murasoli thalayangam

கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!

75 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம்! 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டது. 1950 ஜனவரி 26 ஆம் நாள் அரசமைப்புச் சட்டமானது நடைமுறைக்கு வந்தது.

நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்றைய தினம் (நவம்பர் 26) சிறப்புக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

"மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை உள்ளடக்கி இந்தியாவை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஒரு உன்னத உருவாக்கம்தான் அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த அரசமைப்புச் சட்டம்" என்று முதலமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை போற்றுவதும் காப்பதும் இந்திய நாட்டு மக்களின் அடிப்படைக் கடமையாகும். இன்றைக்கு இந்தக் காலச் சூழலில் இது மிகமிக முக்கியமானது ஆகும்.

"400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி ஏன் சொல்கிறார் என்றால், அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று பா.ஜ.க. எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான அனந்த குமார் சொன்னார்.

“இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணம்” என்று தமிழ்நாட்டு ஆளுநர் ரவியும் அவ்வப்போது சொல்லிக் கொண்டு இருக்கிறார். 'அன்னியக் கண்ணோட்டத்துடன் அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டுள்ளது' என்று அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சொன்னார்கள். அவர்களது வாரிசுகள்தான் இன்று ஒன்றியத்தை ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகையவர்களின் கையில் அதிகாரம் போய் விட்ட காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பது என்பது இந்திய மக்களின் மிகமுக்கியக் கடமை ஆகும். அந்தளவுக்கு பெரும் பெரும்பான்மை அதிகாரம் பா.ஜ.க.வுக்கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் வழங்கவில்லை. அந்த வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மக்களே காப்பாற்றி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை களைக் காக்க வேண்டும். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக் கொண்டு ஒன்றிய ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் வழியாகும். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்... "அரசின் இறைமை என்பது பொதுமக்களிடம் தான் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.

சட்டம் சார்ந்த இறைமையானது கூட்டாட்சி ஒன்றியத்துக்கும் அதன் அங்கங்களான மாநிலங்களுக்கும் இடையே பிரித்துத் தரப்பட்டுள்ளது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒற்றையாட்சி அமைப்பு கூடாது; கூட்டாட்சி அமைப்பு முறை தான் வேண்டும் என்று சொன்னார்கள்.

இது ஒரு துணைக்கண்டம் என்று அழைக்கக் கூடிய அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. ஆனால் சுங்கத் தொகை வசூலிக்கும் நகராட்சி மன்றங்களைப் போல மாநிலங்களை மாற்றி வருகிறீர்கள்" என்று 1963 சனவரி 25 அன்று மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றினார்கள்.

இன்றைக்கும் மாநிலங்களை அப்படித்தான் மனரீதியாக வைத்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. எனவே தான், 'மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற சட்ட முன்னெடுப்புகளைச் செய்வோம்' என்று முதலமைச்சர் அவர்கள் தனது முப்பெரும் விழா உரையில் குறிப்பிட்டார்.

மக்களுக்கு நேரடியாக நெருக்கமான மக்களுக்கான அனைத்து சேவைகளையும் செய்து தரக் கூடிய மாநிலங்களை வேதனையில் தள்ளிவிட்டு இந்தியாவைக் காக்க முடியாது.

இந்திய அரசியலமைப்பு சட்ட அவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை மிகமிக முக்கியமானது. "1950 ஜனவரி 26 ஆம் நாள் நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம். சமூகப் பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வைப் பெற்றிருப்போம்.

அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்குக்கும் ஒவ்வொரு மதிப்பு என்றிருக்கும். நமது சமூக பொருளாதார வாழ்விலோ 'ஒரு மனிதன் ஒரு மதிப்பு' என்ற கோட்பாட்டை தொடர்ந்து நிராகரிப்பவர்களாக இருப்போம். எவ்வளவு காலத்துக்கு இந்த முரண்பட்ட வாழ்வை வாழப் போகிறோம்?" என்று கேட்டார் அண்ணல்.

சமூக, பொருளாதாரத்தில் மட்டுமல்ல அரசியலிலும் 'ஒரு மனிதன் ஒரு மதிப்பு' கோட்பாடு இன்னமும் வரவில்லை, வர விடமாட்டார்கள் என்பதையே இன்று பலரது நடவடிக்கைகளும் காட்டிக் கொண்டிருக்கிறது. "இந்த அவை தமக்கு அளிக்கப்பட்டுள்ள இறையாண்மை மிக்க அதிகாரத்தை அறிவார்ந்த முறையில் பயன்படுத்தும் என்பதை நாம் நமது நடத்தையின் மூலம் நிரூபிப்போம்" என்றார் அண்ணல் அம்பேத்கர். அப்படி நிரூபிக்கும் கடமை இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் உள்ளது.

அதனைச் செயல்படுத்த உறுதி ஏற்போம்!

மாநில சுயாட்சி - சமூகநீதி - சமத்துவம் - சமதர்மம் - சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளைக் காப்பதன் மூலமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்பது தான் அண்ணல் அம்பேத்கரும், பேரறிஞர் அண்ணாவும் நமக்குச் சொன்ன அரசியல் அறநெறிகள் ஆகும்.

Also Read: ’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!