murasoli thalayangam
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
அகப்பட்டுக் கொண்டார் அதானி!
அமெரிக்காவின் பங்குச்சந்தை பாதுகாப்பு அமைப்பான பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், நியூயார்க் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தது. அதானி உள்ளிட்ட ஏழு பேர் மீது இவ்வழக்கு பாய்ந்துள்ளது. இதனை வைத்து அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒரு தொழிலதிபராக அவர் இருந்தால் இதனை தனிப்பட்ட பிரச்சினையாகக் கூட பார்க்கலாம். ஆனால் 'அதானி' என்ற பெயர்ச் சொல், மோடி என்ற பெயர்ச் சொல்லோடு தொடர்புடையது என்பது சாதாரணப் பொதுமக்கள் வரை தெரிந்தது ஆகும்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ராகுல் காந்தி இது தொடர்பாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகப் பேசி வருகிறார்.
"2014 ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இப்போது 140 பில்லியன் டாலராக ஆனது எப்படி? 2014 ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609 ஆவது இடத்தில் இருந்தவர், 2022 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்தது எப்படி?
விமான நிலையம் என்றாலும் அதானிதான். துறைமுகம் என்றாலும் அதானிதான். முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இயலாது என்ற விதியைத் திருத்தினார்கள். அதானிக்கு 6 விமான நிலையங்கள் தரப்பட்டன.
இஸ்ரேலுக்கு பிரதமர் செல்கிறார். அவருக்குப் பின்னாலேயே நடந்து அதானி செல்கிறார். உடனே இஸ்ரேல் இந்தியா இடையிலான அனைத்து தொழில்துறை ஒப்பந்தங்களும் அதானிக்கு வந்து விடுகிறது. இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் செல்கிறார். உடனே மாயமந்திரமாக எஸ்.பி.ஐ. வங்கி அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது.
வங்கதேசத்திற்கு மோடி முதல் முறையாக செல்கிறார். அங்கு மின்விநியோகத்திற்கான திட்டம் முடிவாகிறது. சில நாட்களுக்கு பின் வங்கதேசத்தின் மின்வாரியம் 25 ஆண்டுகளுக்கு மின் விநியோக உரிமையை அதானிக்கு வழங்குகிறது. 1500 மெகாவாட்
மின்சார ஒப்பந்தம் அதானிக்கு கிடைக்கிறது. இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கை"- என்று சொல்லி வருகிறார் ராகுல் காந்தி. தனது பாதயாத்திரையில், 'அதானியைப் பற்றித்தான் அனைவரும் விசாரிக்கிறார்கள்' என்றும் ராகுல் சொன்னார்.
07.02.2023 அன்று அதானியும் மோடியும் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி நாடாளுமன்றத்தில் ராகுல் கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதற்கு நாடாளு மன்றத்திலோ, பொதுவெளியிலோ பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்காமல் தவிர்த்து வந்தார். கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் கடைசியில் (மே மாதத்தில்) அதானியைப் பற்றி மோடி திடீரென்று பேசினார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆண்டுகளாக காங்கிரஸ் இளவரசர் 5 தொழிலதிபர்களைப் பற்றி பேசினார். பின்னர் அவர் அம்பானி. அதானி பற்றி மட்டும் பேசத் தொடங்கினார். இப்போது அவர்கள் பற்றியும் பேசாமல் திடீர் மவுனம் காத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அம்பானி மற்றும் அதானி பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தி விட்டனர். ஏன்? நான் காங்கிரஸ் இளவரசரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
அம்பானி, அதானியிடமிருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள்? நடைபெறும் தேர்தலுக்காக அவர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி எவ்வளவு நிதி பெற்றது. எத்தனை வாகனங்களில் பணத்தைப் பெற்றது? ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நான் உணர்கிறேன். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தேசத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்" என்று பேசினார். இது பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது என்பதைப் போல இருந்தது.
அதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று சொல்லப்பட்ட போதெல்லாம் மவுனம் சாதித்தார் பிரதமர். அதானி குழுமம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று சொன்ன போது அதற்கு செவி சாய்க்கவில்லை. அதானி மீதான குற்றச்சாட்டுகளை 'செபி' விசாரிக்கும் என்றார்கள். 'செபி' விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. அதானி மீதான குற்றச்சாட்டுகளை செபி விசாரித்தது. எந்தத் தவறும் அதானி செய்யவில்லை என்று செபியும் சொல்லி விட்டது.
இந்த நிலையில் தான் அமெரிக்காவில் இருந்து பூதம் கிளம்பி உள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு, அயலுறவு, ஊழல் தடுப்பு சட்டங்களைமீறி ரூ.6,300 கோடி அளவுக்கு மோசடிகள் செய்யப்பட்டதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 2,029 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் அமெரிக்க நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. முதலீடுகளைத் திரட்டுவதற்காக லஞ்சம் தரப்பட்டதாகவும் சொல்லப் பட்டுள்ளது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது அதானிக்கு. இக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்துள்ளது. 'குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகள்தான்' என்கிறது அவர்களது அறிக்கை. இந்த விளக்க அறிக்கை எல்லாம் போதாது.
அதானி குழுமம் என்பது பா.ஜ.க. தலைமையுடன் தொடர்பு படுத்திப் பேசப்படும் நிறுவனம் என்பதால் இந்தியாவுக்கே அவமானமான செய்தியாக இது இருக்கிறது. 'ஒரு தனிநபரின் சட்டப் பிரச்சினைக்கும் நாட்டின் பொதுநலனுக்கும் இடையே தெளிவான எல்லையை வகுக்க வேண்டும்" என்று 'தி டிரிப்யூன்' ஏட்டின் ஆசிரியர் ஹரீஷ் காரே சொல்லி இருக்கிறார். அதானி விவகாரத்தை பா.ஜ.க.வில் இருந்து பிரிக்க முடியுமா?
Also Read
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!