murasoli thalayangam
பீகாரில் இருந்து வந்து 'தமிழ் மக்கள் இனவாதிகள்' என்று சொல்லும் அருகதை எவருக்கும் இல்லை - முரசொலி காட்டம்!
முரசொலி தலையங்கம் (23-10-24)
பயிற்று மொழி குறித்த குதர்க்கம்
“இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களில் தமிழ்நாடு நீங்கலாக 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது” என்ற அவதூறை ஆளுநர் ரவி சொல்லி இருக்கிறார். இதன் மூலமாக இந்திக்கு எதிராக தமிழ்நாடுதான் இருக்கிறது என்ற மாயத்தோற்றத்தை அவர் உருவாக்க முயற்சிக்கிறார். தமிழ்நாட்டு நாளிதழ் ஒன்றில் தற்குறித்தனத்துடன் வெளியான கட்டுரை ஒன்றை எடுத்து அதனையே தனது உரையாக ஆளுநர் தயாரித்ததன் விளைவுதான், இந்த தவறான தகவல் ஆகும்.
27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் இல்லை என்பதுதான் உண்மை. இதனை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் விளக்கமாக போட்டு உடைத்துவிட்டார்.
*பல இந்தி மாநிலங்களில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவது இல்லை. ஆங்கில வகுப்புகளை நடத்துவது இல்லை. *பல இந்தி மாநிலங்களில் இந்தி மொழிக்கு நெருக்கமான சமஸ்கிருதம், போஜ்புரி, பஞ்சாபி ஆகிய மொழிகளே கற்றுத் தரப்படுகிறது. தென்னிந்திய மொழிகள் கற்றுத்தரப்படுவது இல்லை என்று சொல்லி இருக்கிறார் ப.சிதம்பரம் அவர்கள்.
இந்தி பேசும் மாநிலங்களில் பெரும்பாலும் ஒருமொழித் திட்டம்தான் இருக்கிறது. இதனை ஆளுநர் ரவி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதற்காகத் தான் மும்மொழித் திட்டம் என்ற முக்காடு போட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றும், டாக்டர் படித்து வருபவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றும் இந்த மெத்தப்படித்த மேதாவி சொல்வதும் இதற்காகத்தான். இந்தியை மட்டும் கற்பிக்க வைத்து பீகாருக்கும் உ.பி.க்கும் தமிழ்நாட்டு இளைஞர்களைக் கொத்தடிமையாக அனுப்ப திட்டம் போடுகிறார் இந்த மாஜி ஐ.பி.எஸ். அதிகாரி.
தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் தமிழ்நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு எதிராக வாழ நினைக்கிறார் ரவி. 'தமிழ்நாடு' என்பது இங்கு நாம் நிறைவேற்றி வைத்துள்ள சட்டம். அதனை மீறி, 'தமிழகம்' என்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பது நமது சட்டம். அதில் தித்திக்கும் திராவிட வரியை நீக்குகிறார். இருமொழிக்கொள்கை என்பது தமிழ்நாட்டின் சட்டம். அதற்கு எதிராகவே பேசுகிறார். இப்படி சட்டமீறலை நடத்தவே அவர் ஆளுநராக வந்து தொலைத்துள்ளார். இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். தமிழும், ஆங்கிலமும்தான் நமது இருமொழிக் கொள்கை ஆகும். இந்திக்கு இடமில்லை என்பதுதான் அந்தச் சட்டம் ஆகும்.
சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை 1963 சனவரி 23 அன்று முதல்வர் அண்ணா கூட்டினார். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது ... “தமிழும் மற்ற மொழிகளும் மைய அரசின் ஆட்சி மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்; அதற்காக அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அந்தக் காலம் வரும் வரையில், ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் ஆட்சி மொழிகள் பற்றிய இயல் அந்த வகையில் திருத்தப்பட வேண்டும் என்று இந்தப் பேரவை வலியுறுத்துகிறது. ஆட்சி மொழிகள் திருத்தச் சட்டத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இந்தி பேசாத பகுதியினருக்குப் பளுவும், சங்கடத்தையும் தருவதுடன், மும்மொழித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்துவதன் மூலம், இந்தித் திணிப்பை நடத்தி, இறுதியில் இந்தியையே ஆட்சி மொழியாக ஆகிவிடுவது என்ற நோக்கத்துடன் அமைந்திருக்கிறது” என்று இப்பேரவை கருதுகிறது.
மைய அரசின் இந்தித் திணிப்புத் திட்டத்தை இந்தப் பேரவை ஏற்க மறுக்கிறது. மைய அரசின் மொழித் தீர்மானத்தை இந்த அரசு செயல்படுத்த மறுக்கிற வகையிலும், தமிழக மக்களும், மாணவர்களும் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிற முறையிலும், தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும், மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கி விட இப்பேரவை தீர்மானிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திக்கு தரப்பட்டுள்ள சிறப்பு நிலை நீக்கப்பட வேண்டும் என்றும்; இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளுக்கும் சமநிலை வழங்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் பிற மொழிகளுக்குக் குறைவான நிலை தரப்பட்டுள்ளப் பிரிவுகளைத் திருத்த வேண்டும் என்றும் இப்பேரவை வலியுறுத்துகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும், மைய அரசு சமமான அளவில் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் இப்பேரவை வலியுறுத்துகிறது”என்று முழங்கினார் முதல்வர் அண்ணா!
இத்தகைய இருமொழிக் கொள்கை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இயங்கி வருகிறது. 3.1.1977 முதல் கல்வி என்பது பொது அதிகாரப் பட்டியலுக்குப் போனதால் சில சிக்கல்கள் ஏற்பட்டது. மத்திய பள்ளிகள், சி.பி.எஸ்.சி. பள்ளிகள் போன்றவற்றில் இந்தி கற்பிக்கப்படுவதற்கு தமிழ்நாடு தடை போடவில்லை. விரும்பி கற்றுக் கொள்பவர்களுக்கு எந்தத் தடையாகவும் தமிழ்நாடு அரசோ, தமிழ் உணர்வாளர்களோ, திராவிட இயக்கமோ இல்லை. இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோமே தவிர, இந்தி மொழியை அல்ல.
இந்தி இருக்கக் கூடாது, அந்த மொழியை அழிக்க வேண்டும் என்று நாம் எந்தப் படையெடுப்பையும் நடத்தவில்லை. அது அதன் மண்ணில் வாழட்டும், செழிக்கட்டும். அம்மக்கள் அம்மொழியை வளர்க்கட்டும். அதன் மூலமாக வாழட்டும் என்ற பெருந்தன்மை நமக்கு இருக்கிறது. ஆனால் பீகாரில் இருந்து படையெடுத்து வந்துவிட்டு, 'தமிழ் மக்கள் இனவாதிகள்' என்று சொல்லும் அருகதை எவருக்கும் வழங்கப்படவில்லை. தாய்மொழியாகிய தமிழ், உலகத்துக்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகிறது.
2006 ஆம் ஆண்டின் தமிழ்நாடு (தமிழ் மொழி கற்கும்) சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும், பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத மாணவர்களும் தமிழ் மொழியுடன் சேர்த்து அவர்தம் தாய் மொழியையும் விருப்பப் பாடமாக படித்து தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. எனவே, இங்கு மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியையும், ஆன்மிக மொழி என்ற பெயரால் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் எந்த முயற்சியையும் தமிழ்நாடு எதிர்க்கும். திணிப்பவரை எதிர்க்கும். எதிர்ப்பவரையும் எதிர்க்கும்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!