்.
நான் எழுதும் வார்த்தைகள் பலருக்குக் கோபத்தையும் எரிச்சலையும் எற்படுத்தலாம்; பலருடைய புருவங்கள் உயரலாம்; கடுமையான வசைகளால் என்னை அர்ச்சிக்கலாம்; இனி என் குரல் எழும்பாதபடிக்கு என்னை மவுனமாக்கும் வேலையைக் கூடச் சிலர் செய்யலாம். அந்த மவுனத்திலும், மாநிலங்களவையில் அன்றைய மத்திய அரசைப் பார்த்து அண்ணா பேசிய வார்த்தைகள் வாழும். ”பலப்பிரயோகம் செய்து அமைதியை ஏற்படுத்தாதீர்கள்; இதயத்திலிருந்து பேசி சமரசத்தை எற்படுத்துங்கள். அடிப்படை மனித உரிமைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுங்கள் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களை வேண்டிக்கொள்கிறேன். மக்களுக்கு உண்மையை உணர்த்தும் உங்களுடைய உரிமையைப் பயன்படுத்துங்கள்; ஆனால் மாற்றுக் கருத்துகளை யாரும் பேசக் கூடாது, எழுதக்கூடாது என்று தடை விதிக்கும் சட்டங்களை இயற்றாதீர்கள்!”
இந்நாட்டில் இந்தி பேசாதவர்கள் ‘யாரும் என் வாயை அடைத்துவிட முடியாது’ என்று உறுதியேற்கும்போது, நீதிக்காகக் குரல்கொடுக்கும்போது அண்ணா வாழ்கிறார்!
கட்டுரையாக்கம் :
- கர்க சட்டர்ஜி
(கொல்கத்தாவைச் சேர்ந்த ஆய்வறிஞர்)
நன்றி : இந்து தமிழ் திசை வெளியிட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு’ தொகுப்பு நூல்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!