murasoli thalayangam
“‘தோள் கொடுப்பான் தோழன்’ என்பதைப் போல கூட்டணி கட்சிகளின் பாராட்டால் உயர்ந்து நிற்கிறது திமுக” : முரசொலி!
பவள விழா காணும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும் போற்றிப் பாராட்டி இருப்பதுதான் திமுகவுக்கு கிடைத்த பெருமையாகும். அக்கட்சிகளுக்கு இருக்கும் பெருந்தன்மை.
1967 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார் பேரறிஞர் அண்ணா. அப்போது அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை ஒருமுகப்படுத்துவதற்காக ஒரு கூட்டணியை உருவாக்கினார். “கரும்புச் சாறுக்காக சக்கையைப் பிழிபவர், நான்கைந்து முறை பிழிவார். ஒரு சொட்டு கூட அதில் தேங்கிவிடக் கூடாது என்று பிழிவார். அந்த மாதிரி முடிந்த வரை அனை வரையும் ஒன்று சேர்த்து விட்டேன். இதன்பிறகு ஒன்றிரண்டு சொட்டுக்கள் கரும்புச் சாறு அதனுள் இருக்கலாம். அதனை ஈக்களுக்காக விட்டுவிட்டேன்” என்று சொன்னார்.
அந்தளவுக்கு ஒன்றுபட்ட சிந்தனை கொண்ட அனைவரையும் ஒன்றிணைத்தார் பேரறிஞர் அண்ணா. அது அன்றைய தினம் மாபெரும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. அப்படித்தான் தலைவர் கலைஞரும் களும் கூட்டணிகளை உருவாக்கினார். அது தேர்தல் கால கூட்டணிகளாக இல்லாமல், கொள்கைக் கூட்டணிகளாக அமைந்திருந்தது. அதே வழியில் இன்றைய முதலமைச்சரும் தி.மு.க. கூட்டணியை கொள்கைக் கூட்டணியாக வழிநடத்தி வருகிறார் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு 20 கட்சிகள், தி.மு.க.வை போற்றிய காட்சி ஆகும்.
இந்த நாட்டில் எத்தனையோ கூட்டணிகள் இருக்கின்றன. அது தோன்றிய வேகத்தில் மறைந்தது. சில கூட்டணிகள் தோன்றவே தோன்றாது. மறைவாகவே இருக்கும். வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு திருட்டுக் கூட்டணியாகவே தொடர்வார்கள். இவர்களுக்கு தேள் கொட்டினால், அவர்களுக்கு வலிக்கும். அப்படி இல்லாமல் வெளிப்படையாக - உண்மையாக – ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் – தட்டிக் கொடுத்தும் இயங்கும் கூட்டணியாக தி.மு.க. கூட்டணி செயல்பட்டு வருகிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் இந்த மாபெரும் கூட்டணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உருவாக்கினார்கள். இன்று வரை அதே அன்புடன் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் இக்கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதைவிட முக்கியமாக, இந்த வெற்றி ஃபார்முலாவை இந்திய நாட்டுக்கு வழங்கியதும் இந்தக் கூட்டணிதான்.
“மாநில ரீதியாக உங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும், அகில இந்திய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு ஒன்று சேருங்கள். அதே நேரத்தில் தொகுதிப் பங்கீடுகளை மாநில ரீதியாகவே முடித்துக் கொள்ளுங்கள்” என்ற வெற்றிச் சூத்திரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தயாரித்துக் கொடுத்தார். தனக்கு எதிரிகளே இல்லை என்ற மிதப்பில் இருந்த பா.ஜ.க.வை மைனாரிட்டி எண்ணிக்கைக்கு ‘இந்தியா கூட்டணி’ இறக்கியதற்கு இதுவே அடித்தளம் ஆகும்.
