murasoli thalayangam

“இதுவாவது பழனிசாமிக்கு தெரியுமா?” - நீட் தேர்வுக்கு எதிராக திடீர் போராளியாக மாறிய முரசொலி கேள்வி!

முரசொலி தலையங்கம்

19.8.2024

பழனிசாமி பேசலாமா?

திடீரென்று ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் போராளியாக மாறி இருக்கிறார் அ.தி.மு.க.வின் ஒரு பிரிவு பொதுச்செயலாளரான பழனிசாமி!

‘நீட்’ தேர்வு தோல்வி காரணமாக தனுஷ் என்ற மாணவர் தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட சோகம் இரண்டு நாட்களுக்கு முன் அரங்கேறியது. இதைப் பார்த்ததும் பழனிசாமிக்கு யார் மீது கோபம் வர வேண்டும்? ‘நீட்’ தேர்வை நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மீது கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் பயந்த பழனிசாமி, தி.மு.க. மீது பாய்கிறார். ‘இன்னும் எத்தனை மாணவர்கள் பலியாக வேண்டும்’ என்று பம்மாத்து காட்டுகிறார்.

‘நீட்’ தேர்வை தி.மு.க. அரசு நடத்தவில்லை என்று கூட இந்தத் தற்குறி தலைவருக்கு தெரியவில்லை. அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின், வைசியஸ்ரீ, ரிதுஸ்ரீ, மோனிஷா, கீர்த்தனா, ஹரிஷ்மா, ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா, மோதிலால், விக்னேஷ், சுபஶஸ்ரீ ஆகிய 14 மாணவச் செல்வங்கள் ‘நீட்’ தேர்வுக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது எல்லாம் பழனிசாமி ஆட்சியில்தான்!

தூத்துக்குடியில் 13 உயிர்களை துப்பாக்கியால் சுடும்போது அதை டி.வி.யில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததும், நீட் தேர்வுக்காக 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்ததும் பழனிசாமியின் இரக்கமற்ற குணத்துக்குச் சாட்சியங்கள் ஆகும்.

“நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது அன்றைய முதலமைச்சர் பழனிசாமி.

மருத்துவத் துறையை கவனித்து வந்த இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வர 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது மோடி அரசு. தேசிய மருத்துவ ஆணையம் மூலம்தான் ‘நீட்’ தகுதி தேர்வும், மருத்துவ மேல் படிப்பிற்கான நெக்ஸ்ட் தேர்வும் நடத்தப்படும். இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேறியது.

அதன்பிறகு மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட போது, அ.தி.மு.க. எம்.பி நவநீத கிருஷ்ணன், “இந்த மசோதா நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு பலம் சேர்ப்பதால் ஆதரிக்க முடியாது’’ என்று சொன்னார். மசோதவை எதிர்த்த அ.தி.மு.க. என்ன செய்திருக்க வேண்டும்? மசோதவிற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும் அல்லவா! ஆனால், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அதாவது மசோதா நிறைவேற மறைமுகமாக அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. அன்றைக்கு தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள அப்படியோரு நாடகத்தை நடத்தினார்கள். அவர் தான் இன்று வாய்நீளம் காட்டுகிறார்.

‘நீட்’ முதல் தேர்வு 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் வந்தது. அப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தது பா.ஜ.க. மாநிலத்தை ஆளுகிறது அ.தி.மு.க. இதுவாவது பழனிசாமிக்கு தெரியுமா?

இப்படி ஒரு தேர்வு தேவை என்று இந்திய மருத்துவக் கவுன்சில் 2010 ஆம் ஆண்டு சொன்னபோது - உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதே உச்சநீதிமன்றம் இந்தத் தேர்வுக்கு தடை போட்டுவிட்டது. அதனால் இந்தத் தேர்வு வரவில்லை. 2014 ஆம் ஆண்டோடு இந்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து காங்கிரஸ் கட்சி இறங்கிவிட்டது. அதுவரை இந்த தகுதித் தேர்வு வரவில்லை.

தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டுடன் தி.மு.க. ஆட்சி நிறைவுற்றது. அதுவரை இந்தத் தகுதித் தேர்வு வரவில்லை. 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி தொடங்குகிறது. 2014 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது. அதற்குப் பிறகு தான் ‘நீட்’ தேர்வு வருகிறது. அப்படியானால் நீட் தேர்வுக்கு பொறுப்பேற்க வேண்டியது பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தானே. இத்தனை உயிர்கள் பலியானதற்கு இந்த இரண்டு கட்சிகளும் தானே காரணம்?

‘நீட் தேர்வு செல்லாது’ என்று உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று தீர்ப்பளித்தது. நீட் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது ‘சங்கல்ப்’ என்ற தனியார் பயிற்சி நிறுவனம். தடையை நீக்க வாதாடியது அந்த அமைப்பு. 11.4.2016 அன்று தடையை நீக்கியது உச்சநீதிமன்றம். இதன்பிறகு 24.5.2016 அன்று ‘நீட்’ தேர்வை நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது.அப்போதும் தலைவர் கலைஞர் அவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். இதெல்லாம் பழனிசாமிக்குத் தெரியுமா?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பழனிசாமி ஆட்சியில் தான் ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டில் தொடங்கியது. அதை அவரது சாதனையாகச் சொல்லிக் கொள்ளட்டும். கவலையில்லை.

‘நீட்’ தேர்வை தமிழ்நாடு மட்டும் தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வந்தது. ‘தமிழ்நாடு மட்டும்தான் எதிர்க்கிறது’ என்று சொல்லி வந்தார்கள் நீட் ஆதரவாளர்கள். ஆனால் இம்முறை இந்தியாவே எதிர்க்கத் தொடங்கி இருக்கிறது. பெரும்பாலான கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் சொல்லி வருகிறார்கள். “நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் மராட்டிய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அசன் முஷ்ரிப் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலம் ஆகும்.

வட மாநிலத்து இளைஞர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் நீட்டுக்கு எதிராக எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். பிரதமரின் வாரணாசி தொகுதியில் நீட்டுக்கு மறுதேர்வு கோரி ஊர்வலம் நடந்துள்ளது. ‘நீட்’ எத்தகைய மோசடியான தேர்வு என்பது இன்று அகில இந்தியா முழுமைக்கும் அறிந்து விட்டார்கள். உச்சநீதிமன்றமும், தேர்வு முகமையை எச்சரித்துள்ளது.

நீட் தேர்வில் மோசடி நடக்கிறது, சதி நடக்கிறது, முறைகேடுகள் நடக்கிறது என்பது இந்தியா ஒப்புக் கொண்ட உண்மையாகி விட்டது. இந்தச் சூழலில் ‘நீட்’ தேர்வு ரத்தாகும் காலம் நெருங்கி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

Also Read: “திராவிட இயக்க சித்தாந்தத்தின் இந்திய முகம் ’முரசொலி மாறன்’” : பிறந்த தின சிறப்புப் பகிர்வு!