murasoli thalayangam
தொழில் நுட்பங்கள் வளர்ந்த பிறகும், விபத்துகள் நடப்பது மிகப்பெரிய தலைகுனிவு : ரயில்வேக்கு முரசொலி கண்டனம்!
கடந்த ஜூலை மாதத்தில் ‘விபத்து’ ரயில்வே – என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டி இருந்தோம். “வந்தே பாரத் விடுவது பெருமையல்ல, ‘விபத்தில்லாத’ ரயில்வேதான் பெருமை” என்று அப்போது சொல்லி இருந்தோம். அதற்கான முயற்சியை ஒன்றிய பா.ஜ.க. எடுத்திருக்கிறதா என்றால் இல்லை.
“ரயில் விபத்துகள் வழக்கமானதுதான். தண்டவாளத்தில் மக்கள் எதையாவது வைப்பதால் விபத்து நடைபெறுகிறது. வேண்டுமென்றே விபத்து ஏற்படுத்தப்படுகிறது” என்று ஒன்றிய அமைச்சர் லாலன் சிங் பேட்டி தந்துள்ளார். இவரைப் போன்றவர்கள் ஒன்றிய அமைச்சர்கள் ஆனதுதான் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட ஜனநாயக விபத்து ஆகும்.
சென்னைக்கு அருகே உள்ள கவரைப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் மிகப்பெரிய விபத்துக்கு உள்ளானது. மைசூரில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்தது பாக்மதி ரயில். இது கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 75 கி.மீட்டர் வேகத்தில் இந்த ரயில் வந்துள்ளது. 13 பெட்டிகள் தடம் புரண்டது. 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே கிடந்தன.
“கவரைப்பேட்டையில் ரயில் நிலையம் செல்ல, விரைவு ரயிலுக்கு மெயின் லைனுக்குத்தான் சிக்னல் தரப்பட்டு இருந்தது. ஆனால் மாறாக லூப் லைனில் சென்றுள்ளது. ஏற்கனவே லூப் லைனில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்ததால் சிக்னலை மீறி லூப் லைனில் சென்ற விரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்கு உள்ளானது” என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இத்தனை தொழில் நுட்பங்கள் வளர்ந்த பிறகும் இந்த மாதிரியான விபத்துகள் நடப்பது மிகப்பெரிய தலைகுனிவு ஆகும்.
இது எப்போதோ நடப்பது அல்ல. இத்தகைய விபத்துகள் நடப்பது வழக்கம் ஆகிவிட்டது. ஜூலை 18 முதல் 31 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து விபத்துகள் நடந்தது. இதன்பிறகும் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுக்கவில்லை.
2010 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்கத்தில் சரக்கு ரயிலும் விரைவு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 148 பயணிகள் உயிரிழந்தனர். 2023ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், கோரமண்டல் விரைவு ரயில், பஹானாகா பஜார் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் இருபதுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில், கொத்தவலசா சந்திப்பு ரயில் நிலையம் அருகே, விசாகப்பட்டினம் - பலாசா பயணிகள் ரயில் மோதியதில், விசாகப்பட்டினம் - ராயகடா பயணிகள் ரயில் தடம் புரண்டது. 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே சரக்கு ரயிலும், விரைவு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படிப்பட்ட விபத்துகள் தொடர் கதையாகவே இருக்கிறது.
2014 முதல் 2024 வரை சுமார் 638 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. சராசரியாக ஆண்டுக்கு 71 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அக்கறையாவது அவர்களுக்கு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
இந்த ஆண்டு கூட நிதி நிலை அறிக்கையில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை வைத்தாவது செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
“பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி ‘கவச்’ தானியங்கி பாதுகாப்பு அமைப்பை நிறுவுதல் உள்பட ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குச் செலவிடப்படும்” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அப்போது சொன்னார். இப்போதும் சொல்கிறார். இப்படி ஒவ்வொரு விபத்து நடக்கும் போதும் சொல்வார்.
‘கவச்’ தொழில் நுட்பமானது, ஒரே ரயில் பாதையில் இரண்டு ரயில்கள் வருவதைத் தடுக்கும். இதனை அமல்படுத்துவதற்கு இந்த ஆண்டுதான் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஜூலை மாதம் சொன்னார்.
ரயில் விபத்து குறித்து 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மறுமறுபடி ஊழியர்கள் மீது பழி போட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு, போக்குவரத்து துறை ஆகியவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதுவும் இது போன்ற விபத்துகளுக்குக் காரணம் ஆகும்.
ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து என்ற விதத்தில் இரயில்வே துறை இருப்பது மிக மிக ஆபத்தானதாகும்.
நாட்டின் மிகப்பெரும் போக்குவரத்து பொதுத் துறையான ரயில்வே துறைக்கு தனி வரவு - செலவு அறிக்கை தாக்கல் செய்து வந்த முறையை மாற்றி, பொது வரவு - செலவு திட்டத்தில் சேர்த்து விட்டது பா.ஜ.க. அரசு. ரயில்வே துறையை அலட்சியப்படுத்தியதற்கு இதுதான் தொடக்கம்.
இதுவரை 1465 கிலோமீட்டருக்குதான் ‘கவச்’ பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த வேகத்தில் பொருத்தப்பட்டால் அனைத்து இரயில் பாதைகளிலும் கவச் பொருத்த இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தேவைப்படும் என்று தெரியவில்லை. இதுதான் அலட்சியத்தின் தொடர்ச்சி. இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளே!
Also Read
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!