murasoli thalayangam
கொல்கத்தாவில் நடந்தால் மட்டும் கண்ணீர் நாடகம்... மணிப்பூரில் ? - பாஜகவை அம்பலப்படுத்திய முரசொலி !
முரசொலி தலையங்கம் (03-09-2024)
மணிப்பூரும் கொல்கத்தாவும் !
கொல்கத்தாவில் நடந்துள்ள கொடூரம், எத்தகைய மோசமான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைத்து தலைகுனிய வைக்கிறது! கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு முதுநிலை பயிற்சி மருத்துவர் ஆகஸ்ட் 9 ஆம் நாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். உயிரற்ற உடலாக ஆக்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்கள் அவரது உடலிலேயே இருந்தது. அந்த மருத்துவமனை காவல் பணியாளர்களுள் ஒருவரான சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த வழக்கை தானாக முன்வந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தியது.“பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொடூரமானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான அமைப்பு ரீதியான பிரச்சினையை எழுப்புகிறது. பெண்கள் வேலைக்குச் செல்ல முடியாவிட்டால், அவர்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழல் இல்லாவிட்டால் அவர்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது என்றே பொருள்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டார்கள். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் செய்ததாக மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. “பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தற்கொலை போல மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்தரிக்க முயன்றுள்ளார். அந்த சம்பவம் நடைபெற்ற பின்னர் கல்லூரி முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது செயல்பாடுகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு எப்படி மற்றொரு மருத்துவமனையில் பொறுப்பு வழங்கப்பட்டது?” என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், என்னிடம் அதிகாரம் இருந்தால் ஒரு வாரத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்குவேன் என்றும், பத்து நாளில் மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப் போவதாகவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சொல்லி இருக்கிறார். 'போராடும் மருத்துவர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது' என்றும் முதலமைச்சர் மம்தா சொல்லி இருக்கிறார்.
இந்த கொடூரத்தில் நடக்கும் கொடூரம் பா.ஜ.க. நடத்தும் அரசியல்தான். பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி இருக்கிறது. மம்தாவை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகச் சொல்லி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொல்கத்தா சம்பவத்தை கண்டித்துள்ளார். "கொல்கத்தாவில் ஒரு மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது தேசத்தை உலுக்கி இருக்கிறது. இதைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இது ஒரு சம்பவம் அல்ல, பெண்களுக்கு எதிரான தொடர் குற்றங்களின் ஒரு பாகம் இது. நாகரிகம் அடைந்த எந்த சமூகமும் இத்தகைய கொடூரத்தை அனுமதியாது. தேசம் சீற்றம் கொள்ளும், நானும் சீற்றம் கொள்கிறேன்..” என்று கோபம் காட்டி இருக்கிறார் குடியரசுத் தலைவர். அவருக்கு மணிப்பூர் மாநிலம் மறந்து போயிருக்காது.
“தவறு இழைக்கும் யாரும் தப்பி விடக்கூடாது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும். நாட்டில் எந்த மாநிலமாக இருந்தாலும், மகள்களின் வலி மற்றும் கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் இருந்து யாரும் தப்பி விடக்கூடாது. போலீஸ் உட்பட யாரிடம் அலட்சியம் இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசி இருப்பவர் யார் தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். மணிப்பூர் கொடூரத்தை அவர் நாக்கு மறந்திருக்கலாம். ஆனால் அவரது மனச்சாட்சி மறந்திருக்காது. உலகம் முழுக்க சுற்றி வரும் மோடி, இதுவரை மணிப்பூர் செல்லவில்லை. அவரது மனவரைபடத்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட மாநிலமாக மணிப்பூர் இருக்கிறது.
மணிப்பூரில் என்ன நடந்தது? சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கையே சொல்கிறது... “அந்த இரண்டு பெண்களை ஆயுதம் தாங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரட்டி வந்தார்கள். அந்த பெண்கள் இருவரும் தப்பித்து காட்டுக்குள் ஓடினார்கள். சாலையோரத்தில் ஒரு காவல்துறை வாகனம் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அதற்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். அந்த வாகனத்தில் ஓட்டுநர் இருந்தார். காவல் துறை அதிகாரிகள் இருவர் உள்ளே உட்கார்ந்து இருந்தார்கள். நான்கைந்து காவலர்கள் அந்த வாகனத்துக்கு அருகில் நின்று கொண்டு இருந்தார்கள். அந்த இரண்டு பெண்களோடு, ஆண் ஒருவரும் ஓடி வந்தார். தங்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போய்விடுங்கள் என்று அந்த ஆண், காவலர்களிடம் கெஞ்சினார். ஆனால் காவலர்கள், 'இந்த வாகனத்தில் சாவி இல்லை' என்று சொல்லி விட்டார்கள். அந்தப் பெண்களைக் காப்பாற்ற காவலர்கள் மறுத்துவிட்டனர். அதற்குள் கலவரக்காரர்கள் அந்த வாகனத்தை சூழ்ந்து விட்டார்கள். உடனடியாக காவலர்கள் அனைவரும் ஓடிவிட்டார்கள். வாகனத்துக்குள் இருந்த இரண்டு பெண்களையும் கலவரக்காரர்கள் வெளியில் இழுத்து வந்தார்கள். நிர்வாணப்படுத்தினார்கள். ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். பாலியல் வன்கொடுமை செய்தார்கள்” -- என்கிறது சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை.
என்ன நடவடிக்கை எடுத்தது மணிப்பூர் பா.ஜ.க. அரசு? 'இது போல நிறைய சம்பவம் நடந்துள்ளது' என்று சொன்னார் மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன்சிங். அவர் மீது நடவடிக்கை எடுத்தாரா பிரதமர் மோடி? பா.ஜ.க.வைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் டெல்லி வந்து உள்துறை அமைச்சரிடம் முதலமைச்சர் பற்றி புகார் அளித்தார்களே. அதன்பிறகாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை! கொல்கத்தாவில் நடந்தால் மட்டும் கண்ணீர் நாடகங்களா?
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!