murasoli thalayangam
“ஆரியம், திராவிட நாகரிகத்தை எவ்வளவு பாழ்படுத்தியது என்பதை உணர்த்திய சிந்து சமவெளி” - முரசொலி !
முரசொலி தலைங்கம் (23.9.2024)
நம் பெருமையின் நூற்றாண்டு..........
*தமிழினத் தலைவர் கலைஞருக்கு நூற்றாண்டு -
* சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு -
* குடிஅரசு இதழின் நூற்றாண்டு – என்ற இந்த வரிசையில் நம் பெருமையின் நூற்றாண்டு என்று சொல்லத்தக்க வகையில் - சிந்துச் சமவெளி அறிவிப்பின் நூற்றாண்டாகவும் இது அமைந்துள்ளது.
ஆரியர் நாகரிகமே இந்தியர் நாகரிகம் என்றும், வேதகால நாகரிகமே சிறந்தது என்றும் ‘கப்சா’ வரலாறுகளை விட்டுக் கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆராய்ச்சிதான் சிந்துச் சமவெளிப் பண்பாட்டின் கண்டுபிடிப்பாகும்.
“ஜான் மார்ஷல் திராவிடப் பண்புகளை ஆய்ந்தறிந்து கூறிய போது தான் மேனாட்டாரின் கண்களில் இருந்த கறையும், கருத்தில் இருந்த மாசும் நீங்கியது. ஆரியம், திராவிட நாகரிகத்தை எவ்வளவு பாழ்படுத்தியது என்ற ஆராய்ச்சி அதன்பிறகு தான் வரத் தொடங்கியது” என்று ‘ஆரியமாயை’ நூலில் எழுதினார் பேரறிஞர் அண்ணா.
சிந்துச் சமவெளி பண்பாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நாள் 20.9.1924. இதுதான் தமிழ் - தமிழர் பண்பாட்டுப் பெருமையை உலகம் அறிந்த நாளாகும். இதனை உலகுக்குச் சொன்னவர் ஜான் மார்ஷல். இந்திய தொல்லியல் துறையின் அன்றைய இயக்குநர் அவர். ஹரப்பா, மொகஞ்சதாரோ குறித்த ஆய்வு முடிவுகளை அவர்தான் வெளியிட்டார். “சிந்து, பஞ்சாப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் முதிர்ந்த பண்பாட்டுடனும், உயர் தரமான நகர நாகரிகங்களுடனும் வாழ்ந்திருக்கிறார்கள். உயர் தரமான கலையும், கலைத் திறனும், வளமான எழுத்தறிவும் கல்வி அறிவும் அவர்களுக்கு இருந்துள்ளது” என்பதை அவர் தான் அறிவித்தார். இது கி.மு. 3500-–1700 ஆகிய ஆண்டுகளாக இருக்கும் என்றும் சொன்னார்.
அப்போதே திராவிட இயக்க மூதறிஞர்களில் ஒருவரான சாத்தான்குளம் இராகவன் அவர்கள், ‘ஆதிச்சநல்லூரும் பொருநை வெளிநாகரிகமும்’ என்ற புத்தகத்தை எழுதினார். ‘சிந்து வெளிநாகரிகம் பற்றி நான் அப்போது தந்தை பெரியாரிடம் பேசினேன்’ என்று சாத்தான்குளம் இராகவன் எழுதி இருக்கிறார். கா.அப்பாத்துரையார் தொடர்ச்சியாக இது பற்றி எழுதினார். மா.இராசமாணிக்கனார், தேவநேயப் பாவாணர் ஆகியோர் தமிழர்தம் தோற்றம் குறித்து எழுதினார்கள்.
ஹரப்பா நகரம் முதலில் கண்டறியப்பட்டது. மக்கள் பொதுவெளியில் கூடும் பெரிய அரங்கம் கண்டு பிடிக்கப்பட்டது. அழகிய பின்னலாடைகள் இருந்தது. செங்கல் கட்டடங்கள் இருந்தன. அணிகலங்கள் கொண்ட நடன மாது சிலை கிடைத்தது. அடுத்து கண்டு பிடிக்கப்பட்ட மொகஞ்சதாரோவில் முன்னோர்கள் புதைக்கப்பட்ட இடங்கள் இருந்தன. தாய் தெய்வங்கள் இருந்தன. மக்கள் வாழ்ந்த குடியிருப்புகள் இருந்தன. கருப்பு, சிவப்பு நிறப் பாண்டங்கள் அதிகம் கிடைத்தன. இவை அனைத்தும் அன்றைய அழகிய நாகரிகத்தைச் சொன்னது.
