murasoli thalayangam
“திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம் என்பதற்கு எடுத்துக்காட்டு” - கோவை நூலகம் குறித்து முரசொலி பாராட்டு !
முரசொலி தலையங்கம் (08-11-2024) :
பகுத்தறிவுத் தந்தை பெயரால் அறிவியல் மையம்!
தலைநகர் சென்னையில் பேரறிஞர் அண்ணா பெயரில் மாபெரும் நூலகம் அமைத்தார் தமிழினத் தலைவர் கலைஞர்! அத்தகைய பெருமைமிகு தலைவர் கலைஞர் பெயரால் மதுரையில் மாபெரும் நூலகம் அமைத்தார் திராவிட நாயகர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
இதோ பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரில் நூலகமும், அறிவியல் மையமும் தொழில் நகரமாம் கோவையில் அமைக்கப்படும் என்றும், அது 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் திறப்பு விழா காணும் என்றும் அறிவித்திருக்கிறார் திராவிட நாயகர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
தந்தை பெரியாரே அறிவுச் சுரங்கம். அவரது பெயரால் நூலகம் அமைவது பொருத்தமானது. எதையும் பகுத்தறிந்து பார்க்கச் சொன்னவர் அவர். ‘நான் சொன்னதையும் நம்பாதே! பகுத்தறிந்து பார்’ என்று சொன்ன அறிவுலக மேதை அவர் தான். ‘நான் சொன்னதே சரி, அதை மட்டுமே நம்புங்கள்’ என்று சொல்லி வந்த தத்துவவாதிகள் வரிசையில், ‘நான் சொன்னதை அப்படியே நம்பாதே, உனது அறிவு ஏற்றுக் கொண்டால் மட்டுமே நம்பு’ என்று சொன்னவர் தந்தை பெரியார் மட்டுமே. இதுதான் அறிவியல் சிந்தனை ஆகும்.
அறிவியல் என்றால் இயற்பியல், வேதியியல் விஞ்ஞானிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். சென்னையில் பெரியார் பெயரில் ஒரு கோளரங்கம் அமைக்கப்பட்டபோது, ‘பெரியாருக்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று ஒரு தற்குறி கேட்டது. இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறது. கருவறையிலேயே அறிவை அடமானம் வைத்துவிட்டு வந்தவைகளுக்கு எதுவும் தெரியாது.
“அறிதலே அறிவு. அறிவின் கூர்மையே பகுத்தறிவு” என்றார் தந்தை பெரியார். கட்டுப்பாடுகள் அற்ற சிந்தனைதான் பகுத்தறியத் தூண்டும். மதம் - சாதி - சுற்றுச்சூழல் - மனம் - குடும்பம் - நாடு - ஊர் - மக்கள் என்ற சார்பற்றுச் சிந்தித்தலைத் தான் அறிவியல் நிலை என்கிறோம். இப்படிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். சுயமரியாதை உணர்வின் மூலமாக சுயசிந்தனை மனிதனை உருவாக்க நினைத்தவர் அவர். ‘தன்னை நம்பு’ என்று சொல்லி தன்னம்பிக்கையை ஊட்டியவர் அவரே.
கட்டுப்பாடுகளைத் துறந்த அவரது சிந்தனைகள்தான் ஒவ்வொரு மேடைகளிலும் வெளிப்பட்டது. 1940களின் தொடக்கத்தில் இரண்டு மூன்று திருமண நிகழ்வுகளில் பெரியார் பேசிய பேச்சை பேரறிஞர் அண்ணா கேட்கிறார்கள். உலகப்புகழ் பெற்ற புத்தகங்களை எல்லாம் படித்த பேரறிஞருக்கு, ‘கல்லூரி காணாத கிழவர்’ பேசிய பேச்சு அதிர்ச்சியாக இருக்கிறது. அண்ணாவே நிருபராக மாறி, அந்த உரையைக் குறிப்பாக எடுக்கிறார். அதனை ‘திராவிட நாடு’ இதழில் தொடர் கட்டுரைகளாக எழுதுகிறார். 21.3.1943, 28.3.1943 ஆகிய நாளிட்ட இதழ்களில் அது வெளியானது. அதுதான் பெரியாரின் புகழ்பெற்ற நூலான ‘இனி வரும் உலகம்’ என்பது ஆகும்.
“கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்” என்று சொல்கிறார் பெரியார். இன்று செல்போன் இல்லாத ‘சங்கி’யே இல்லை. “உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் இருக்கும்” என்கிறார். இன்று நடைமுறையில் அது இருக்கிறது. “பிள்ளைப் பேறுக்கு ஆண் பெண் சேர்க்கைகூட தேவைப்படாது” என்கிறார் அப்போது. 1940 ஆம் ஆண்டு அவர் சொன்னது, 1974 ஆம் ஆண்டு “டெஸ்ட் டியூப் பேபி” என உருவாக்கப்பட்டது. “குடும்பக் கட்டுப்பாடு சர்வசாதாரணம் ஆகும்” என்றார். ஆகிவிட்டது. “உணவு கேப்சூல்கள் வந்துவிடும்” என்றார். வந்துவிட்டது. “தண்ணீரை விலைகொடுத்து வாங்குவீர்கள்” என்றார். வாங்கிக் கொண்டு இருக்கிறோம். “பெண்கள், அனைத்து வேலைகளுக்கும் வந்துவிடுவார்கள்” என்றார். வந்துவிட்டார்கள். இவை அனைத்தும் 80 ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் சொன்னவை. இன்று நடப்பவை.அதனால்தான் அவரை ‘அறிவுலக ஆசான்’ என்கிறோம். இது அறிவைப் பயன்படுத்த ஆர்வம் இல்லாதவர்க்குப் புரியாது.
“யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது. அதைச் சிந்தி!” என பெரியார் சொல்லியிருக்கிறார். பெரியாரின் கருத்துக்கள் அறிவியலோடு ஒத்துப்போகின்றன. குறிப்பாக இந்த வார்த்தை நிலவுப் பயணத்திற்கு ஒன்றிப் போகிறது.
“நிலவில் நீர் இல்லை என்று சாஸ்திரத்தில் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. நிலவு நமக்கு மிகவும் பக்கத்தில்தான், வெறும் 3 லட்சம் கி.மீட்டரில்தான் இருக்கிறது. ஆக பூமியில் தண்ணீர் இருக்கும் போது நிலவில் மட்டும் எப்படி தண்ணீர் இல்லாமல் இருக்கும்? என்று கேள்வி எழுந்தது. இதற்கு வள்ளுவரும், பெரியாரும்தான் நான் இப்படி சிந்திக்கக் காரணம். மற்றவர்களைவிட வித்தியாசமாக யோசித்ததால்தான் நம்மால் நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது” - இப்படிச் சொன்னவர், ‘இஸ்ரோ’ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. சிங்கப்பூரில் சொன்னார் அவர்.
அத்தகைய கூர்மையுள்ள அறிவாற்றல் உள்ள சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் வளரவும் வாழவும் வேண்டும் என்று விரும்புகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம் என்பதற்கு எடுத்துக்காட்டாக எழப் போகிறது கோவையில் அய்யா பெயரில் அறிவுக் கோட்டம்!
Also Read
-
29 மாவட்டங்கள் - 141 அரசுப் பள்ளி : 754 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
பறக்க தயாராக இருந்தபோது இயந்திர கோளாறு : உயிர் தப்பிய 172 பயணிகள் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
-
“சிலை திருட்டு என்பது வெகுவாக குறைந்துள்ளது” - அமைச்சர் சேகர்பாபு பேட்டி !
-
திராவிட மாடல் திட்டத்தால் உயர்கல்வியில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை : தமிழ்நாடு அரசு!
-
”மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கும் தெரியும்” : ஒன்றிய அரசிடம் காட்டமாக சொன்ன உச்சநீதிமன்றம்!