murasoli thalayangam

தேசிய பேரிடராக அறிவிக்க மோடிக்கு மனமில்லை : காரணம் இதுதான் - முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம் (14-08-2024)

தேசியப் பேரிடராக அறிவியுங்கள்!

வரலாற்றில் மாபெரும் சோகமாக பதிவாகி இருக்கிறது வயநாடு பேரழிவு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர் எண்ணிக்கை 430 ஆகிவிட்டது. காணாமல் போன 120 பேரைத் தேடும் பணி 14 ஆவது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை உடல்களை, உயிரற்றவைகளாக எடுக்கப் போகிறார்களோ?.

இந்த நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அடித்து செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் உடைமைகளை இழந்தனர். மண்ணோடு மண்ணாக புதைந்து போன வீடுகள் அதிகம். நிலங்களுக்குள் வாழ்ந்த இடங்கள் போய்விட்டன.

பத்து நாட்கள் கழித்து சாவகாசமாக பார்வையிட வந்தார் பிரதமர் மோடி. வெறும் கையோடு வந்தவர், வெறுங்கையோடு திரும்பிச் சென்று விட்டார்.வயநாட்டில் ஏற்பட்டது தேசியப் பேரிடர் என்று அறிவிக்கக் கூட அவருக்கு மனமில்லை. குஜராத்தில் நடந்திருந்தால் அன்று மாலையே தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கும். அவர்களது தேசியம் என்பது ‘இந்திய தேசியம் அல்ல. குஜராத் தேசியம்தான்.

ஜூலை மாதம் 30 ஆம் நாள் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆகஸ்ட் 10 ஆம் நாள்தான் பிரதமர் வந்து பார்வையிட்டார். அவரது சிந்தனையில் கேரளா இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால் அது நம் தவறே தவிர, அவரது தவறல்ல.

பேரிடரின் அளவை பிரதமர் மோடியிடம் விளக்கினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். முண்டக்கை நிலச்சரிவு பேரிடரின் அளவு மற்றும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அதிதீவிர பாதிப்பாகவும், தேசியப் பேரிடராகவும் அறிவிக்குமாறு கோரிக்கை வைத்தார் கேரள முதலமைச்சர். நிலச்சரிவின் தாக்கம் மற்றும் அளவை மனதில் கொண்டு தேசியப் பேரிடராக அறிவிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கையையும் அவர் வழங்கினார்.

இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் காலநிலை மாற்றம்தான் என்கிறார் ‘ஹூம் சென்டர் ஃபார் ஈக்காலஜியின் இயக்குநரான சி.கே. விஷ்ணுதாஸ். “இப்படி நிலச்சரிவுகள் நடப்பதற்கு முக்கியமான காரணம், காலநிலை மாற்றம்தான். கடந்த பத்து ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் மழை பெய்யும் விதமே முற்றிலுமாக மாறியிருக்கிறது. எங்கள் சென்டர் மூலம் 200 இடங்களில் மழைமானிகளைப் பொருத்தியிருக்கிறோம். அதை வைத்து இதனைத் தெளிவாகச் சொல்ல முடியும். காலநிலை மாற்றத்தின் காரணமாகத் தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் முழுவதுமே அதிக மழையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக அரபிக் கடல் பகுதி அதிக வெப்பமடைகிறது. இதனால் மிகப்பெரிய செங்குத்தான மேகங்கள் உருவாகின்றன. 2 கி.மீ. உயர மேகங்கள் உருவாகி, மேகவெடிப்பும் அடிக்கடி நிகழ்கிறது. அந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட இதுவொரு முக்கியக் காரணம், என்கிறார் சி.கே. விஷ்ணுதாஸ்.

இதையெல்லாம் கவனத்தில் கொள்கிறதா ஒன்றிய அரசு? இது கேரளாவுக்கான பிரச்சினை மட்டுமல்ல, இந்தியாவே கவனிக்க வேண்டிய தேசியப் பிரச்சினை அல்லவா?.

வெறும் நிலச்சரிவால் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படவில்லை. புவி வெப்ப மடைதல், கால நிலை மாற்றம் ஆகிய காரணங்களும் இதற்கு அடிப்படையாகும். கடந்த கோடைக்காலத்தில் முதன்முதலாக வெப்ப அலை பரவி இருக்கிறது. பருவ நிலை மாற்றமும் அதிகமான மழைக்கு காரணமாக இருந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்துதான் நிலச்சரிவாக வெளிப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் ஆதாரப்பூர்வமாக கொடுத்த பிறகும் சம்பிரதாயமான வார்த்தைகள்தான் பிரதமரிடம் இருந்து வந்தன. பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நாடே உள்ளது, கேரளாவுக்கான அனைத்து உதவிகளையும் செய்வோம், உங்கள் தேவைகளை எங்களுக்கு எழுதுங்கள், குட் பை... என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார் பிரதமர். அதே தமிழ்நாட்டுக்கு காட்டிய பெப்பேதான், கேரளாவுக்கும்!

தேசியப் பேரிடராக அறிவித்தால், ஒன்றிய அரசில் இருந்து உடனடியாக பணம் தந்தாக வேண்டும். அதனால்தான், ‘தேசியப் பேரிடர் என்ற வார்த்தை வெளியில் வராமல் தொண்டை அடைக்கிறது. தேசிய பேரிடராக ஒரு பேரழிவு அறிவிக்கப்பட்டுவிட்டால், அதனை ஈடுசெய்யத் தேவைப்படும் முழு நிதியையும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய நிதியில் இருந்து ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இதன் தலைவராக இருப்பவர் பிரதமர்தான். அவர் நினைத்தால் பேரிடராக அறிவிக்கலாம். நிதியையும் வாரி வழங்கலாம். அப்படி எல்லாம் நடந்து விடக் கூடாது என்பதால்தான் பிரதமர் மவுனம் சாதித்து விட்டுச் சென்றுள்ளார்.

பெருமழை பெய்ததால் மலைப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்ததால் மலைகள், இடம் பெயர்கின்றன. இடம்பெயர்ந்த மலைகள், குடியிருப்புகளை புதைக்கின்றன. வீடுகள் மண்ணோடு மண்ணாகப் போகின்றன. உள்ளே இருந்தவர் அனைவரும் மண்ணுக்குள் புதைகிறார்கள். இதைவிட பேரழிவு என்ன இருக்க முடியும்?

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.2 ஆயிரம் கோடி நிதி உதவி வேண்டும் என கேரள அரசு கோரிக்கை வைத்தது. அதற்கும் பிரதமரிடம் இருந்து பதில் இல்லை. ‘விளக்கமாக கடிதம் எழுதுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பார்கள்? பேரழிவுதான் கண்ணுக்கு முன்னால் நடந்துள்ளது, அதன் தடயங்கள் கண்ணுக்கு முன்னால் கிடக்கிறது. 430 உடல்களை விட வேறு ஆதாரங்கள் ஏதும் தேவையா? உண்மையாகவே இவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள் என்பதற்கான ‘டெத் சர்டிபிகேட் எதிர்பார்க்கிறார்களா?.

Also Read: தமிழ்ப் புதல்வன் திட்டம்: புரட்சிக் கவிஞரின் ஏக்கம் போக்கும் திராவிட மாடல் அரசு : முரசொலி தலையங்கம்!