murasoli thalayangam
“அமெரிக்க அமைதியும் - உலக அமைதியும், ட்ரம்ப் எப்படிக் கையாள்வார் என்பதில்தான் இருக்கிறது” - முரசொலி !
முரசொலி தலையங்கம் - 09.11.2024
அமெரிக்க அமைதியும் உலக அமைதியும்!
அமெரிக்க மக்கள் தங்களுக்கான தலைவராக மீண்டும் டொனால்டு ட்ரம்ப்பை தேர்ந்தெடுத்துள்ளார்கள். மீண்டும் அமெரிக்க அதிபர் ஆகி இருக்கிறார் ட்ரம்ப். இரண்டாவது முறையாக அவர் அதிபர் ஆக பொறுப்பேற்கிறார். தன்மீதான இரண்டு வழக்குகளில் இருந்தும் தப்பி, இரண்டு கொலை முயற்சிச் செயல்களில் இருந்தும் தப்பித்து அதிபர் ஆகிவிட்டார்.
காதில் ரத்தம் வழிய அவர் பேசிய காட்சி, அவரை அதிபர் ஆக்கிவிட்டது. அந்தப் படம் அச்சிடப்பட்ட டி - சர்ட்டுகள் அதிகம் விற்றன. அதுவே வெற்றிக்குக் கட்டியம் கூறியது. ‘அமெரிக்காவைக் காக்க இவரே சரியானவர்’ என அடையாளம் காணப்பட்டார்.
அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப்தான் அதிக வயதில் அதிபராகத் தேர்வு ஆனவர். 78 வயது அவருக்கு. அமெரிக்க அதிபர் தேர்தலில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதிகமான ‘பாப்புலர்’ வாக்குகளைப் பெற்று ட்ரம்ப் அதிபர் ஆகி இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள். சிறிய மாகாணம் என்றால் குறைவான உறுப்பினர்களும், பெரிய மாகாணம் என்றால் அதிகமான உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவார்கள். இதற்கு ‘எலக்டோரல் காலேஜ்’ என்று பெயர். அந்த வகையில் அமெரிக்கா முழுமைக்கும் 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உண்டு. இதில் பெரும்பான்மை பெறும் கட்சி, அதிபர் பதவியைக் கைப்பற்றும். இதுவரை ஜனநாயகக் கட்சியின் அதிபராக ஜோ பைடன் இருந்தார்.
நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்பும் போட்டியிட்டார்கள். தொடக்கத்தில் இருந்தே ட்ரம்ப் முன்னிலையில் இருந்தார். வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணங்கள் என்று சொல்லப்பட்டவைகளில் ட்ரம்ப் முன்னிலை வகித்தார். எனவே, அவர்தான் அதிபர் ஆவார் என்று தொடக்கமே சொல்லி விட்டது.
தேர்தலுக்கு முன்னதாகவே ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்று சொல்லப்பட்டது. காரணம், மிகப்பெரிய அமெரிக்கத் தொழில் அதிபர்கள் அவருக்காக வெளிப்படையாகவே தேர்தல் பணியாற்றினார்கள். அதில் முக்கியமானவர் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மற்றும் ‘டெஸ்லா’ நிறுவனர் எலான் மஸ்க். இவரது ஆதரவு, ட்ரம்புக்கு இளைஞர்கள் வாக்கை ஈர்த்தது. இவர் அதிகமான பணத்தைச் செலவு செய்ததாகவும் அமெரிக்கப் பத்திரிக்கைகள் எழுதுகின்றன.
கடந்த ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விவேக் ராமசாமி, ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்தார். அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள் வாக்குகளை ஈர்க்க விவேக் ராமசாமி பயன்பட்டார். அமெரிக்காவில் பிறந்து இந்துவாக மதம் மாறிய துளசி கப்பார்ட் என்பவர், நான்கு முறை அங்கு எம்.பி.யாக இருந்தவர். இவரும் ட்ரம்பை ஆதரித்தார். கமலா ஹாரீஸுக்கு எதிராக துளசி கப்பார்ட் பேச்சு பெரிதும் பயன்பட்டது. இப்படிப் பன்முகங்கள் ஆதரித்ததால்தான் ட்ரம்புக்கு இதுவரை இருந்த ‘நெகட்டிவ்’ இமேஜ் மாறியது.
அமெரிக்கத் தேர்தலில் ‘இந்தியா’ முக்கியப் பங்காற்றியது. ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியின் ஆதரவு பெற்றவர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரீஸின் முன்னோர் இந்தியர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனால் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா சிலுக்குரி என்பவரின் கணவரான ஜே.டி.வான்ஸை துணை அதிபராக அறிவித்தார் ட்ரம்ப். இது அமெரிக்க இந்தியர்களை ஈர்க்கும் தந்திரம் ஆகும்.
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கான சபைத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இவர்கள் ஆறு பேரும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். ட்ரம்ப் அதிபர் ஆவது, ‘கிரீன் கார்டு’ பெற விரும்பும் பத்து லட்சம் இந்தியர்களைப் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. ‘அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை தருவேன்’ என்று ட்ரம்ப் சொல்லி இருப்பது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்று ஆவார்’ என்று சொல்லப்பட்ட கமலா ஹாரீஸ் தோற்றுப் போனார். அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஒரு பெண்கூட அதிபர் ஆனது இல்லை. அதற்கான வாய்ப்பு 2016 ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்ட போது வந்தது. ஆனால் அவர் தோல்வி அடைந்தார். இப்போது கமலாவும் தோற்றுப் போனார். இனியொரு வாய்ப்பு எப்போது வருமோ எனத் தெரியாது.
அமெரிக்க நாட்டின் வரி உயர்வைக் கட்டுப்படுத்துவது, நாட்டின் குடியேற்றத்தைத் தடுப்பது, உலக நாடுகளின் பிரச்சினைகளும் போர்களும் ஆகியவை பற்றி ட்ரம்ப் அதிகம் பேசினார்.
“என் உயிர் உள்ளவரை உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துக்காகவும் போராடுவேன். கடந்த நான்கு ஆண்டுகளாக நிலவிய பிரிவினையைப் பின்னுக்குத் தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று சொல்லி இருக்கிறார் ட்ரம்ப். அவர் சிந்தனையில் ‘பிரிவினை’ என்று எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. உள்ளூர் பிரச்சினையையும், உலகப் பிரச்சினையையும் ட்ரம்ப் எப்படிக் கையாள்வார் என்பதில்தான் இருக்கிறது அமெரிக்க அமைதியும், உலக அமைதியும்.
Also Read
-
”ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” : UGC தலைவருக்கு கி.வீரமணி கண்டனம்!
-
இவர்கள்தான் சாப்பாடு கொடுக்கணும் : ஆர்டர் போட்ட பிக்பாஸ் : இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார்?
-
அரசு விளையாட்டு போட்டி பேனரில் இஸ்லாமிய சின்னமா?: திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி -TN Fact Check விளக்கம்
-
”கண்ணியத்துடன் பேச வேண்டும்” : சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு!
-
மகப்பேறில் குறையும் இறப்பு சதவீதம்... - புள்ளி விவரத்தோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு !