murasoli thalayangam

காஷ்மீரில் பாஜக பறித்த ஜனநாயகத்தின் மூச்சுக் காற்று திரும்பவுள்ளது : முரசொலி தலையங்கம் !

முரசொலி தலையங்கம் (23-08-2024)

காஷ்மீரில் ஜனநாயகக் காற்று...

ஒருவழியாக மனமிரங்கி காஷ்மீருக்கு தேர்தல் தேதியை அறிவித்து விட்டார்கள். அங்கே ஜனநாயகக் காற்று வீசுவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது.

இப்போதும் அவர்களாக தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்த பிறகுதான் அறிவித்துள்ளார்கள். “2024 செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பாக, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஜம்மு -– காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்த வேண்டும்” என்று கடந்த 12.12.2023 அன்று உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தது. அதனால்தான் இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு -– காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செப்டம்பர் 10, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடக்க இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அக்டோபர் 4 வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஜம்மு -– காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் பொதுத் தொகுதிகள் 74. பழங்குடியினருக்கு 9 தொகுதிகளும், பட்டியல் பழங்குடியினருக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கான, மக்களாட்சி உருவாக காஷ்மீர் மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

பா.ஜ.க. கண்ணில் எப்போதும் காஷ்மீர் உறுத்திக் கொண்டே இருக்கும். 370 என்ற சிறப்புத் தகுதி இருப்பதால், ‘இந்தியாவே பலவீனம் அடைகிறது’ என்பதைப் போன்ற தோற்றத்தை பா.ஜ.க. அரசியல் களத்தில் உருவாக்கிக் கொண்டு இருந்தது. பாபர் மசூதி இடிப்பு, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது, காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி அளிக்கும் 370 ஆவது அரசியல் சட்டத்தை நீக்குவது - – இவை மூன்றும்தான் பா.ஜ.க.வின் அரசியல் நோக்கங்கள். இதற்காகத் தான் பிறந்தது. இதற்காகத்தான் வாழ்ந்தும் வருகிறது.

பாபர் மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டப்பட்டு விட்டது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு விட்டது. பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பம்மாத்தை பா.ஜ.க. தொடங்கிவிட்டது. மற்றபடி, இந்திய நாட்டு மக்கள் குறித்த எந்தக் கவலையும் தங்களுக்கு இல்லை என்பதை பா.ஜ.க. தினந்தோறும் மெய்ப்பித்துக் கொண்டு இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அப்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் கைப்பற்றியது.

மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும், பா.ஜ.க.வும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. மெகபூபா முப்தி, முதலமைச்சராக இருந்தார். நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார் முப்தி. அவரது ஆட்சியைக் கவிழ்த்தது பா.ஜ.க.. இந்நிலையில் மற்ற கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கின. இதனை அறிந்த பா.ஜ.க., ஆட்சியைக் கலைத்தது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைத்தது. ஜனநாயகத்தின் மூச்சுக் காற்று 2018 ஆம் ஆண்டு காஷ்மீரத்தில் நிறுத்தப்பட்டது.

‘இதற்குத்தான் காத்திருந்தோம்’ என்பதைப் போல சதித் திட்டத்தை அடுத்தடுத்து அரங்கேற்றியது பா.ஜ.க.. காஷ்மீரத்துக்கு வழங்கப்பட்டு வந்த 370 ஆவது சிறப்புத் தகுதியை நாடாளுமன்றத்தின் மூலமாகப் பறித்தார்கள். ஜம்மு – -காஷ்மீருக்கான மாநிலத் தகுதியைப் பறித்தார்கள். ஜம்மு –- காஷ்மீர் என்றும் லடாக் என்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலத்தை வகுத்தார்கள். தேர்தலை நடத்தினார்களா என்றால் இல்லை. 2019 முதல் 2024 வரை தேர்தலே அங்கு நடத்தப்படவில்லை.

தொகுதி வரையறை என்ற பெயரால், இசுலாமியர் பெரும்பான்மை வந்துவிடாதவாறு ஒவ்வொரு தொகுதியையும் சிதைக்கும் காரியங்களையும் கச்சிதமாகப் பார்த்தார்கள். இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 6 தொகுதிகள் அதிகம் ஆகி விட்டது. இசுலாமியர் அதிகம் வசிக்கும் பகுதியில் 1 தொகுதி மட்டுமே அதிகமாகி உள்ளது. தேர்தலுக்குள் இன்னும் பல செயல்களை அரங்கேற்றுவார்கள்.

காஷ்மீர் மாநிலத்துக்கு 1950 முதல் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமையை விலக்கிக் கொள்ளும் முடிவை ஒன்றிய பா.ஜ.க. அரசானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிறைவேற்றியது. இதனை உச்சநீதிமன்றமும் ஒப்புக்கொண்டு விட்டது என்பது உண்மைதான். அதற்கு உச்சநீதிமன்றம் சொன்ன காரணம், “370 ஆவது பிரிவை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு” என்பது மட்டும்தான்!

காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் –- லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க. அரசு மாற்றியது. இதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்பதும் உண்மைதான். அதற்கு உச்சநீதிமன்றம் சொன்ன காரணம், “எந்த மாநிலமாக இருந்தாலும் அதனைப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உண்டு” என்பது மட்டும்தான்!

அவர்களுக்குள்ள அதிகாரப்படி செய்து கொண்டார்கள் என்பதை மட்டுமே உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இந்தத் தீர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய வேறு சில உத்தரவுகளும் இருந்தன.காஷ்மீரை மாநிலமாக உயர்த்தியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அதனை பா.ஜ.க. அரசு செய்தாக வேண்டும்.

தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் கெளல்,“1980 ஆம் ஆண்டு முதல் காஷ்மீரத்தில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க பாரபட்சமற்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு அமைக்க வேண்டும்”என்று தீர்ப்பளித்து இருந்தார். அதனைச் செய்தாக வேண்டும்.

புதிதாக உருவாக இருக்கும் மக்கள் அரசு, காஷ்மீரத்து மக்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசாக அமைந்தால் மட்டுமே அங்கு ஜனநாயகக் காற்று வீசும்.

Also Read: 10 ஆண்டுக்கு பின் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் : ஒரே அணியாக தேர்தலை சந்திக்கும் இந்தியா கூட்டணி !