murasoli thalayangam

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூடப்பார்த்ததுதான் பாஜக அரசு - அம்பலப்படுத்திய முரசொலி !

மோடி தமிழை வளர்க்கிறாரா ?

முரசொலி தலையங்கம் (22-10-24)

சூரியனைக் கை கொண்டு மறைப்பதைப் போல, தான் கலந்து கொண்ட மேடையில் ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்' என்ற சொல்லை நீக்கி தனது மன அரிப்பைத் தீர்த்துக் கொண்ட ஆளுநர் ஒரு அறிக்கையை விடுத்துள்ளார். அதில், 'மோடி தமிழை வளர்த்து வருகிறார்' என்று சொல்லி இருக்கிறார். அது எந்தத் தமிழை என்றுதான் தெரியவில்லை.

“பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதலமைச்சர் நன்றாக அறிவார். பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார். ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளைச் செய்துள்ளேன்.” என்று ஆளுநர் ரவி சொல்லி இருக்கிறார்.

தமிழை வளர்ப்பதற்கு பல்வேறு அமைப்புகளை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செய்து வருவதாகச் சொல்கிறாரே தவிர, அது என்ன அமைப்புகள் என்பதைச் சொல்ல வேண்டாமா? இவர்கள் ஏனோ தானோ என்று வெறுப்பாக நடத்தி வரும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் கூட, தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட அமைப்பு தானே தவிர, பா.ஜ.க. உருவாக்கிய அமைப்பு அல்ல. அந்த அமைப்பையும் சிதைக்கத்தானே நினைத்தார்கள். இப்போதும், 'உள்ளே புகுந்து' கெடுக்கும் காரியங்கள்தானே நடந்து கொண்டு இருக்கிறது? செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தையே மூடத் திட்டமிட்ட அரசுதான் பா.ஜ.க. அரசு. சென்னையில் தனித்து இயங்கிய அந்த நிறுவனத்தை மைசூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்க பா.ஜ.க. அரசு திட்டமிட்டது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பிறகுதான் அந்த முடிவை ஒத்தி வைத்தார்கள்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. அதாவது, புதிய தேசிய கல்விக் கொள்கை ஆவணத்தில், “அனைத்து செம்மொழி ஆராய்ச்சி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்படும்; அதே நேரத்தில், பல்கலைக்கழகத்திற்குள் அவை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிச் சொல்லி தனித்து சென்னையில் இயங்கும் நிறுவனத்தை காலி செய்யப் பார்த்தார்கள். 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தின் ஒரு துறையாக இணைக்க பா.ஜ.க. அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு அப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு தான் பின் வாங்கினார்கள். அந்த அமைப்பையாவது முறையாக நடத்தினார்களா என்றால் இல்லை.

2008--ஆம் ஆண்டு மே 19 முதல் செம்மொழி தமிழாய்வு நிறுவனமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது முயற்சியால் செயல்பட்டு வருகிறது. 2011 கழக ஆட்சி முடிவுற்ற நிலையில் இருந்து, அதனை செயல்படாத அமைப்பாக மாற்றி வைத்திருந்தார்கள். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும். இதில் ஒன்றிய அரசால் மூன்று வகையான விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட வேண்டும். 'கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலோவுக்கு 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன்பிறகு பத்து ஆண்டுகளாக யாருக்கும் வழங்கப்படவில்லை. 2011 - – 16 வரையிலான ஆண்டுக்கான விருது அறிவிப்பு 2017-இல் வெளியானது. 2020 ஏப்ரலிலும் விருது அறிவிப்பு வெளியானது. இதற்கான மனுக்கள் பெறப்பட்டாலும் விருதுகள் வழங்கப்படவில்லை.

"மத்திய அரசின் கீழ் செயல்படும் தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநரை நியமிப்பதில் 14 ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விருதுப்பணிகளும் முடங்கிவிட்டன” என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் இதற்குக் காரணம் சொன்னார்கள். 2011 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான விருதுகள் வழங்கப்படவே இல்லை. பத்து ஆண்டுகள் அந்த விருதை யாருக்கும் வழங்கவே இல்லை. கழக அரசு பொறுப்பேற்றவுடன் விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 22.01.2022 அன்று நடைபெற்ற விழாவில் பரிசுகள் அளிக்கப் பட்டன. இதுதான் இவர்கள் தமிழை வளர்க்கும் லட்சணம் ஆகும்.

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி நிச்சயம் இடம் பெற வேண்டும், கல்லூரிகளில் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைக் கொண்டு வரவேண்டும், போட்டித் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும், இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும், ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்களின் இந்தி மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் -- இப்படி இந்திய மயமாகவே இருக்கிறது அந்த அறிக்கை. இதில் எங்கே இருக்கிறது தமிழ் வளர்ச்சி? “சமஸ்கிருதம், மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும்” என்கிறது இவர்களது புதிய கல்விக் கொள்கை. இதில் எங்கே இருக்கிறது தமிழ் வளர்ச்சி? தமிழ்நாட்டு ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு - தமிழ்நாட்டு மக்களை எரிச்சல் படுத்தும் நோக்கத்தோடு மட்டும் தினமும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை சகித்துக் கொண்டிருக்க வேண்டுமா இனியும்?

Also Read: ஆளுநருக்கு சவால்விட்ட முதல் பத்திரிகையாளர் முரசொலி செல்வம்! : ‘தி இந்து’ என்.ராம் புகழுரை!