murasoli thalayangam

புதிய அதிபரான அனுர குமார திசநாயக : “இலங்கையின் முகமும், குணமும் இனியாவது மாறுமா?” - முரசொலி !

முகமும் குணமும் மாறுமா?

இலங்கைக்கு புதிய அதிபர் வந்து விட்டார். அந்த நாட்டின் முகமும் குணமும் மாறுமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி ஆகும். வகுப்புவாத - இனவாத - எதேச்சதிகார அரசாட்சியாக நடைபெற்று அனைத்து வகையிலும் மிகமோசமான விமர்சனங்களுக்கு உள்ளான நாடாக இலங்கை இருந்து வந்துள்ளது. மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா தேசியக் கட்சியாக இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து, ஒரே மாதிரியான இனவாதத் தன்மையுடன் அந்த நாட்டை வழிநடத்தியதன் விளைவாக ஈழத் தமிழினம் அடைந்த துன்ப துயரங்கள் சொல்லி மாளாது.

சிங்களவர்களுக்காவது நன்மை செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு அந்த நாட்டைத் தள்ளினார்கள்.

இதோ இப்போது இலங்கை அதிபர் தேர்தல் நடந்து, புதிய அதிபராக அனுர குமார திசநாயக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி முன்னணி என்ற கூட்டணியின் வேட்பாளராக இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச இரண்டாவது இடத்தையே பெற்றார். மிகக் கொடூரமான பேர் பெற்ற மகிந்த ராஜபக்ஷேவின் மகன், நாமல் ராஜபக்ஷேவும் போட்டியிட்டார். அவரும் தோற்றுப் போனார்.

இலங்கைக்கு இது 9 ஆவது அதிபர் தேர்தல் ஆகும். 38 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி.) கட்சித் தலைவரான அனுர குமார திசநாயக, தேசிய மக்கள் சக்தி முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி அதன் சார்பில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஜே.வி.பி. எனப்படும் இந்த கட்சி இடதுசாரிக் கொள்கை கொண்ட கட்சியாக தன்னை அறிமுகம் செய்து கொண்ட கட்சியாகும். மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கொள்கை கொண்டதாக தன்னை அறிவித்துக் கொண்ட கட்சி. இதன் மூலமாக இலங்கையின் முதல் கம்யூனிஸ்ட் அதிபர் என்று இவரை அழைக்கலாம்.

2019 ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய தேசிய மக்கள் சக்தி முன்னணி கூட்டணியானது மொத்தமே 3 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால் இப்போது நடைபெற்ற தேர்தலில் 55.89 விழுக்காடு வாக்குகளை இவர் பெற்று அதிபர் ஆகி இருக்கிறார். அவரை அடுத்து வந்த சஜித் பிரேமதாச, 44.11 விழுக்காடு வாக்குகளையே பெற முடிந்தது.

இந்த தேர்தல் முடிவுகளின் மூலமாக இலங்கையின் முக்கியக் கட்சிகள் இரண்டையும் அந்த நாட்டு மக்கள் நிராகரித் திருக்கிறார்கள். இடதுசாரி இயக்கத்தின் மீது தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜனதா விமுக்தி பெரமுனா என்ற இயக்கத்தின் தொடக்க காலம் கசப்பானதுஆகும். ஆயுத வழியே சரியானது என்பதில் உறுதியாக இருந்த கட்சி அது. இலங்கைத் தமிழர் பகுதியில் போராளிகள் அமைப்புகள் இருந்ததைப் போல சிங்களப் பகுதியில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை இந்தக் கட்சி நடத்தியது. 1978 ஆம் ஆண்டுகளில் சுமார் 13 ஆயிரம் பேர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானபோது அதனையும் இந்தக் கட்சி எதிர்த்தது. இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு கூடாது என்று இந்தக் கட்சி சொன்னது. இந்திய நாட்டின் நடவடிக்கைகளுக்கு எதிராக மிகப்பெரிய கிளர்ச்சி நடத்தியது. அதிலும் இரண்டு தரப்பிலும் பலரும் கொலையுண்டார்கள். அதிலும் பல்லாயிரக்கணக்கானவர்களை இக்கட்சி இழந்தது. அப்போது மாணவராகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார் அனுர குமார திசநாயக.

இலங்கையில் இருக்கும் சிறுபான்மையினர் உரிமையை மறுத்த கட்சியாகத்தான் ஜே.வி.பி. இருந்தது. அதனை வன்முறை வழியாகச் சென்று போராட்டம் நடத்தியது. ஆனால் காலப் போக்கில் வன்முறைப் பாதையை அக்கட்சி விட்டுவிட்டது. சிங்களவர் தமிழர்கள் இசுலாமியர் ஒற்றுமை குறித்து பேசத் தொடங்கியது. 2016 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக இந்த மாற்றத்தை உணர்த்தியது ஜேவிபி.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களையும், மற்ற சிறுபான்மை சமூகங்களையும் அதன் பிரச்சினைகளையும் கவனிக்கத் தொடங்கி அது குறித்து பேசத் தொடங்கியது ஜே.வி.பி. அவர்களுக்கு தனித்தனி பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை வலியுறுத்தியது.

மேலும் இப்போது ஆட்சிக்கு வந்திருப்பது தனிப்பட்ட ஜே.வி.பி. அல்ல. பல்வேறு அமைப்புகள் இணைந்து தேசிய மக்கள் சக்தி முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இக்கூட்டணியின் அதிபராகத்தான் அனுர குமார திசநாயக, நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முன்பு இந்தியாவின் தலையீட்டை நிராகரித்த அனுர குமார திசநாயக, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலையும் சந்தித்தார். இது அவரது கட்சியின், கூட்டணியின் நிலைப்பாடு மாறி இருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டு ஆகும்.

“நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் நிறைவேறி இருக்கிறது. கனவை நனவாக்க, இந்த நிலத்திற்குப் புதிய தொடக்கம் தேவை. சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லீம்களின் ஒற்றுமை, புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கும். இதன் அடிப்படையில்தான் மறுமலர்ச்சி தோன்றும்" என்று சொல்லி இருக்கிறார் அனுர குமார திசநாயக.

இலங்கையின் முகமும், குணமும் இனியாவது மாறுமா? சொன்னபடி நடப்பாரா புதிய அதிபர்?

Also Read: தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள் ஒரே நாடு - ஒரே தேர்தல் நடத்தப்போகிறார்களா ? - முரசொலி கேள்வி !