murasoli thalayangam

சிகாகோவில் முதலமைச்சர் : “உலகத்தின் குரலாக அமைந்த முதலமைச்சரின் உரை” - முரசொலி புகழாரம் !

உலகத் தமிழர்க்கு முதல்வர்!

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அமெரிக்க வாழ் தமிழ் நெஞ்சங்களில் நிறைந்துவிட்டார்கள். சிகாகோ மாநகரில் அவர் ஆற்றிய உரை என்பது உலகத் தமிழர்க்கு ஆற்றிய உணர்ச்சிமிகு உரையாக அமைந்துவிட்டது.

தமிழர்கள் வாழாத நாடு இல்லை என்று சொல்லத்தக்க வகையில் உலகம் பரவிய இனமாகத் தமிழினம் இருக்கிறது. அமெரிக்க வாழ் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டும் இருக்கிறது. நாடுகள் கடந்து பணிகளுக்காகச் சென்றவர்களுக்கு தமிழ் மொழியின் மீது இருக்கும் பற்றும், தமிழினத்தின் மீது உள்ள மாறாத நட்பும், தமிழ்நாட்டின் மீது இருக்கும் அன்பும் எந்நாளும் மாறாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது முதல்மைச்சருக்கு சிகாகோ மாநகர் அளித்த வரவேற்பு.

நிகழ்ச்சி நடைபெற்ற இடம் சிகாகோவாக இருந்தாலும், அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் தமிழர்கள் முந்தைய நாளே சிகாகோவுக்கு வரத் தொடங்கி விட்டார்கள். 'நாங்கள் சிகாகோவை நோக்கிச் செல்கிறோம்' என்று சமூக வலைதளங்களில் அமெரிக்க வாழ் தமிழர்கள் பதிவுகளைப் போடத் தொடங்கினார்கள். ஐந்தாயிரம் பேர் மட்டுமே அமர முடிந்த அரங்கில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதை விட அதிகமாகிக் கொண்டே போனது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீதான அன்பும் பாசமும் ஆகும். தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல, உலகத் தமிழர்க்கும் முதல்வராக உயர்ந்து நிற்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்தக் காட்சிகள் அமைந்திருந்தன.

மாபெரும் அரங்கில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உள்ளே நுழையும் போதே, தமிழ்நாட்டு மாநாட்டு மேடைக்குள் அவர் நுழையும் போது இருக்கும் உற்சாகம் அங்கு தோன்றியது. விண்ணதிர விசில் அடித்தும் - அரங்கம் கலங்க கைதட்டியும் வரவேற்றுள்ளார்கள் தமிழர்கள்.

"எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பேசாமல் உங்கள் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். தமிழ்நாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், எப்படி இருக்குமோ, அதைவிட அதிகமான உணர்வுப் பெருக்கோடு சிகாகோ நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று தொடங்கினார். "நான் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரமும் மகிழ்ச்சியான முகங்களும்தான் எப்போதும் என் ஞாபகத்துக்கு வரும்" என்று தனது உரையை முடித்தார். அந்தக் கூட்டம் முதலமைச்சரின் மனதில் எத்தகைய நீங்கா நினைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதை இச்சொற்கள் சொல்லும்.

அன்னைத் தமிழ் பற்றியும், பேரறிஞர் அண்ணா பற்றியும் கவிதைப் புகழை கடகடவென முதலமைச்சர் சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான சோம.இளங்கோவன் அவர்கள், 'கவிதை வளம் கொண்ட அருமையான பேச்சு இது' என்று இணையத்தில் எழுதி இருக்கிறார்கள். 'திராவிட மாடல் அரசு எப்படிச் செயல்படுகிறது?' என்று முதலமைச்சர் கேட்டதும், 'சிறப்பாகச் செயல்படுகிறது' என்று கூட்டமே ஒருமுகமாக வழிமொழிந்து வாழ்த்துச் சொன்னது.

தமிழினத்துக்கு என்ன பெருமை இருக்கிறது என்பதை முதலமைச்சர் அவர்கள் பட்டியலிட்டுச் சொன்னார்கள். “தமிழ்த்தாயின் குழந்தைகள் நாம் என்பதுதான் நம்முடைய பெரும் அடையாளமாக இருக்கிறது. இனம், மொழி, நாடு, சாதி, மதம், பால், வர்க்கம், நிறம் என்று எந்தப் பாகுபாட்டுக்கும் இடமளிக்காமல், உலக உயிர்கள் அனைத்துக்குமான பொதுமறையைத் தந்த வான்புகழ் வள்ளுவரை தந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாம்!

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று எல்லோரையும் சொந்தமாக கருதி இலக்கியம் படைத்தபுகழுக்குச் சொந்தக்காரர்கள் நாம்! கீழடி கண்டுபிடிப்பு கள் மூலமாக, நான்காயிரம் ஆண்டுக்கு முன்பாகவே எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடனும் மேம்பட்ட சமூகமாக வாழ்ந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்!" என்று சொன்ன போது பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞரின் குரலாக ஒலித்தார் முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல; உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பரணாக திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட மாடல் அரசும் செயல்பட்டு வருவதை பட்டியலிட்டுச் சொன்னார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தமிழர்கள் எங்கு பாதிக்கப் பட்டாலும், "நமக்கு என்றும் தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது" என்ற உணர்வை நம்பிக்கையை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்படுத்தி வருவதைச் சுட்டிக் காட்டினார் முதலமைச்சர் அவர்கள்.

தமிழர்களது ஒற்றுமை எந்த சூழலிலும் கெடக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார் முதலமைச்சர் அவர்கள். சாதி - மத வேறுபாடுகளை வீழ்த்தும் வல்லமையும், எல்லோரையும் ஒற்றுமைப்படுத்தும் வலிமையும் தமிழுக்குத்தான் இருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொன்னார்.

"உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை. உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்குக் காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள்." என்று முதலமைச்சர் வைத்த வேண்டுகோள் என்பது மானுடத்தை மட்டுமே வலியுறுத்திய தந்தை பெரியாரின் குரலாக இருந்தது. 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று சொன்ன பெரியாரின் கொள்கையின் நீட்சியாக அமைந்திருந்தது முதலமைச்சரின் வேண்டுகோள்.

உலகத்தின் குரலாக அமைந்திருந்தது முதலமைச்சர் அவர்களின் உரை. உலகம் எதிர்பார்க்கும் உரையாக இருந்தது. உலகத்தை மேம்படுத்தும் உரையாக அமைந்திருந்தது, இந்த உரையின் மூலம், உலகத் தமிழர்களின் முதல்வராக உயர்ந்து காட்சி அளிக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்!

Also Read: “உள்வாங்கிக் கொள்ளும் திறன் பழனிசாமிக்கு இல்லை - இதுதான் முதலமைச்சரின் மகத்தான சாதனை” : முரசொலி பதிலடி!