murasoli thalayangam

“வாயைத் திறந்தாலே பொய்... இதற்குதான் சம்பளம் வாங்குகிறாரா?” -ஆளுநர் ரவியை வெளுத்து வாங்கிய முரசொலி!

முரசொலி தலையங்கம்

05.10.2024

பொய்யிலே பிறந்த ஆளுநர் !

வாயைத் திறந்தாலே பொய்யும், அவதூறும் பேசுவது என்று சபதம் எடுத்து வந்தவராக இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இவரெல்லாம் ஐ.பி.எஸ். ஆக இருந்த காலத்தில் என்னவெல்லாம் செய்திருப்பாரோ என்ற அதிர்ச்சியே வருகிறது.

அக்டோபர் 2 ஆம் தேதி திடீரென இவருக்கு காந்தி பக்தி வந்துவிட்டது. அவரைப் பற்றிப் பேசி இருக்கிறார். இவர்தான் மதச்சார்பின்மை என்பதை ஐரோப்பியச் சரக்கு என்று சில நாட்களுக்கு முன் சொன்னவர். மதச்சார்பின்மை - மத நல்லிணக்கம் ஆகியவற்றை அதிகமாகப் பேசியவர் காந்தி. அதற்காகத்தான் அவர் தனது உயிரையே கொடுத்தார். அத்தகைய காந்தியை மதவாத ரவி கொண்டாடுவது, இந்த நூற்றாண்டில் காந்தியாருக்குச் செய்யப்பட்ட அவமரியாதை என்றுதான் சொல்ல வேண்டும்.

அண்ணல் காந்தியடிகள் விழாவில் உரையாற்றிய ஆளுநர் ரவி, தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்ற வன்மமான - பொய்யான - அவதூறான - உள்நோக்கம் கொண்ட - இழிவான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதற்கு என்ன ஆதாரம்? அவரது தவறான மனச்சாட்சிதான் ஆதாரமாக இருக்க முடியும்.

சமூகநீதி பேசுகிறோமாம். ஆனால் தலித்துகள் மீதான வன்கொடுமை நடக்கிறதாம். சொல்கிறார் ஆளுநர். அதற்கான ஆதாரம் என்ன? நாற்பது விழுக்காடு அதிகமாகி விட்டதாம். யார் சொன்னது? நாற்பது என்று அவரது நாக்குதான் சொல்லி இருக்கிறது. ஒரு பொறுப்பான பதவியில் இருக்கக் கூடிய ஒருவர், இப்படிதான் ஒரு மாநிலம் பற்றி தினந்தோறும் அவதூறு பேசுவாரா? அப்படி அவதூறு பேசுவதற்காகத் தான் தமிழ்நாடு அரசாங்கத்திடம் இருந்து மாதம்தோறும் சம்பளம் வாங்குகிறாரா? இவ்வளவு ரோசக் காரராக இருந்தால் எதற்காக தமிழ்நாடு கவர்னர் என்று போட்டுக் கொள்ள வேண்டும்? போக வேண்டியதுதானே?

திராவிடம், ஆரியம், சனாதனம் என்று புரியாமல் ஏதோ பேசித் தொலைக்கிறார் என்றால் அவரது அரசியல் போதாமையை விட்டுத் தொலைக்கலாம். ஆனால் அரசைக் குறை சொல்வது அரசியல் வன்மம் அல்லவா? கமலாலயமாக கிண்டி மாளிகையை ஆக்கத் துடிக்கிறாரா? அல்லது அண்ணாமலை வரும் வரை அவர் வேலையைப் பார்க்க நினைக்கிறாரா? அல்லது அண்ணாமலைக்கு பதிலாக பா.ஜ.க. தலைவராக நினைக்கிறாரா?

புனைவுகளை பேச்சுகளாக எழுதித் தருபவர்களை விடுத்து தனக்குக் கீழ் இருக்கும் அதிகாரியிடம் புள்ளிவிபரம் கேட்டிருந்தால்கூட அவர்கள் முறையான தகவல்களைச் சொல்லி இருப்பார்கள். ஒரு ஆளுநர் பேசும் ஒவ்வொரு எழுத்தும், சொல்லும் முறையானதாக - அதிகார மீறலற்றதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கருத்துக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும். தேவையற்ற அரசியலைச் செய்யவும் கூடாது. பேசவும் கூடாது. ஆட்சிக்கு எதிராகப் பேசுவதும், அப்படிப் பேசுபவர்களை அழைத்துப் பேசுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் ரவி. இத்தகைய வன்மம் கொண்டவர், கட்சி ஆரம்பித்து வலம் வரலாம். ஆளுநராக குடியிருக்கக் கூடாது.

கடந்த 23.9.2024 அன்று ‘தினமணி’ நாளிதழ் 10 ஆவது பக்கத்தில், ‘பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் - 13 மாநிலங்களில் மட்டும் 97 விழுக்காடு வழக்குகள் பதிவு’ - என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. பட்டியலின, பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் தொடர்பாக ஒன்றிய அரசு ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதை வைத்து இந்தச் செய்தி வெளியாகி இருக்கிறது.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில்தான் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடப்பதாக ஒன்றிய அரசின் அறிக்கை சொல்கிறது. மூன்று மாநிலத்தையும் ஆள்வது பாரதிய ஜனதா கட்சிதான். இந்தப் பட்டியலில் அடுத்த மூன்று மாநிலங்கள் எவை தெரியுமா? பா.ஜ.க. கூட்டணி ஆளும் பீகார் நான்காவது இடத்தில் இருக்கிறது. பா.ஜ.க. ஆளும் ஒடிசா, ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. பா.ஜ.க. கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா, ஆறாவது இடத்தில் இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு பதிவான வன்கொடுமை வழக்குகள் 51,656. இதில்,

* உ . பி - 12,287

* ராஜஸ்தான் - 8,651

* மத்தியப் பிரதேசம் - 7,732

* பீகார் - 6,799

* ஒடிசா - 3,576

* மகாராஷ்டிரா - 2,706

- என்கிறது அந்த அறிக்கை. இந்தியா முழுவதும் பதிவான வழக்குகளில் 81 விழுக்காடு வழக்குகள் இந்த ஆறு மாநிலங்களில் பதிவாகி உள்ளன. இவை அனைத்தும் ரவியின் கட்சி ஆளும் மாநிலங்கள்தான். இந்தப் பேச்சை அங்கே போய் பேசவும்.

பழங்குடியினருக்கு எதிரான வழக்குகளில் முதலிடத்தை பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம்தான் பிடித்துள்ளது. ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவிலேயே அதிகளவில் பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை நடக்கும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நிலைமை என்ன தெரியுமா? அந்த அறிக்கையில் இருப்பதை ‘தினமணி’ சொல்கிறது....

“உத்தரப்பிரதேச மாநிலத்தில் வன்கொடுமைகள் நடக்கும் பகுதிகள் என எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் அங்கு அதிக வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன” என்று எழுதப்பட்டுள்ளது. ஆளுநர் அங்கே செல்லவும் என்பதே நமது அன்பான வேண்டுகோள் ஆகும்!

Also Read: அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்! : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முரசொலி புகழ்மாலை!