murasoli thalayangam
நான்காண்டு காலமாக இருந்த மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி! : முரசொலி தலையங்கம்!
இந்திய - சீன எல்லையில் இருநாட்டுப் படைகளும் தங்களது நாடுகளுக்குள் நகரத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியே ஆகும். இதன் மூலமாக உலகுக்கு 'அமைதியே சூழ்க' என்று இரு நாடுகளும் சொல்லும் உயரத்தைப் பெற்றுள்ளன.
கடந்த நான்காண்டு காலமாக இருந்த மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இந்த நகர்வு அமைந்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி அவர்களும், சீன அதிபர் ஷி ஜின் பிங் அவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட இறுதி முடிவின்படி இந்த நகர்வு நடைபெற்றுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தை இது. கடந்த அக்டோபர் 21 ஆம் நாள் இருநாடுகளுக்கும் ஒரு ஒப்பந்தம் நிறைவேறியது. கிழக்கு லடாக் எல்லையில் டெம்சோக், டெப்சாங் சமவெளி பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு படைகளாலும் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை அகற்ற வேண்டும். ராணுவக் கருவிகளையும், பொருட்களையும் அங்கிருந்து பின்புறமாக எடுத்துச் செல்ல வேண்டும். மோதலைத் தவிர்க்க இருநாட்டு ராணுவ வீரர்களும் கூட்டாக கண்காணிப்புப் பணிகளைச் செய்ய வேண்டும். அதனடிப்படையில் அக்டோபர் 25 முதல் படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.
2014 முதல் இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல் அதிகமாகி வந்தது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டே இன்னொரு பக்கம் இதுபோன்ற செயல்களும் நடைபெற்று வந்தன. கடந்த பத்தாண்டு களில் 18 முறை இருநாடுகளுக்கும் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் உள்ளது. அதே நேரத்தில் மோதலும் தொடர்ந்தது.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 40 வீரர்களும் பலியானவர்கள். கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்த மோதல் நடைபெற்றது. இதில் இருந்து இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களைக் குவித்து வந்தது. சீன நாட்டு செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீன மொழியில் பெயர்கள் வைத்து அதிர்ச்சியைக் கொடுத்தது சீனா. 2017 ஆம் ஆண்டு 6 பகுதிகளுக்கும், 2021 ஆம் ஆண்டு 15 பகுதிகளுக்கும், 2023 ஆம் ஆண்டு 11 பகுதிகளுக்கும், 2024 ஆம் ஆண்டு 30 பகுதிகளுக்கு பெயர் வைத்தது சீனா.
அருணாசலப் பிரதேசத்துக்கு சீன நாடு வைத்துள்ள பெயர் 'ஷாங்னான்' என்பது ஆகும். தெற்கு திபெத்தின் ஒரு பகுதி இது என்றும், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. "சீனாவின் பகுதிகளுக்கு உரிமைகள் கோருதல் மற்றும் இறையாண்மை உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத் தில் அந்நிய நாட்டு மொழிகளில் உள்ள இடங்களின் பெயர்கள் நேரடியாக மேற்கோள் காட்டப்படவோ அல்லது அங்கீகாரமின்றி மொழிபெயர்க்கப்படவோ கூடாது" என்பது சீனாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் 13 ஆவது பிரிவாம். அந்தப் பிரிவின்படி இந்த பெயர் மாற்றத்தை அந்த நாடு செய்ததாம்.
அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூலாக சொன்ன பதில் என்ன தெரியுமா? "உங்கள் வீட்டுக்கு நான் பெயரை மாற்றுவதன் மூலம், அது எனக்குச் சொந்தமாகி விடுமா? இந்த மாநில இடங்களுக்கு பெயரை மாற்றுவதன் மூலம் எதுவும் நடந்துவிடாது" என்று சொன்னார்.
அதேநேரத்தில் இந்திய - சீன பேச்சுவார்த்தையும் மறுமுனையில் நடைபெற்று வந்தது. பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்குப் பகுதியில் தங்கி இருந்த படைகள் 2021 ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டன. கோக்ரா பகுதியில் இருந்த படைகள் 2022 ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டன.
இப்போது கிழக்கு லடாக்கில் படை விலக்கல் நடந்துள்ளது. இதன்பிறகு எல்லையில் போர் பதற்றம் தணியும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி இருக்கிறார். இந்திய - சீன எல்லைப் பகுதியில் அமைதி திரும்புவதற்கான முதல் நடவடிக்கையாக இதனை பார்க்க வேண்டும்.
எல்லையில் பதற்றம் தணியும். இதன் பிறகு எல்லைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி இருக்கிறார். இந்தப் பேச்சு மீண்டும் மோதலுக்கு வழிவகுப்பதாக அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
'பரந்த மனத்துடன் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சொல்லி இருக்கிறார். அதனை செயல்வடிவத்தில் நாம் பார்க்கவேண்டும். 2020ஆம் ஆண்டுக்கு முந்தைய சூழலை உருவாக்க வேண்டும். எல்லை யில்
அமைதிக்கு முன்னுரிமை அளிக்க இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
Also Read
-
கடந்த ஆண்டை விட தீபாவளி விற்பனை ரூ.10 கோடி அதிகம் : சாதனை படைக்கும் ஆவின் நிர்வாகம் !
-
ஒரே நாளில் 2.31 இலட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்! : தீபஒளித் திருநாள் எதிரொலி!
-
திருச்செந்தூரில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு !
-
ஒரே நேரத்தில் இரு கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள்! : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
-
“முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் செயல்களையும் – திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்!”: முதலமைச்சர் உறுதி!