murasoli thalayangam
கத்துக்குட்டிகளுக்கு இது தெரியாது, தமிழ்நாடு என பெயர் வைக்க திமுக ஆட்சிக்கு வரவேண்டியிருந்தது - முரசொலி !
முரசொலி தலையங்கம் (26-10-24)
திராவிடமும் தமிழும்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் -– என்று நாம் சொன்னால் –- சில திருகல்காரர்கள் – ‘தெக்கணமும் அதிற்சிறந்த தமிழ்த்திரு நல் நாடும்’ என்று சொல்கிறார்கள். அவர்களைப் பார்த்து சிரிப்பே வருகிறது!
திராவிட நல் திருநாடும் –- என்று சொல்லும் நாம், ‘தமிழ்த் திருநாட்டுக்கு’ எதிரானவர்கள் அல்ல. இந்த மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய ஆட்சியே ‘திராவிட’ முன்னேற்றக் கழக ஆட்சி தான்!
18.7.1967 அன்று தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னான நாள். இதோ பேரறிஞர் அண்ணா –- முதலமைச்சர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் பேசுகிறார்கள்...
“சட்டமன்றத் தலைவர் அவர்களே, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்ற இந்த நாளில் “தமிழ்நாடு” என்று நான் சொன்னதும் “வாழ்க” என்று அவை உறுப்பினர்கள் சொல்லுவதற்குத் தங்களுடைய அனுமதியைக் கோருகிறேன்.
மாண்புமிகு திரு சி. என். அண்ணாதுரை : தமிழ்நாடு!
உறுப்பினர்கள் : வாழ்க!!
மாண்புமிகு திரு சி. என். அண்ணாதுரை : தமிழ்நாடு!
உறுப்பினர்கள் : வாழ்க!!
மாண்புமிகு திரு சி. என். அண்ணாதுரை : தமிழ்நாடு!
உறுப்பினர்கள் : வாழ்க!!
-– இதை எல்லாம் செய்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மலர வேண்டி இருந்தது. பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வர வேண்டி இருந்தது.
மொழிவாரியாக 1956 ஆம் ஆண்டு மாகாணங்கள் அமைந்து சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திர, கேரள, கர்நாடகப் பகுதிகள் பிரிந்த பிறகு அன்றைய மதராஸ் மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுவதற்கான கிளர்ச்சியை திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியது. ‘இனியும் தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டாமல் இருப்பதைப் பார்த்துக் கொண்டு நான் ஏன் இனியும் உயிரோடு இருக்க வேண்டும்?” என்று கேட்டார் தந்தை பெரியார் அவர்கள்.
6.2.1956 அன்று சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கழகப் பொதுச்செயலாளர் பேரறிஞர் அண்ணா கலந்து கொண்டார். “சென்னை ராஜ்யத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தும், கேரள மாநிலத்துடன் சேர்க்கப்பட்ட எல்லைத் தமிழ்ப்பகுதிகளை தமிழ்நாட்டுடன் சேர்த்தும், மாநிலப் புது அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்று சட்டசபை உறுப்பினர்களையும் அரசையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தி.மு.க. பங்கெடுத்தது. இத்தீர்மானத்தை அன்றைய ஒன்றிய அரசு மதிக்கவில்லை.
இந்தக் காலக்கட்டத்தில் கழகம், சட்டசபையில் இல்லை. ஆனால் கழக ஆதரவுடன் வெற்றி பெற்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி அவர்கள் இருந்தார்கள். அவர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 28.3.1956 அன்று வாதாடினார். 1956 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாளை ‘தமிழ்நாடு அமைப்பு நாள்’ என்று கொண்டாடினார் பேரறிஞர் அண்ணா. 1956 மே மாதம் திருச்சியில் கூடிய தி.மு.க. இரண்டாவது மாநில மாநாட்டில், ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்படாததைக் கண்டித்து தீர்மானம் போடப்பட்டது. இந்தத் தீர்மானத்தை பேராசிரியர் க.அன்பழகன், புதுவை சிவப்பிரகாசம், கலையழகன், சுப்பையா, வாணிதாசன் ஆகியோர் கொண்டுவந்தார்கள்.