கீழடியில் நாம் கண்டறிந்தவை சங்க இலக்கியக் காட்சிகளாக இருக்கின்றன. அதே போல், சிந்துச் சமவெளியில் கண்டவையும் சங்க இலக்கியத்தின் சாட்சியங்களாக இருப்பதுதான் நம்முடைய பெருமை ஆகும். அங்கு கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளை படிக்க முடியவில்லை. ஆனால், தமிழ் எழுத்துகளோடு ஒன்றிணைந்து இருக்கின்றன, அங்கு கண்டறியப்பட்ட முத்திரைகள், தமிழ் ஓவியங்களைப் போலவே இருக்கின்றன. ‘சிந்துச் சமவெளியில் பேசப்பட்ட மொழி இன்றைய திராவிட மொழிகளுக்கு முன்னோடியாகக் கருதத்தக்கது. சிந்துச் சமவெளி வீழ்ச்சிக்குப் பின்னர் தான் ஆரியக் குடியேற்றம் நடைபெற்றது’ என்று பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் அஸ்கோ பர்போலா சொல்லி இருக்கிறார். இது குறித்து நாற்பது ஆண்டுகள் ஆய்வு செய்தவர் இவர். ‘சங்க இலக்கியம் சொல்லும் பண்பாடும் சிந்துச் சமவெளி காட்டும் முத்திரைகளும் ஒன்று போல இருக்கின்றன’ என்று ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்த ஹரப்பா பண்பாட்டு மக்கள் ஏற்கனவே இங்கிருந்த தொல் தென்னிந்திய மூதாதையருடன் கலந்து தென்னிந்திய மரபணு மக்கள் தொகை உருவானதாக மானுடவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
சிந்துச் சமவெளிப் பண்பாடு என்பது குஜராத், பஞ்சாப், அரியானா ஆகிய இந்திய மாநிலங்களில் மட்டுமல்லாது, முந்தைய இந்தியாவுக்குள் இருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரை ஒற்றுமையாக உள்ளது.
‘சிந்து முதல் வைகை வரை’ நூலாசிரியரான ஆர்.பாலகிருஷ்ணன், இடப்பெயராய்வு முறைப்படி ஆராய்ந்துள்ளார். நாம் பயன்படுத்தும் முக்கியமான தமிழ்ச் சொற்களில் பெரும்பாலானவை சிந்துவெளிப் பகுதியாக முன்பு இருந்த பகுதிகளில் இப்போதும் பயன்படுத்தப்படும் சொற்களாக இருக்கின்றன என்பதை ஆராய்ந்து சொல்லி இருக்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன்.
கொற்கை, வஞ்சி, தொண்டி, ஊர், பட்டி, பள்ளி, பாரி, பேகன், கரிகாலன், சோழன், சேரல், உதியன்,மாறன், சாத்தனார், கபிலர், நக்கீர, கோட்டை, வேல், - ஆகிய சொற்கள் மருவிய சொற்களாக இன்னமும் பாகிஸ்தான், ஆப்கன் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பயன்பாட்டில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். கண்ணகி தெய்வமாக தமிழ் மரபில் இருப்பதைப் போல குஜராத்தில் கண்கை கோவிலும், கண்கேஸ்வரி கோவிலும் உள்ளதாகச் சொல்கிறார். மொகஞ்சதாரோ பெண்கள் சிலம்பு அணிந்துள்ளார்கள்.
சிந்து வெளியில் ‘காளைகள்’ தான் இருந்தன. இது திராவிடச் சின்னம் ஆகும். ஆரியச் சின்னம் என்பது, ‘குதிரை’கள். குதிரையையும், சக்கரம் பொருத்திய தேரையும் ஆரியச் சின்னமாகச் சொல்வார்கள். இவை சிந்துவெளியில் இல்லை. வேத இலக்கியங்களில் பெருநகரங்களும் இல்லை, தாய்த்தெய்வ வழிபாடும் இல்லை. இவை இரண்டும் சிந்துவெளியிலும் இருக்கிறது. கீழடியிலும் இருக்கிறது. இவை அனைத்தையும் வைத்து சங்ககாலத் தமிழர்களின் மூதாதையர் இருந்த இடமே சிந்துவெளி என்பதை நிறுவுகிறார் ஆர்.பாலகிருஷ்ணன்.
“இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்” --– என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார். அவரது முன்னெடுப்பால் கீழடி, சிவகளை, ஆய்வுகள் வேகம் பிடித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளும், சிந்துச் சமவெளியை நமக்கு வெகு அருகில் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய பெருமைமிகு காலத்தில் சிந்துப் பண்பாட்டின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது பொருத்தமானதே
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!