murasoli thalayangam

தமிழ்த்தாய் வாழ்த்து : ஆரியத்தின் இன்னொரு வடிவம்தான் தமிழ்த் தேசியம் பேசுவோர் - முரசொலி காட்டம் !

'அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' !

முரசொலி தலையங்கம் (21-10-2024 )

“திராவிடம் என்ற சொல்லுக்கு ஆரியம் அஞ்சி நடுங்குவதைப் போல அவர்கள் வேறு எந்தச் சொல்லுக்கும் அஞ்சி நடுங்குவதை நான் கண்டதில்லை” என்று சொன்னார் தந்தை பெரியார். ஆரிய ரவி அஞ்சுவதைப்போல வகுப்புவாதத் தேசியங்கள் அனைத்துமே திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை காலத்துக்கு அஞ்சுவார்கள்? 'திராவிடம்' வளர வளர அஞ்சிக் கொண்டே இருப்பார்கள். அவர்களது அச்சத்தைப் பார்க்கும் போது நமக்கு இன்பமாக இருக்கிறது! “உங்கள் கோத்திரம் என்ன?” என்று விவேகானந்தர் கேட்டபோது, "தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்னவர் தான் சுந்தரனார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 'மனோன்மணீயம்' தீட்டிய சுந்தரனார் 1891 ஆம் ஆண்டு எழுதினார்கள்.

அது எழுதப்பட்ட காலத்தை விட, 1970களின் தொடக்கத்தில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் அதனை மொழிவாழ்த்துப் பாடலாக அரசாணை வெளியிட்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாட வைத்ததன் மூலமாக அதிகக் கவனத்தை ஈர்த்தது. 'திராவிட மாடல்' ஆட்சியை நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனை மாநிலப் பாடலாக அரசாணை வெளியிட்டு - இசைத்தட்டாக இல்லாமல் அனைவரும் பாடியாக வேண்டும் என்று கட்டளையிட்ட பிறகு ஆரியமும், அவர்களது அடிவருடிகளும் இன்னும் அதிகமாகத் துடிக்கிறார்கள்.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து

வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே! -என்பதுதான் அரசாணைப்படி பாட வேண்டிய பாடல். சென்னை தூர்தர்ஷன் -- தொலைக்காட்சி பொன் விழாவுடன் சேர்த்துக் கொண்டாடப்பட்ட இந்தி மொழி மாதக் கொண்டாட்டத்தில் ஒழுங்காகப் பாடவில்லை. அரசாணையை மீறும் வகையில் பாடி இருக்கிறார்கள். தூர்தர்ஷன் யார் கையில் இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' -- என்ற சொல்லையே விட்டு விட்டுப் பாடி இருக்கிறார்கள். அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். மற்ற வரிகளைக் கூட ஒழுங்காகப் பாடவில்லை. முன்னும் பின்னுமாக என்னென்னவோ பாடுகிறார்கள்? ஏனோ தானோ என்று பாட வைத்துள்ளார்கள். இது தமிழுக்கு திட்டமிட்டு இழைக்கப்பட்ட அவதூறு ஆகும். திராவிட வெறுப்பு மட்டுமல்ல, தமிழ் வெறுப்பும் அந்தக் காட்சிகள் மூலமாகத் தெரிகிறது. இத்தகைய ஜென்மங்கள் எதற்காக தமிழில் தொலைக்காட்சி நடத்த வேண்டும்? சமஸ்கிருதத்தில் நடத்தித் தொலைய வேண்டியதுதானே? இவ்விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி கண்டித்திருக்க வேண்டாமா? அந்தத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டாமா?