16.11.1957–ல் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் சென்னை வரும் பிரதமர் நேருவுக்கு கருப்புக் கொடி காட்ட மீண்டும் முடிவெடுக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘தமிழ்நாடு’ என்ற தனித்தலைப்பில் தி.மு.க. நிலைப்பாடு சொல்லப்பட்டது.
“தேவிகுளம், பீர்மேடு, திருத்தணி போன்ற தமிழ்ப்பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்படுவதற்கும், சென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடப்படுவதற்கும் முயற்சிக்கப்படும். இருமொழி, மும்மொழி, மாநில அமைப்பு ஏற்பாட்டினை எதிர்த்துப் போராடும்” என்று சொல்லப்பட்டது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பூபேஷ் குப்தா அவர்கள் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதன் மீது நடந்த விவாதத்தில் அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆதரித்துப் பேசினார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் ப.உ.சண்முகம் இக்கோரிக்கையை வைத்தார். இதையொட்டிப் பேசிய தலைவர் கலைஞர் அவர்கள், “...உறுப்பினர் ப.உ.சண்முகம் அவர்கள் கூறியது போல நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கவில்லை, உதகையிலுள்ள ஒரு வீட்டுக்கு ‘தமிழகம்’ என்று கனம் அமைச்சர் சுப்பிரமணியம் வைத்துள்ளார். நாட்டுக்கு வைக்க வேண்டிய ஒரு பெயரை ஒரு வீட்டுக்கு வைத்திருக்கிறார். ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைப்பதற்காக சங்கரலிங்கனாரின் பிணம் வீழ்ந்தது.
உங்களுக்கு ஒரு எழுத்துக்கு ஒரு பிணம் வீதம் வேண்டுமென்று சொன்னால் தயாராக இருக்கிறோம். ஐந்து பிணங்கள் தருவதற்குத் தயாராக இருக்கிறோம். எழுத்துக்கு எத்தனை பிணங்கள் வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு என்று இந்த நாட்டுக்குப் பெயரிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்....” (தமிழ்நாடு சட்டமன்றத்தில் 10.8.1960 அன்று ஆற்றிய உரை) என்று கோரிக்கை வைத்தார்.
1961 சனவரி 30 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் சின்னத்துரை ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்து உரையாற்றினார். சின்னத்துரையின் தீர்மானத்தின்மீது விவாதம் நடந்தது. தி.மு.க. சார்பில் இதனை ஆதரித்து பேராசிரியர் அன்பழகன் பேசினார்.
1962 –- சூலை 27 : ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட தி.மு.க. உறுப்பினர் கே.ஏ.மதியழகன் சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பினார். “தமிழ்நாடு என்று ஏன் பெயர் சூட்டவில்லை?” என்று கேட்டார். “ஏன் தயங்குகிறீர்கள்?” என்று 1964 ஆம் ஆண்டும் கேட்டார் மதியழகன்.
1964 –- சூலை 23 : ‘தமிழ்நாடு’ என்று பெயரிடும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் -– என தி.மு.க. உறுப்பினர் இராம. அரங்கண்ணல் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 23.7.1964 அன்று தி.மு.க. உறுப்பினர்கள் நாவலர் நெடுஞ்செழியனும் புலவர் கா.கோவிந்தனும் வலியுறுத்திப் பேசினார்கள்.
இவை எல்லாம் இன்று கதறும் கத்துக்குட்டிகளுக்குத் தெரியாது. திராவிட -– தமிழ் ஆகிய இருசொற்களும் ஒரே பொருளைத் தருபவைதான்.
இப்போது பிரச்சினை, தமிழ்த்தாய் வாழ்த்தில் வரியை ஏன் நீக்கினார்கள் என்பதுதானே தவிர, புதுப்பாட்டில் என்ன வரியைப் போடுவது என்பது அல்ல!
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!