murasoli thalayangam

“தண்டனை வழங்குவது வேறு, வீடுகளை இடிப்பது வேறு!” - பா.ஜ.க.வின் புல்டோசர் ஆட்சியைக் கண்டித்த முரசொலி!

சட்டவிரோதச் செயல்களையே சட்டபூர்வமாகச் செய்வதில் கைதேர்ந்தவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டத்தின் மூலமாக அல்லாமல் 'புல்டோசர்' மூலமாக ஆட்சியை நடத்தி வருகிறார்கள். இந்திய ஜனநாயக ஆட்சி முறைக்கு பா.ஜ.க. அளித்து வரும் கொடை இவை.

பா.ஜ.க.வுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது வழக்குப் போடுவதோடு, அவர்களின் வீடுகளையே இடித்து விடுவார்கள். இதை நியாயப்படுத்துவதற்காக, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சிலரது வீடுகளையும் இடித்து கணக்கு காட்டிக் கொள்கிறார்கள். 'எல்லார் வீடுகளையும்தான் இடிக்கிறோம்' என்ற பசப்புக்காக!

இது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஜாமியாத் உலாமா ஐ ஹிந்த் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.“அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக டெல்லி ஜஹாங்கீர் புரியில் உள்ள போராட்டக்காரர்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புவாசிகளுக்கு உரிய முன்னறிவிப்பு ஏதும் அளிக்காமல் இதுபோன்ற நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் சொல்லப்பட்டு இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத்தும் மனு தாக்கல் செய்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டெல்லி ஜஹாங்கீர் புரியில் நடந்த ஒரு ஊர்வலத்தின் போது வகுப்புவாத வன்முறைகள் நடைபெற்றன. அதன்பிறகு அந்தப் பகுதி வீடுகள் விதிமுறை மீறிக் கட்டப்பட்டவை என்று சொல்லி இடிக்கப்பட்டன. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இடிப்பு நடவடிக்கை தடுக்கப்பட்டது. அப்போது சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்தினார் பிருந்தா காரத். வழக்கும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன் நடந்தது. எந்தெந்த மாநிலங்களில் இதுபோன்ற புல்டோசர் வைத்து வீடுகள் இடிக்கப்பட்டன என்பதற்கான ஆதாரம் கொண்ட புகைப்படங்களை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

'அரசுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு புல்டோசர் நீதி வழங்கப்படாது என்ற அரசுத் தரப்பு அறிக்கையை நாடு முழுமைக்கும் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்' என்று மனுதாரர் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் கூறினார்.

நீதிபதிகள் கேட்ட கேள்விகள் மிக மிக முக்கியமானவை. “குற்ற வழக்கில் தொடர்புடையவர் அல்லது குற்றவாளி என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்? உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இதுபோன்று செய்ய முடியாது. இது தொடர்பாக நாடு முழுமைக்குமான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வகுக்கும்” என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

உத்தரப்பிரதேச மாநில அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். 'ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்?' என்று நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பினார்.

‘குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவருக்குச் சொந்தமான எந்தக் கட்டடத்தையும் இடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டடத்தை இடிப்பதற்கான நோட்டீஸ் கொடுத்துள்ளோம்' என்றார் சொலிசிட்டர் ஜெனரல். நோட்டீஸ் கொடுத்தால் அது சட்டபூர்வ நடவடிக்கை ஆகிவிடும் போல!

“தொழில்முறைக் குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களுக்கு எதிரான நடவடிக்கை இது” என்று உ.பி. மாநில அரசு வெளிப்படையாக நியாயப்படுத்தியது.

புல்டோசர் வைத்து யாருடைய வீடுகளை இடித்தார்கள் என்பதை 'பி.பி.சி.' செய்தி நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

•இசுலாமிய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் மனித உரிமை ஆர்வலர் ஜாவேத் முகமது. அவரைக் கைது செய்தது உ.பி. அரசு. அவரது வீட்டை புல்டோசர் கொண்டு இடித்தார்கள்.

•சமாஜ்வாடி கட்சிப் பிரமுகரான ஹாஜி ரஸாவின் வணிக வளாகம் இடிக்கப்பட்டுள்ளது. உ.பி. மாநிலத்தில் செல்வாக்கு கொண்ட அதிக் அகமதுவின் உறவினர்களது வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

•மத்தியப்பிரதேசத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் ஹாஜி ஷாஜாத் அலி வீடு இடிக்கப்பட்டது.

•2022 ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் புல்டோசர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்கிறது சர்வதேச மனித உரிமை அமைப்பான 'அம்னஸ்டி இண்டர்நேஷனல்’.

இப்படி பல்வேறு மாநிலங்களில் இவை நடந்துள்ளன. அசாம் மாநிலத்தில் மீன் வியாபாரியான சஃபிகுல் இஸ்லாம் வீடு இடிக்கப்பட்ட வழக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ஆர்.எம்.சாயா,“மிகத் தீவிரமான வழக்குகளை விசாரணை செய்யும் போது தேடுதல் என்ற பெயரில் புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிக்க எந்த குற்றவியல் சட்டமும் பரிந்துரைக்கவில்லை” என்று சொன்னார்.

அவர் இன்னொரு கேள்வியையும் கேட்டார்,“நாளைக்கு உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் என்னுடைய நீதிமன்ற அறையையும் இடித்துவிட்டு தேடுதல் நடத்துவீர்களா? தேடுதல் என்ற பெயரில் ஒருவருடைய வீட்டை இடிக்க அனுமதி வழங்கினால் யாருக்கும் இங்கே பாதுகாப்பு இருக்காது.

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். இது போன்ற வீடுகளை இடிக்கும் சம்பவம் எல்லாம் சினிமாவில்தான் நடக்கும். அப்போதும் 'வாரண்ட்' காண்பிக்கப்படும். வீடுகளில் தேடுதல் நடத்துவதற்கு அந்த வீட்டை இடிக்கத்தான் வேண்டுமா? சட்டம்-ஒழுங்கு என்று ஏன் சேர்த்துச் சொல்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் கடுமையாக உத்தரவிட்டார்கள்.

குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவது வேறு, வீடுகளை இடிப்பது வேறு. 'குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும் வீட்டை இடிக்க முடியாது' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

உ.பி. முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் இப்படிச் சொல்லி இருக்கிறார் : 'அநீதியின் புல்டோசரை விட நீதியின் அளவு பெரிது!'

Also Read: தமிழ் வளர்ச்சித்துறையில் முதன் முதலாக 6 மண்டலங்கள் பிரிப்பு... - விவரம் !