murasoli thalayangam

தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள் மீது நிதித் தாக்குதல் நடத்துகிறது ஒன்றிய அரசு : முரசொலி விமர்சனம் !

முரசொலி தலையங்கம் (30-08-2024)

நிதித் தாக்குதல் நடத்தாதீர்.....

மழை, வெள்ள காலத்தில் தரவேண்டிய உதவித் தொகையைக் கூட தர மறுக்கும் இரக்கமற்ற ஒன்றிய அரசு, இப்போது தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள் மீது நிதித் தாக்குதலைத் தொடுத்துள்ளது. தமிழ்நாட்டின் கல்வித் திட்டத்துக்காகத் தர வேண்டிய நிதியைக் கூட தர மறுக்கிறது. இத்தகைய கொடூர நடத்தைகளை இதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை.

“சமக்ரா சிக்ஷா” என்பது அந்தத் திட்டத்தின் பெயராம். பெயரே சரியில்லை. பிறகு திட்டம் எப்படி முறையாகச் செயல்படுத்தப்படும்?

ஒன்றிய அரசின் நிதி உதவியோடு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டம் இது. ஒன்றிய அரசின் நிதி உதவியோடு செயல்படும் திட்டம் என்றால் ஒன்றிய அரசு தானே நிதி தர வேண்டும். தருவது இல்லை. தங்கள் பெயரை மட்டும் வைத்துக் கொள்வார்கள்; கால் பங்கு நிதியை மட்டும் கொடுத்துவிட்டு, ‘பிரதமர் வீடு கட்டும் திட்டம்’ என்று சொல்லிக் கொள்வதைப் போல!

2024–-25 ஆம் கல்வி ஆண்டில் 3,586 கோடியை பள்ளிக் கல்வித் துறைக்கு என நிர்ணயித்தார்கள். ஆனால் முழுமையாகத் தரவில்லை. ஒன்றிய கல்வி அமைச்சருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதிய பிறகுதான் கொஞ்சம் பணம் வந்தது. அதிலும் இன்னும் பாக்கி இருக்கிறது. இந்த ஆண்டுக்கான பணம் வரவில்லை.

“பி.எம்.ஸ்ரீ, (PM SHRI) பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்தினால் தான், ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் நிதியை வழங்குவோம்” என்று நிபந்தனை போட்டுள்ளார்கள். இரண்டு திட்டங்களும் வேறுவேறானவை. பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் தனிப்பட்ட சிறப்புப் பள்ளிகள். ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின் மூலமாக வழங்கும் பணம் என்பது ஒட்டுமொத்த கல்வித் துறைக்கானது. இரண்டையும் எப்படி ஒன்றாகக் கருதமுடியும்? இதற்கு, அது எப்படி நிபந்தனையாகும்?

எனவே, “சமக்ரா சிக்ஷா திட்டத்துக்கான நிதியை தாமதம் இல்லாமல் வழங்குங்கள்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சரை கடந்த ஜூலை மாதமே சந்தித்து வலியுறுத்தினார்கள். நிதி வரவில்லை. பிரதமர் மோடி அவர்களுக்கு, முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள். அமெரிக்கப் பயணத்துக்கு முன் அளித்த பேட்டியிலும் இதனை வலியுறுத்தினார்கள். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நேற்றைய தினம் இதனை ஊடகங்களின் மூலமாகவும் வலியுறுத்தி இருக்கிறார். இதன் பிறகும் ஒன்றிய அரசிடம் இருந்து முறையான பதில் இல்லை.

தேசியக் கல்விக் கொள்கை பற்றி பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மாநிலத்துக்கு நிதி கொடுத்துள்ளீர்கள். தேசிய கல்விக் கொள்கை 2020-–இல் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்களை பாதிக்கும் கொள்கைகளை அமல்படுத்தும் போது, அதில் ஒவ்வொரு மாநிலத்தின் நியாயமான கருத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும். விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையினை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது.” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

“புதிய கல்விக் கொள்கையில் இணைய தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது. அதனால்தான் நிதியளிக்க மறுக்கிறார்கள்” என்பதையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்தியா முழுவதும் இருக்கும் 14 ஆயிரம் பள்ளிகளை தரம் உயர்த்தி அதை பி.எம்.ஶஸ்ரீ, பள்ளிகள் என்று சொல்லப் போகிறார்கள். அவ்வளவுதான். பி.எம்.ஶஸ்ரீ, பள்ளிகளுக்கு மட்டுமே அனைத்து வசதிகளும் தரப்படும் என்றால் மற்ற பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் அல்லவா? அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் அல்லவா? ‘அனைவர்க்கும் சமவாய்ப்பு’ என்பதன் எதிர் நிலைப்பாடு அல்லவா இது?

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அனைத்துப் பள்ளிகளும் சமச்சீரான வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. பள்ளிக் கல்வித் துறை சீரான, சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. அகில இந்தியக் குறியீடுகளை விட அதிகமான வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்து வருகிறது. இதனை மேலும் செம்மைப்படுத்த தமிழ்நாட்டுக்கான மாநிலக் கல்விக் கொள்கையை முன்னாள் நீதியரசர் முருகேசன் தலைமையிலான வல்லுநர் குழு ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட நினைக்கிறது ஒன்றிய அரசு.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற வாதம் வலுத்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை மீது நிதித் தாக்குதலை நடத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு.

‘சமக்ரா சிக்ஷா’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியினை நிறுத்தி வைக்கும் ஒன்றிய அரசின் தற்போதைய நடவடிக்கை, இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும். இதைப் பற்றி எல்லாம் பா.ஜ.க.வுக்கு எப்போதும் எந்தக் காலத்திலும் கவலை இருந்தது இல்லை.

Also Read: கலைஞர் கொண்டுவந்த 3% உள் ஒதுக்கீடு! : மருத்துவம், பொறியியலில் இணைந்த ஆயிரக்கணக்கான அருந்ததியர் மாணவர்கள்!