murasoli thalayangam
2026 தேர்தல் வெற்றிக்கான பாய்ச்சல் தான் தி.மு.க பவள விழா! : முரசொலி திட்டவட்டம்!
பவள விழா பாய்ச்சல்
"கழகம் - நல்ல கழகம்! நம் திராவிட முன்னேற்றக் கழகம்! அதன் திருப்பணி என்றென்றும் தொடரும்!" என்று பாடி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா பாய்ச்சலைத் தொடங்கி வைத்திருக்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு மக்களின் காதுகளில் ஒலித்த பாட்டு அது, அந்தப் பாட்டுதான் தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கப் போகிறது என்பதை அந்த ஊருக்குள் அறிவிக்கும் சங்கநாதம்.
அந்தப் பாட்டுதான், தி.மு.க. போராட்டக் களத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லும் போர்ப்பாட்டு.
அந்தப் பாட்டுதான், தேர்தல் களத்தில், கழகத் தொண்டர்களை உற்சாகம் அடைய வைத்த உணர்ச்சிப்பாட்டு.
அந்தப் பாட்டுதான், வெற்றியையே தந்து கொண்டிருக்கும் வெற்றிப்பாட்டு. அந்தப் பாட்டு தொடங்கியதும், தொண்டர்களே சேர்ந்து பாடுவார்கள். அந்தப் பாட்டைத்தான் தலைவரே பாடி, பவள விழாவைக் கொண்டாடி இருக்கிறார்.
“தென்னர் சமுதாயம் இன்னல் உரும்போது தன்னையே தந்த கழகம்! முன்னர் நமையாண்ட மன்னர்களை வீழ்த்தி முன்னேற்றம் கண்ட கழகம்! என்றும் மடமையை எதிர்க்கின்ற கழகம்! இன்று மாநில சுயாட்சிக் கழகம்!” என்பதுதான் அந்தப் பாடலின் அடுத்தடுத்த வரிகள்.
மாநில சுயாட்சிக் கொள்கையைக் கையில் எடுத்து தனது பாய்ச்சலைத் தொடங்கி இருக்கிறார் தலைவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவளவிழா - முப்பெரும் விழாவானது அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளம் அமைக்கும் களமாக அமைந்துவிட்டது.
பொதுவாக தி.மு.க.வின் விழாக்கள், வெறும் கொண்டாட்டங்களாக முடிந்துவிடுவது இல்லை. அடுத்தடுத்து பெற வேண்டிய வெற்றிகளுக்கு அடித்தளமாக அமையும் விழாக்களாகத்தான் நடைபெறும்.
“25 வயதைக் கொண்டாடும் வெள்ளி விழா ஆண்டிலும் கழகம் ஆட்சியில் இருந்தது. 50 வயதைக் கொண்டாடும் பொன்விழா ஆண்டிலும் கழகம் ஆட்சியில் இருந்தது. 75 வயதைக் கொண்டாடும் பவளவிழா ஆண்டிலும் இப்போதும் கழகம் ஆட்சியில் இருக்கிறது. நூற்றாண்டு விழாக் கொண்டாடும் போதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆட்சியில் இருக்கும்.” என்று நெஞ்சை நிமிர்த்தி தலைவர் சொல்லும் போது மாநாட்டுப் பந்தலே குலுங்கியது.
நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் என்று தலைவர் கலைஞருக்குப் பெயர். உங்களால் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எதிர்கொண்ட தேர்தலில் எல்லாம் கழகத்தை வெற்றி பெற வைத்திருக்கிறேன்.
நான் என்றால் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. ஸ்டாலின் என்ற பெயருக்குள் லட்சக்கணக்கான தொண்டர்களின் பெயரும் அடங்கி உள்ளது. உங்களது உழைப்பால், தியாகத்தால், செயல்பாடுகளால், நடவடிக்கைகளால் தான் இந்த வெற்றிகள் சாத்தியமானது.
இதுவரை நடந்த தேர்தல்களைப் போல அடுத்தடுத்து வரப் போகும் தேர்தல்களிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். இதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஏதோ மமதையால் நான் இதைச் சொல்லவில்லை. எனது தொண்டர்கள் மீதுள்ள நம்பிக்கையால் சொல்கிறேன்.
அதற்காக மெத்தனமாக யாரும் இருந்துவிடக் கூடாது. இருக்க மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும் என்பதையும் அழுத்தமாகச் சொன்னார் தலைவர். 'நம்முடைய தொடர் வெற்றிகளின் மூலமாக பவள விழாவைக் கொண்டாடுவோம்.
நம்முடைய தொடர் வெற்றிகளின் மூலமாக நூற்றாண்டு விழாவை நோக்கி முன்னேறுவோம். அடுத்து நம்முடைய இலக்கு 2026 தேர்தல். இதுவரை இப்படியொரு வெற்றியை எந்தக் கட்சியும் பெற்றது இல்லை என்று 2026 இல் வரலாறு சொல்ல வேண்டும்.
அந்த வரலாற்றை எழுதுவதற்கு நீங்கள் தயாரா?" என்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைப் பார்த்து தலைவர் கேட்க, அவர்கள் 'தயார் தயார்' என்று சொல்லி இருக்கிறார்கள். கூர் தீட்டப்பட்டுள்ளார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள்.
இதுதான் பவள விழா பாய்ச்சலாகும். இந்த 75 ஆண்டு காலத்தில் எத்தனையோ கட்சிகள் தொடங்கப்பட்டு விட்டன. மறைந்தும் போய்விட்டன. ஆனால், தி.மு.க.தான் கம்பீரமாக காட்சி தரும் கட்சியாக இருக்கிறது. பவள விழா கொண்டாடும் நேரத்தில் கழகம் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பெருமையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் நம்முடைய தலைவர் அவர்கள்.
அவர் தலைவராக வந்தது முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் கழகத்தை வெற்றிபெற வைத்துள்ளார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019 சட்டமன்ற இடைத் தேர்தல், 2019 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 ஈரோடு இடைத்தேர்தல்,
2024 நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகிய ஒன்பது தேர்தல்களிலும் கழகத்தை வெற்றி பெற வைத்து வெற்றியின் நாயகனாக இருக்கிறார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தி.மு.க.வின் வரலாற்றையே வெற்றியின் வரலாறாகத் தலைவர் மாற்றிக் காட்டி இருக்கிறார்கள். அத்தகைய வெற்றி வரலாற்றின் தொடர்ச்சியாகவே பவள விழாவும் நடைபெற்றுள்ளது. நடைபெற்றது பவள விழா, முப்பெரும் விழா மட்டுமல்ல. 2026 தேர்தல் வெற்றிக் கான பாய்ச்சல் ஆகும்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!