murasoli thalayangam
"இந்த கொடுமைக்கு இலங்கையின் புதிய அதிபர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" : முரசொலி வலியுறுத்துவது என்ன?
முரசொலி தலையங்கம் (26-09-2024)
புதிய அதிபரின் முதல் பணி
இலங்கை நாட்டின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்திய மீனவர்களைக் காப்பதை அவர் தனது முதல் பணியாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அதற்கு இதுவரை முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. நாளிதழ்களில் தினம் மீனவர் செய்தி இடம் பிடித்துவிடும் சோகத்தைக் காண்கிறோம். துடிக்கிறோம்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21-9-2024 அன்று சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம், பழையாறு ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த மீனவர்கள்.
"சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூ- லிப்பதைத் தடுத்திட வேண்டும். மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத்- துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு 23-9-2024 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்த ஆண்டு ஜூன் - செப்டம்பர் காலகட்டத்தில் மட்டும் 169 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்வது அல்லது கடற்படை ரோந்துப் படகை மீனவர் படகு மீது மோத விட்டு அதனை மூழ்கடிப்பது தொடர்ந்து வருகிறது. வலைகளை நாசப்படுத்துகிறார்கள். பிடித்து வைத்திருக்கும் மீன்கள் திருடப்படுகின்றன. இவை அனைத்தும் கேட்பார் இல்லாமல் நடக்கிறது.
2818ஆம் ஆண்டு முதல் பல கட்டங்களாக இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் அவை அதன் பிறகு தொடரவில்லை.
2016 ஆம் ஆண்டு இந்திய - - இலங்கை மீனவர் இடையே அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள் அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கையின் அமைச்சர்கள் மங்கள சமரவீர, மஹிந்த அமரவீர ஆகியோர் முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறை மீனவர்கள் சந்திப்பது என்றும், ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறை இருநாட்டு அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இருநாட்டு கடற்படை அதிகாரிகளும் இதில் இடம் பெறுவார்கள் என்று சொல்லப்பட்டது.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் 2017 ஜனவரி 2 ஆம் நாள் கொழும்புவில் நடைபெற்றது. மீனவர்கள் மீது எந்த வன்முறையும் செலுத்தக் கூடாது, உயிர் இழப்புகள் ஏற்படக் கூடாது என்று இக்கூட்டத்தில் மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டது. ஆனாலும் இலங்கைக் கடற்படையால் அடக்குமுறை தொடர்ந்தே வருகிறது.
திடீரென இலங்கையில் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டம் 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு பேச்சுவார்த்தையும் நின்று போனது. இச்சட்டத்தின்படி மீனவர்களை கைது செய்து சிறையில் அடைக்கலாம், கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கலாம். இந்த சட்டத்தை வைத்துத்தான் கொடுமைகள் அரங்கேறுகின்றன.
இலங்கைக் கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவை குளத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேருக்கு 3.50 கோடி ரூபாய் அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்திய அரசின் தரப்பில் வெளியுறவுத்துறை, மீன் வளத்துறை அதிகாரிகள் நான்கு பேரும், இலங்கை அரசின் தரப்பில் நான்கு பேரும் இணைந்து குழு அமைத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னாரே தவிர எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
இத்தகைய சூழலில் சிங்களவர் - தமிழர்கள் - இசுலாமியர் ஒற்றுமை குறித்து பேசும் இடதுசாரி அரசு இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்தப் புதிய அரசானது இந்திய மீனவர்கள் படும் துன்ப துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மிகக் கொடூரமான விதிமுறைகள், தண்டனைகள் அடங்கியுள்ள 2018 ஆம் ஆண்டுச் சட்டத்தை இலங்கை அரசு முதலில் நீக்க வேண்டும். இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்திய மீனவர்களின் மீன்பிடித் தொழில் என்பது ‘குற்றச் செயல்' அல்ல. அதனைக் குற்றச் செயலாகக் கருதி தண்டனைகள் வழங்கக் கூடாது. இந்திய மீனவர்களைக் கைது செய்வதையும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் இலங்கை அரசாங்கத்தின் பெருமை மிகு செயலாகக் கருதக் கூடாது.
இந்திய - இலங்கை மீனவர்கள் இடையிலான மோதலைப் போல் இதனை மாற்ற முனையக் கூடாது. இரு நாட்டு மீனவர்களுக்குள் நட்பை பலப்படுத்த அரசுகள் முனைய வேண்டும்.
இலங்கை சிறையில் இருக்கும் அனைத்து மீனவர்களும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட படகுகள் அவர்களுக்கு உடனடியாக திரும்பவும் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
2014 முதல் இந்த பத்தாண்டு காலத்தில் இலங்கைக் கடற்படையினரால் 3 ஆயிரத்து 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் 534 படகுகள் இலங்கை அரசாங்கத்தால் கடத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 2023 ஆம் ஆண்டு என்பது தமிழக மீனவர்களுக்கு மிக மோசமான ஆண்டு ஆகும். அந்த ஆண்டு மட்டும், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களைக் கைது செய்துள்ளார்கள். 37 படகுகளை பறிமுதல் செய்துள்ளார்கள். 2024 ஆம் ஆண்டும் இது தொடர்கிறது. இந்தக் கொடுமைக்கு இலங்கையின் புதிய அதிபர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!