murasoli thalayangam
NEP-ஐ அமல்படுத்த வேண்டும் என்று சொல்ல தகுதி இருக்கிறதா? : ஒன்றிய அமைச்சரை தோலுரித்த முரசொலி!
தர்மேந்திர பிரதானுக்கு..
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே!
நீட் தேர்வில் அதிகப்படியான முறைகேடுகள் நடைபெற்றது உங்களது காலத்தில்தான் என்பது தான் உங்களுக்கு உள்ள ‘பெருமை’ ஆகும்.
720 மதிப்பெண்ணுக்கு 720 மதிப்பெண்ணை 61 பேர் பெற்றதாக அறிவிக்கப்பட்டது முதலில். திருத்தப்பட்ட இறுதி முடிவுகளின் படி இந்த எண்ணிக்கை 17 ஆக குறைந்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடாமல் போயிருந்தால் 44 போலிகளுக்கு மருத்துவ இடம் கிடைத்திருக்கும்! இது உங்கள் சாதனை!
மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு, நடந்த நாளின் போதே உத்தரப்பிரதேச தேர்வு மையத்தில் தேர்வு தொடங்கும் முன்பு, வினாத்தாள் சமூக வலைதளத்தில் கசிந்தது. அரியானாவிலும், பீகாரிலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் இதேபோல் வினாத்தாள் கசிந்தது. இதுவும் உங்கள் சாதனை!
அடுத்த மோசடியை கருணை மதிப்பெண் என்ற பெயரால் அரங்கேற்றியது தேசிய தேர்வு முகமை. ஆயிரத்து 500 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மறுதேர்வுக்குப் பலபேர் வரவில்லை. இதுவும் உங்கள் சாதனை.
இயற்பியல் வினாத்தாளில் குழப்பம் என்று சொல்லி 44 பேருக்கு கூடுதல் மதிப்பெண் போட்டிருந்தார்கள். அதுவும் உச்சநீதிமன்ற விசாரணையில் ரத்தாகிவிட்டது. இதுவும் உங்கள் சாதனை!
“நீட் தேர்வு வினாத்தாள்கள் ஹசாரிபாக், பாட்னாவில் கசிந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீட் வினாத்தாள் கசிவால் 155 மாணவர்கள் பலனடைந்திருக்கிறார்கள் என்பது சி.பி.ஐ. விசாரணை மூலம் தெரிய வருகிறது” என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். இதுவும் உங்கள் சாதனை தான்!
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை 24 பேர் கைதாகி சிறையில் இருக்கிறார்கள். இதுவும் உங்கள் சாதனை தான்!
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை 6 மாநிலங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதுவும் உங்கள் சாதனைதான்!
நீட் முதுநிலைத் தேர்வை தேர்வு நாளன்று ரத்து செய்த புகழும் உங்களைத் தானே சேரும்! இந்தியா முழுவதும் 259 நகரங்களில் தேர்வு எழுத 2 லட்சம் மாணவர்கள் சென்று விட்டார்கள். இந்தச் சூழலில் அன்று காலையில் ரத்து என்று அறிவித்தீர்கள். 2 லட்சம் பேரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினீர்கள்.
இப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரரான நீங்கள், கல்வியைப் பற்றிப் பேசுவது அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. “தனது அரசியல் ஆதாயங்களை விட மாணவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குச் சொல்லும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?
மாணவர்களின் நலன்களைப் பற்றிக் கவலைப்படாமல் கோச்சிங் சென்டர்களின் மினிஸ்டராக நீங்கள் நடந்து கொண்டு வருவதைத்தான் இந்தியா பார்க்கிறதே? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தார்களே? நாடாளுமன்றத்தில், ‘எந்த தவறும் நடைபெறவில்லை’என்று சாதித்தீர்கள். பின்னர், ‘தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று பதுங்கினீர்கள். உச்சநீதிமன்றத்தில் மாற்றி மாற்றிச் சொன்னீர்கள். இதுதான் மாணவர்களைக் காக்கும் லட்சணமா?
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை ஏன் தரவில்லை தர்மேந்திர பிரதான்? நீங்கள் சொல்லும் மாணவர் நலனுக்கு நீங்கள் சொல்லும் முன்னுரிமையைக் கொடுத்திருந்தால் நிதியை வழங்கி இருப்பீர்களே? நிதியைக் கொடுத்துவிட்டு, அரசியல் சண்டையை நீங்கள் போட்டிருக்கலாமே?
முதல் தவணையாக தரப்பட வேண்டிய நிதியானது மாணவர்களின் கல்விக்கு, பள்ளிகளின் மேம்பாட்டுக்குத் தானே பயன்படப் போகிறது? அதை எதற்காக அரசியல் காழ்ப்புடன் நிறுத்தி வைத்தீர்கள்? பி.எம்.ஸ்ரீ திட்டத்தை, இன்னொரு திட்டத்தின் நிபந்தனையாக ஆக்கியது அரசியல் உள்நோக்கம் அல்லவா? உங்களது கீழ்த்தர அரசியலுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏன் படையெடுப்பு நடத்துகிறீர்கள்?
பலதரப்பினருடன் ஆலோசனை செய்த பிறகே தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தியதாகச் சொல்லி இருக்கிறீர்கள். அப்போதே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததே. அதற்கு உங்கள் பதில் என்ன? இந்தக் கொள்கையில் ‘இந்திய மக்களின் கூட்டு அறிவு நுட்பம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். இதைவிட அதிகமான அறிவு நுட்பம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடும் கேரளாவும் எப்போதோ உயர்ந்துவிட்டது. ‘சிவாஜி செத்துட்டாரா?’ என்று கேட்பதுபோல இப்போதுதான் நீங்கள் புறப்படத் தொடங்கி இருக்கிறீர்கள்.
பி.எம்.ஸ்ரீ திட்டம் என்பது இந்தியைத் திணிக்கும் திட்டமே தவிர வேறல்ல. கல்வியில் முன்னேறிய மாநிலங்களை மீண்டும் பின் நோக்கி அழைத்துச் செல்லும் திட்டம் இது. இதன் மூலமாக வடமாநிலங்களைப் போல, தமிழ்நாட்டையும் தரையிறக்கப் பார்க்கிறீர்கள் என்று முரசொலி விமர்சித்துள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் என்பது 2009 ஆம் ஆண்டு முதல் அமலில் இருப்பது. அதன் மூலமாக 15 ஆண்டுகளாக ஒன்றிய அரசில் இருந்து நிதி வருகிறது. அதை, 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கல்விக் கொள்கைக்கு நிபந்தனையாக்கியது சதிச் செயல் அல்லவா? நீங்கள் மாணவர் நலனைப் பற்றி எல்லாம் பேசலாமா?
முரசொலி தலையங்கம்!
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!