மாறாக, இதனைக் கேள்வி கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மீது பாய்கிறார் ரவி. 'ஆளுநரா? ஆரியநரா?” என்று முதலமைச்சர் கேட்டதில் என்ன தவறு இருக்க முடியும் ? ஆளுநராக வந்தது முதல் ஆரிய - திராவிட வகுப்பெடுத்து வருபவர் அவர்தானே? ஏதோ பிரிட்டிஷ்காரர்கள் செய்த பிரிவினை என்று உளறிக் கொண்டிருப்பவர் அவர்தானே? அவர் கலந்து கொண்ட விழாவில், 'திராவிட நல் திருநாடும்' என்று சொல்வதற்கு கூச்சம் இருக்குமானால், “திராவிட நல் திருநாட்டில்' குடியிருப்பதற்கு வெட்கமாக இல்லையா? “திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டு விட்டுப் பாடச் சொல்வாரா?” என்று கேட்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதற்கு ஆரியநரால் இதுவரை பதில் சொல்லப்படவில்லை. “பஞ்சாப் சிந்து குஜராத மராட்டா திராவிட உத்கல பங்கா” -- என்ற இரண்டு வரிகளை விட்டுவிட்டு பாடும் துணிச்சல் மாஜி ஐ.பி.எஸ். அதிகாரிக்கு உண்டா? தமிழ்த்தாய் வாழ்த்து என்றால் இளக்காரமா?

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டார் என்பது, இழிகுண மனிதர்களுக்குத் தெரியாது. மனோன்மணீயப் புலவர் சுந்தரனார் எழுதிய பாடலின் முழு வடிவத்தை தமிழ்த்தாய் வாழ்த்தாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வைக்கவில்லை. அதில்தான் அந்தத் திராவிடத் தலைவனின் பெருந்தன்மை அடங்கி இருக்கிறது.

“பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்

எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் கலிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதிரத்து,

உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்

ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாஉன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!” -- என்பதுதான் முழுப்பாடலாகும்.

ஒரு மொழியை வாழ்த்தும் போது இன்னொன்றைத் தூற்றுதல் தேவையில்லை என்பதால் அந்த வரிகளை நீக்கிவிட்டு வாழ்த்தை மட்டும் வைத்தார் தலைவர் கலைஞர். ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்...'என்ற வரிகளுக்கான உண்மையான பொருள் என்ன என்பதை தன்னைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஆரிய நச்சவரங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் ஆளுநர்? அந்த ‘கும்பல்' தான் ரவியின் பதவியைக் காவு வாங்கப் போகிறது. ஆரிய மொழி -- 1891ஆம் ஆண்டே உலக வழக்கு அழிந்து ஒழிந்து வந்ததைத்தான் சுந்தரனார் சொல்கிறார். அதற்குத் தான் இன்னமும் கோடிகளைக் கொட்டி அழுது கொண்டிருக்கிறார்கள். 'திராவிட நல் திருநாடும்' என்ற வரிகள் ரெவிகளுக்கு குமட்டுகிறது என்றால், தமிழ்த் தேசியம் பேசும் எலிகளுக்கும் குமட்டுகிறது. ஆரியத்தின் இன்னொரு வடிவம்தான் அவை.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் என்பது தி.மு.க. உடன்பிறப்பு எழுதிய பாடல் அல்ல. இத்தகைய பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக முதலில் உருவகப்படுத்தி பாடத் தொடங்கியவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிய தமிழவேள் உமாமகேசுவரனார். கரந்தை தமிழ்ச்சங்க விழாக்களிலும், அதை ஒட்டி உருவான தமிழ் அமைப்பு களிலும் இப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பட்டது. தமிழகப் புலவர் குழுவும் இதனை வலியுறுத்தியது. இதனைத்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் வழிமொழிந்தார்கள். “இப்பாடல்தான் கரும்பாக இனிக்கிறது” என்று சொன்னவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள். “நாடும் மொழியும் ஒருங்கே போற்றப்படும் சிறப்புக்குரிய அந்தப் பாடல் தமிழக மக்கள் ஏற்கத்தக்க வாழ்த்துப் பாடல்” என்று சொன்னவர் மு.க. அல்ல, மு.வ.!

Also Read: உருது மொழியை யாரும் திணிக்கவில்லை - உங்களின் கனவுகள் தமிழ்நாட்டில் எடுபடாது: தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி!