murasoli thalayangam

எரியும் மணிப்பூரை அணைக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு துளியும் முயற்சிக்கவில்லை! : முரசொலி கண்டனம்!

மீண்டும் மணிப்பூர்... மீண்டும் மணிப்பூர்... என்று இன்னும் எத்தனை ஆண்டு காலத்துக்கு இன்னும் எத்தனை தலையங்கம் தீட்டுவது? எரியும் மணிப்பூரை அணைக்கும் செயலைச் செய்ய ஒன்றிய பா.ஜ.க. அரசு துளியும் முயற்சிகள் எடுத்ததாகத் தெரியவில்லை.

காசாவுக்காக கவலைப்படும் பிரதமர் மோடி, உக்ரைனுக்காக உள்ளம் துடிக்கும் பிரதமர் மோடி.. உள்நாட்டு மணிப்பூரை மறந்து விட்டு, வெளிநாடு சுற்றி வருகிறார். ஒருவேளை மணிப்பூர் கவலையை மறப்பதற்காகத்தான் வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறாரோ என்னவோ?

ஒன்றிய பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சகம், உதவாக்கரை நிலையில் இருப்பதன் அடையாளம்தான் மணிப்பூர். பா.ஜ.க. ஆட்சி அமையும் மாநிலமானது எப்படி ஆகும் என்பதற்கு உதாரணம்தான் மணிப்பூர்.

ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் எரிகிறது. அணைப்பார் இல்லாமல் எரிகிறது. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும் கவலையில்லை. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் சொரணை இல்லை.

கடந்த 13 ஆம் தேதி அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 11 பேர் கொல்லப்பட்டார்கள். ஜிரிபாம் மாவட்டத்தின் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் சி.ஆர்.பி.எஃப். சுட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. உடனடியாக மணிப்பூருக்கு 20 கம்பெனி, மத்தியப் படையை அனுப்பி வைத்தது ஒன்றிய அரசு. ஏற்கனவே 198 கம்பெனி மத்தியப் படை அந்த மாநிலத்தில் இருக்கிறது.

கடந்த வாரத்தில் இருந்து ஜிர்பாம் மாவட்டத்தில் வன்முறை அதிகமாகி வருகிறது. கடந்த 13 ஆம் தேதி அரமாய் தெங்கோல் பகுதிக்குள் புகுந்த கலவரக்காரர்கள், வீடுகளுக்கு தீ வைத்தனர். 31 வயதான ஆசிரியை ஒருவரை இழுத்து வந்து சித்திரவதை செய்தார்கள். பின்னர் உயிரோடு கொளுத்தினார்கள்.

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி 6 பேர் கடத்தப்பட்டார்கள். அந்த 6 பேரும் கடந்த 16 ஆம் தேதியன்று உயிரற்ற உடல்களாக மீட்கப் பட்டுள்ளார்கள். ஜிரி ஆற்றங்கரையில் இருந்து 3 உடல்களும், பராக் நதி ஆற்றங்கரையில் இருந்து 3 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதில் பத்து மாதக் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இவர்கள் அனைவரும் அரசின் நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்கள். மணிப்பூர் மீண்டும் எரிய இதுதான் காரணம்.

பொதுமக்களை கொந்தளிக்க வைத்துள்ளது இந்த மரணங்கள். மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். பா.ஜ.க. அமைச்சர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்கள் வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன.

முதலமைச்சர் பிரேன்சிங்கின் மருமகன் ராஜ்குமார் இமோசிங் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர் வீடும் தாக்கப்பட்டுள்ளது. 6 எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகள் மூலமாகக் கலைத்து வருகிறார்கள்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான சபம் ரஞ்சன் லாம்பெல் வீடு தாக்கப்பட்டது. அப்போது அவர் வீட்டுக்குள்தான் இருந்தார். ‘இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பேன், இல்லாவிட்டால் பதவி விலகி விடுவேன்’ என்று போராட்டக்காரர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டுள்ளார் அமைச்சர்.

மணிப்பூர் மாநிலத்தில் இணையத் தளச் சேவை முடக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், தோபால், சுராசந்த்பூர், காங்போக்பி, கக்சிங்கில் ஆகிய மாவட்டங்களில் இணையத் தளச் சேவை முடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செய்திகள் பரவாது என்று நினைத்து தடை செய்துள்ளார்கள். பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

“மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புச் சூழல் கடந்த சில நாட்களாக பலவீனமாகவே உள்ளது. இரண்டு சமூகத்தினைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் வன்முறையில் ஈடுபடுவது தேவையில்லாத உயிரிழப்புகளுக்கும், பொது அமைதி சீர்குலைவுக்கும் வழிவகுக்கிறது. சட்டம் - ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் படி பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை கொடுத்திருக்கிறது. இப்படி ஒரு அறிக்கையைக் கொடுக்க அவர்களுக்கு கூச்சமாக இல்லையா?

ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் நிலவரம் என்பது இதுதான். எரிவது, அணைப்பது! கலவரம் நடப்பது, கட்டுப்படுத்துவது! கொல்வது, அடக்கம் செய்வது! இந்த மூன்று செயல்கள்தான் ஒன்றரை ஆண்டுகளாக நடக்கிறது. 2023 மே மாதத்தில் இருந்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 என அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கூடுதலாகத்தான் இருக்கும். ஆனால் இன்னமும் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்தான் ஒன்றிய அமைச்சகம் இருக்கிறது.

குக்கி – மைத்ரி இன மக்களின் மோதலாக இது தொடங்கினாலும் பா.ஜ.க. அரசின் கையாலாகாத்தனமே இதனை இத்தனை மாதங்கள் நீட்டிக்கக் காரணம் ஆகும். இரண்டு இன மக்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். இரு இன மக்களும் முகாம்களில் வசித்து வருகிறார்கள். கலவரத்தில் இருந்து தப்பிக்க இரு இன மக்களும் பக்கத்து மாநிலங்களுக்கு போய்விட்டார்கள். லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. பள்ளிகள், கல்லூரிகள் இப்போது குடியிருப்புகளாக மாறப்பட்டு விட்டன. மக்களை அங்கு தங்க வைத்துள்ளார்கள். அதனால் பள்ளி, கல்லூரிகளின் செயல்பாடும் முடங்கிக் கிடக்கிறது. நான்கைந்து குடும்பங்கள் ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.

முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு உணவும், அவசியப் பொருள்களும் கிடைத்து விடும் என நினைக்க வேண்டாம். தங்குவதற்கு இடம் கொடுத்தார்களே தவிர மற்ற வசதிகள் எதுவும் இல்லை. இரண்டு இன மக்களுடன் தனித்தனியாக பா.ஜ.க. அரசு பேசவில்லை. இரு இன மக்களுக்கும் ஒன்றிய அரசின் மீது நம்பிக்கை வரவில்லை. பிறகு எப்படி அமைதியை ஏற்படுத்துவார்கள்?

மொத்தத்தில் மணிப்பூர் மக்களை சொந்த நாட்டு அனாதைகளாக வைத்திருக்கிறார்கள். உங்களுக்குள் அடித்துக் கொண்டு - உங்களுக்கான முடிவைத் தேடிக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார்கள் என்றேதான் சொல்ல வேண்டும். 

Also Read: மகனுக்காக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. வேலைவாய்ப்பு என்று கூறி மாணவர்களை வரவழைத்த அர்ஜுன் சம்பத் -கண்டனம்