அதனால்தான் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து பாராட்டும் இயக்கமாக தி.மு.க. உயர்ந்து நிற்கிறது. தலைவரின் கன்னத்தை தடவி வாழ்த்துத் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர். ‘அவசர நிலைக் காலத்தில் தளபதி ஸ்டாலின் தாக்கப்பட்டபோது தடுத்த கரம் இது. அந்தக் கரத்தால் அவரது கன்னம் தொட்டு வாழ்த்தினேன்’ என்ற சொல்லுக்குள் அரைநூற்றாண்டு வரலாறு அடங்கி இருக்கிறது.
‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலக் கட்சிகளிலும் உயர்ந்ததாக இருக்கும் தி.மு.க., நூற்றாண்டு விழா காணும் போதும் ஆட்சியில் இருக்கும்’ என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.
“தலைவர் கலைஞரை கோபாலபுரம் இல்லத்தில் பார்த்தபோது, ‘உங்களுக்கு எப்படி மெய்க்காப்பாளனாக இருந்தேனோ, அதேபோல தளபதி ஸ்டாலினுக்கும் இருப்பேன்’ என்று சொன்னேன். அதைப் போலவே இனிவரும் காலங்களிலும் அவர் கரத்தைப் பற்றியே இருப்பேன்” என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
‘இந்தியாவில் மதச்சார்பற்ற சக்திகள் வெல்லுவதற்கான வலிமையை உருவாக்கித் தரும் இயக்கம் தி.மு.க.’ என்று அடையாளப்படுத்தினார் மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன்.
‘தொகுதிகள், இடங்கள் பற்றி கவலைப்படாமல் கொள்கை அடிப்படையில் உருவாவதே கூட்டணி. பாசிசத்தை தி.மு.க. உறுதியாக எதிர்ப்பதால் தான் இக்கூட்டணி தொய்வின்றித் தொடர்கிறது’ என்றார் இந்தியக் கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன்.
“தலைவர் கலைஞர் கூட தனது ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று அறிவிக்கவில்லை. தளபதி மு.க.ஸ்டாலின்தான் அறிவித்துள்ளார். அவர் கலைஞரின் குடும்ப வாரிசு அல்ல. கொள்கை வாரிசு. கருத்தியல் வாரிசு. அண்ணா இன்று இருந்திருந்தால் தட்டிக் கொடுத்திருப்பார். கலைஞர் இருந்திருந்தால் முத்தம் கொடுத்திருப்பார்” என்று குறிப்பிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்பதைப் போல மூன்றாவது குழலாக விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து செயல்படும்” என்று முழங்கினார்.
“திராவிட மாடல் ஆட்சிதான் இந்தியாவையே வெல்லும் ஆட்சி முறையாகும்” என்பதை உறுதிபடக் கூறினார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்.
‘எனது அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் கைகளில் தி.மு.க. மென்மேலும் மெருகு கூடி, இந்திய நாடெங்கும் திராவிடச் சிந்தனைகள் பொழிகின்றன. இந்தக் கோட்டைச் சுவரில் எங்கேனும் ஒரு கீறல் விழாதா என எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம் அவர்களது பகல் கனவு பலிக்கப் போவதில்லை’ என்று வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்திருந்தார் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேச்சு உணர்ச்சியமயாக அமைந்திருந்தது. பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், பொன்.குமார், எர்ணாவூர் நாராயணன், முருகவேல்ராஜன், தமீமுன் அன்சாரி, கருணாஸ், அதியமான், திருப்பூர் அல்தாப், அம்மாவாசி என அனைத்துத் தலைவர்களும் தி.மு.க.வைப் பற்றியும், தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும் பேசியவை வானத்தில் இருந்து பொழியும் வாழ்த்து மழையாக அமைந்திருந்தன.
‘தோள் கொடுப்பான் தோழன்’ என்பதைப் போல பல்வேறு கட்சிகளின் பாராட்டைப் பெறும் அளவுக்கு பவள விழாக் காலத்தில் உயர்ந்து நிற்கிறது கழகம் என்று முரசொலி தலையங்கம் எழுதியுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!