murasoli thalayangam

“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!

எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை வைத்து தனக்குப் பாராட்டு விழா நடத்தி இருக்கிறார். அதில் நானும் ஒரு விவசாயி என்றும், விவசாயிகளை தனது ஆட்சிக் காலத்தில் பாதுகாத்தேன் என்றும் சொல்லி இருக்கிறார். பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு 'பச்சைப் பொய்'களை அவிழ்த்து விட்டு இருக்கிறார் பழனிசாமி.

இவரது ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் வேதனையும் வெம்பலும்தான் பட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். இதனை எல்லாம் விவசாயிகள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகிறார் பழனிசாமி.

விவசாயிகளை நிலத்தில் இருந்து விரட்டுவதற்காக மோடி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததைவிட பழனிசாமியின் துரோகத்துக்கு எடுத்துக்காட்டு வேண்டுமா?

தனியார் மண்டிகளிடம் விளைபொருட்களை தேக்கி வைக்கும் தந்திரம் இந்தச் சட்டத்துக்குள் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். வேளாண் உற்பத்திப் பொருள்களை, குறிப்பாக கோதுமை மற்றும் நெல் கொள்முதலை அரசு படிப்படியாகக் குறைத்து, கடைசியில் கொள்முதல் செய்வதையே நிறுத்திவிடும் என்றும், அதனால் மார்க்கெட்டை இயக்கும் சக்தியாக இருக்கப் போகும் தனியாரைச் சார்ந்தே தாங்கள் இருக்க வேண்டியிருக்கும் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினார்கள்.

குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) நடைமுறை கைவிடப்படுவதால் விவசாயிகள் தான் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்றும் விவசாயிகள் அஞ்சினார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்தான் பழனிசாமி. இந்தச் சட்டத்தை ஆதரித்து பொது வெளியில் பேசிய ஒரே முதலமைச்சர் பழனிசாமிதான்.

போராடும் விவசாயிகளை 'புரோக்கர்கள்' என்றார். “மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டார். “மூன்று சட்டங்களுக்கு ஆதரவாக யாருடனும் நான் விவாதிக்கத் தயார்” என்றார். விவசாயிகளின் எதிர்ப்பை தாங்க முடியாத பா.ஜ.க. அரசு பணிந்தது. சட்டங்களை திரும்பப் பெற்றது.

தி.மு.க. ஆட்சி மலர்ந்ததும், “மூன்று சட்டங்களும் நமது நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்பதால், அவை ஒன்றிய அரசினால் ரத்து செய்யப்படவேண்டும் என இந்தச் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது” என்று தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

பா.ஜ.க. இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால், இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்யும் தீர்மானத்தை அவர்களால் ஆதரிக்க முடியாது. ஆனால் விவசாயி வேடம் போட்டு வந்த அ.தி.மு.க. எதற்காக வெளிநடப்பு செய்ய வேண்டும்? ஆட்சியில் இருக்கும் போது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க.வுக்கு பயந்தார்கள். இப்போதும் பயந்து நடுங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதே போன்ற துரோகத்தைத்தான் காவிரிப் பிரச்சினையிலும் பழனிசாமி செய்தார். காவிரி இறுதித் தீர்ப்பு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் - 2007 ஆம் ஆண்டு வந்தது. 192 டி.எம்.சி.தான் என்று தீர்ப்பு வந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு அனைவர் முடிவின் படி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் முதல்வர் கலைஞர். காவிரி மன்றத்தையும் நாடினார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னார்.

2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இறுதி விவாதம் வந்தபோது அ.தி.மு.க. அரசு சரியாக வாதிடவில்லை. அழுத்தமான வாதங்களை வைக்கவில்லை. நமது மாநிலத்தின் ஜீவாதாரப் பிரச்சினை இது என்பதைச் சொல்லவில்லை. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு 2018 ஆம் ஆண்டு வந்தது. அதன்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக நீர் தாவா முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

கர்நாடக மாநிலத்தின் தேர்தலை மனதில் வைத்து மத்திய பா.ஜ.க. அரசு இதனைச் செயல்படுத்தவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த பழனிசாமியும் ஒன்றிய அரசைக் கேட்கவில்லை.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று போராடியதும் தி.மு.க.தான். தமிழகம் வந்த பிரதமருக்கு தி.மு.க. கருப்புக் கொடி காட்டியது. காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டார்கள். 'காவிரி மேலாண்மை வாரியம்' என்ற பெயரால் டெல்லியில்தான் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சொன்னது தி.மு.க.

பா.ஜ.க. அரசு அதிகாரமற்ற ஒரு அமைப்பைத் தொடங்கி, அதனை ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறையோடு சேர்த்துவிட்டார்கள். அதையும் எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. இவர்தான் இன்று விவசாயி வேடமிடுகிறார்.

“விவசாயிகள் கடனை ரத்து செய்ய மாட்டேன்” என்று சொல்லி உச்சநீதிமன்றம் வரை போனவர்தான் பழனிசாமி. காவிரியில் உரிமையை நிலைநாட்டாதவர்தான் பழனிசாமி. டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை ஒடுக்கியவர்தான் இந்த பழனிசாமி. வேளாண் மண்டலம் என்பதை போலியாக அறிவித்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படும் என்ற சதி செய்தவர்தான் இந்த பழனிசாமி.

'கிசான்' திட்டத்தில் போலி நபர்களைச் சேர்த்து முறைகேட்டுக்கு உதவிய ஆட்சிதான் பழனிசாமி ஆட்சி. குடிமராமத்துப் பணிகளில் ஊழல் செய்த ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி. நீர் வள உரிமையைப் பறிக்கும் ஜல்சக்தி திட்டத்தை ஆதரித்தவர்தான் பழனிசாமி. அணை பாதுகாப்பு உரிமையை விட்டுத் தந்தவர்தான் பழனிசாமி. இவர் விவசாயிகளைப் பற்றிப் பேசலாமா?

பழனிசாமி விவசாயி அல்ல; கபட வேடதாரி என்பது விவசாயிகளுக்கே தெரியும். பயிருக்கும் களைக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள்தான் விவசாயிகள்!

Also Read: விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!