murasoli thalayangam
தமிழ்த்தாயை ஏமாற்றிய ஆட்சிதான் அம்மா ஆட்சி : அதிமுக ஆட்சியின் அவலத்தை பட்டியலிட்டு விமர்சித்த முரசொலி !
முரசொலி தலையங்கம் (13-11-2024)
நல்லாட்சியல்ல, பொய்யாட்சி 2 !
சேலம் மாவட்டத்துக்கு பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகள் என்ன?
சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தகவல் தொழில் நுட்பப் பூங்கா பணிகளை முடக்கி வைத்திருந்தார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முடக்கினார். பாதாளச் சாக்கடை திட்டத்தை முறையாகச் செயல்படுத்தவில்லை. ஏற்காடு தாவரவியல் பூங்காவை முறையாக அமைக்கவில்லை. சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மேம்படுத்தவில்லை. சேலம் மாநகர எல்லைப் பகுதிகளை இணைக்கும் ரிங் ரோடு அமைக்கப்படும் என்றார் பழனிசாமி. அமைக்கவில்லை.
தலைவாசல் சந்தை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஓமலூரில் திரவிய தொழிற்சாலை அமையவில்லை. எடப்பாடி, வீரபாண்டி தொகுதியில் ஜவுளி பூங்கா அமையவில்லை. சேலத்தில் ராணுவத் தளவாடத் தொழிற்சாலை அமையப் போகிறது என்றார்கள். அமையவில்லை. சேலம் செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட் மேம்படுத்தப்படவில்லை. இவை அனைத்தும் பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகள் தான். தனது சொந்த மாவட்டத்துக்குக் கூட சொன்னதைச் செய்யாதவர்தான் பழனிசாமி. கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்ட ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. இவர்தான் இன்று நல்லாட்சி தந்ததாக உளறிக் கொண்டிருக்கிறார்.
2011 முதல் 2021 வரை நல்லாட்சி கொடுத்தார்களாம். கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாதது எப்படி நல்லாட்சியாக இருந்திருக்க முடியும்? 2016 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முக்கியமாகச் சொன்ன அறிவிப்பு, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும் என்பதுதான். ஆட்சிக்கு வந்ததும் கிடப்பில் போட்ட அறிவிப்பை 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அப்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. திடீரென பிரதமர் மோடியை வைத்துத் தொடங்கினார்கள். அம்மா ஸ்கூட்டர் மானியம் வெறும் 2.35 பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. பணிக்குச் செல்லும் எல்லா பெண்களுக்கும் வழங்குவதாகச் சொன்னது ஏமாற்று வேலை. 'ஸ்கூட்டர் வாங்க 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்' எனப் பிரச்சாரத்தில் ஜெயலலிதா சொன்னார். ஆனால், ஸ்கூட்டர் விலையில் 50 சதவிகிதமோ அல்லது 25 ஆயிரம் ரூபாய் இதில் எது குறைவோ அந்தத் தொகைதான் மானியமாகக் கொடுத்தார்கள். அதனால் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்குப் பாதி தொகை வழங்கப்படவில்லை.
2016-ல் அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'ஆதி திராவிடர் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்களும் நீராவி இட்லிகுக்கர்களும் வழங்கப்படும்' என்று அறிவித்தார்கள். வெறும் காத்துதான் வந்தது. நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு முதல்வர் பழனிசாமி ஆட்சியில் உறங்கிக் கொண்டிருந்தது. ‘அம்பேத்கர் கொள்கையை பரப்ப 5 கோடியில் அம்பேத்கர் பவுண்டேஷன் நிறுவப்படும்' என்ற அறிவிப்பு நகரவே இல்லை.
“அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அமைக்க வேண்டும்” என்கிற கோரிக்கை தொடர்ச்சியாக எழுந்த நிலையில் தான், “7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 6 தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் ரூ.10 கோடியில் உருவாக்கப்படும்” என 2017 ஜூனில் அறிவித்தது அ.தி.மு.க. ஆட்சி. 'மகளிர் சிறப்பு மருத்துவர், உடலியல் மருத்துவர், லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மருத்துவர் எல்லாம் கருத்தரிப்பு மையங்களில் இருப்பார்கள்' எனச் சொன்னார்கள். முதல் கட்டமாகச் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் தொடங்கப்படும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
அமெரிக்க சுதந்திர தேவி சிலை போல ரூ. 100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்படும் என சட்டமன்ற விதி 110-ன் கீழ் அறிவிப்பை 2013 மே 14-ம் தேதி வெளியிட்டார் முதல்வர் ஜெயலலிதா. தமிழ்த்தாயை ஏமாற்றிய ஆட்சிதான் அம்மா ஆட்சி. 2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இருந்தவை பழனிசாமிக்கு நினைவில் இருக்கிறதா?
*சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைத் திட்டம்.
*தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்’.
*ஆன்லைன் வர்த்தகம் தடுக்கப்படும்.
*10 ஆடை அலங்காரப் பூங்காக்கள்.
*திருப்பூர் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்க விஞ்ஞானக் கழிவு அகற்றும் நிலையம்.
*58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.
*மின்னணு ஆளுமையின் கீழ் அனைத்துக் காவல் நிலையங்கள்.
*விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். *பள்ளிகளில் தாய்மொழியோடு பிறமொழிகள் பயில சிறப்புப் பயிற்சிகள்.
*நீதிமன்றங்களில் தமிழ்மொழி.
*தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
*வனவிலங்குகள் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை.
*தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம்.
*மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம். - இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை ஜெயலலிதா ஆட்சியில்!
2016 தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது நினைவில் இருக்கிறதா? அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும், பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச 'வைபை’ இணையதள வசதி வழங்கப்படும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம் உருவாக்கப்படும்- இப்படிச் சொன்னது எதையும் செய்யவில்லை.சொன்னது எதையும் செய்யாத பழனிசாமிதான் நல்லாட்சி தந்தாராம். 7.12.2020 நாளிட்ட 'இந்தியா டுடே' ஏடு வெளியிட்ட ஆய்வு அறிக்கைப்படி ஐந்து ஆண்டுகளின் ( 2015 - 20 ) செயல்பாட்டில் 19 வது இடம் தரப்பட்டது அ.தி.மு.க. ஆட்சிக்கு. 20 மாநிலங்களில் 19 ஆவது இடம். கடைசியில் இருந்து இரண்டாவது இடம் என்று வேண்டுமானால் பழனிசாமி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!