murasoli thalayangam
அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்! : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முரசொலி புகழ்மாலை!
“நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்று பெயர் வாங்குவதில்தான் எனக்கு மகிழ்ச்சி” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள்.
இதோ இப்போது வந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதை அறிவிப்பதாகவே அமைந்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னால் ஒன்றிய அரசின் ‘நிதி ஆயோக்’ அறிக்கை வெளியானது. அதனை மையமாக வைத்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழும் கட்டுரை வெளியிட்டு இருந்தது.
அனைத்து மனித வளக் குறியீட்டிலும் அகில இந்திய சராசரி எவ்வளவோ, அதைவிடக் கூடுதலாக தமிழ்நாடு இருக்கிறது என்பதை ‘தி இந்து’ வெளிப்படுத்தி இருந்தது. வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், தூய்மையான குடிநீர், குறைந்த விலை, வேலைவாய்ப்பு, பொருளாதார குறியீடு, தொழில், உள்கட்டமைப்பு, சம வாய்ப்புகள், அமைதி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, நுகர்வு, உற்பத்தி ஆகிய அனைத்து குறியீட்டிலும் தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்குவதாக ‘நிதி ஆயோக்’ அறிக்கை சொன்னது.
வறுமையின்மையில் 92 விழுக்காடும், தூய்மையான குடிநீர் வழங்குவதில் 90 விழுக்காடும் பெற்றிருந்தோம். தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதலமைச்சர் அவர்கள் எப்படி வளர்த்தெடுத்து வருகிறார் என்பதற்கான சாட்சியங்கள் ஆகும். இந்தப் பட்டியலில் உத்தரகாண்ட் மாநிலம் முதலிடத்தைப் பெற்றது.
கேரளா இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. 100க்கு 78 புள்ளிகளை தமிழ்நாடு பெற்றுள்ளது. இவை முன்னிலும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான சாட்சியங்கள் ஆகும்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு புள்ளிவிபரம் வெளியாகி உள்ளது. இதனை வெளியிட்டது தமிழ்நாடு அரசு அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் புள்ளியியல் அமைச்சகம் ஆகும். தொழிற்சாலைகள் குறித்த ஆண்டு மதிப்பீட்டு அறிக்கை 2022 - 23ன்படி, ‘அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்’ என்பதுதான் இந்த அறிக்கை கொடுத்திருக்கும் பட்டயம் ஆகும்.
ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2022 - 23-ஆம் நிதியாண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி அதிக நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிய முன்னணி மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகுதான் மகாராஷ்டிரா, குஜராத், உ.பி., கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வருகின்றன. இந்த 5 மாநிலங்கள் தான் உற்பத்தி துறை சார்ந்த வேலைவாய்ப்பில் 55 விழுக்காடு பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகம் பேருக்கு வேலை வாய்ப்புகளை அளித்ததன் மூலமாக, ‘வேலைகள் வழங்குவதிலும் முதல்வர்’ என்ற பெருமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெறுகிறார்கள். இந்தியாவுக்கு உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் பாதிக்கு பாதி பங்களிப்பு வழங்கும் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாட்டையும் ஒன்றாக உயர்த்தி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
அனைத்துத் துறை வளர்ச்சி என்று தனது பார்வையை மிக விரிவானதாக ஆக்கினார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அதுதான் இத்தகைய வெற்றிக்கு காரணம் ஆகும். மற்ற மாநிலங்களில் சில குறிப்பிட்ட தொழில்கள் மட்டும் வளரும். அதுவும் நகரங்களைச் சுற்றி அதிகமாக அமைந்து கொண்டே போகும். அப்படி இல்லாமல் அனைத்து வகைப்பட்ட தொழில்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் முக்கியத்துவம் தந்தார்கள். அனைத்து மாவட்டங்களுக்கும் பரவல் ஆக்கினார்கள்.
பெருந்தொழில்கள் மட்டுமல்ல; சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும் முக்கியத்துவம் தரும் அரசாகவும் மாற்றினார்கள். வேலை வாய்ப்புகளை அதிகளவு வழங்கக் கூடியவையாக சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைந்துள்ளன. சிறுசிறு தொழிலதிபர்களையும் இவை உருவாக்கியது. இவற்றுக்கான மனித வளத்தை உருவாக்குவதிலும் முதலமைச்சர் அவர்கள் அக்கறை செலுத்தினார்கள்.
‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலமாக 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியானது, பட்டதாரிகளாக மட்டுமல்ல; திறமைசாலிகளாகவும் இளைஞர்களை உருவாக்கி உள்ளது.
புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் மூலமாக ஏராளமான மாணவ, மாணவியர் கல்லூரிச் சாலையை நோக்கி வருவதற்கான வாசலையும் திறந்து வைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். கல்லூரிகளில் 35 விழுக்காடு மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதன் மூலமாக மனித சக்தியையும் உருவாக்கி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். இவை அனைத்தும் எந்த மாநிலத்திலும் இல்லாதவை ஆகும்.
முதலமைச்சரின் தொலைநோக்குச் சிந்தனையைப் பார்த்து நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றன. அதன் மூலமாக மாநிலமும் வளர்கிறது. வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. நிறுவனங்களின் தொடக்க விழாக்களில், ‘இதன் மூலமாக எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது’ என்பதைத்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மறக்காமல் சொல்லி வருகிறார். அதிலும், பெண்கள் எவ்வளவு பேர் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள் என்பதையும் சொல்லி வருகிறார்.
தொழில்கள் வருவதன் மூலமாக தொழில்கள் மட்டும் வளருவது இல்லை. அதன் மூலமாக கிடைக்கும் வேலைகள் மூலமாக குடும்பங்கள் வளருகிறது. சுற்றிலும் உள்ள மாவட்டமும், நகரமும், கிராமங்களும் வளர்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியாக தமிழ்நாட்டை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டிருப்பதைத்தான் இந்தப் புள்ளி விபரங்களே புகழ்கின்றன.
- முரசொலி தலையங்கம்!
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!