murasoli thalayangam
தமிழ்ப் புதல்வன் திட்டம்: புரட்சிக் கவிஞரின் ஏக்கம் போக்கும் திராவிட மாடல் அரசு : முரசொலி தலையங்கம்!
முரசொலி தலையங்கம் (13-08-2024)
தமிழக முதல்வரின் தமிழ்ப் புதல்வர்கள்
“என்னரும் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னரும் கலை ஞானத்தால் பராக்கிரமத்தால் அன்பால்
உன்னத இமய மலை போல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?"
- என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஏக்கத்துடன்பாடினார். புரட்சிக் கவிஞரின் ஏக்கம் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசை வடிவமைத்து செயல்படுத்திக் காட்டி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
* நான் முதல்வன்
* புதுமைப் பெண் - ஆகிய திட்டங்களின் தொடர்ச்சியாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
ஏராளமான தொழில்கள் தமிழ்நாட்டில் தொடங்கப் படுகிறது. அப்படி தொடங்கப்படும் நிறுவனங்களில் பணியாற்ற தகுதி படைத்த தமிழ் நாட்டு மாணவர்களை உருவாக்குவதற்கான மகத்தான திட்டம்தான், ‘நான் முதல்வன்' திட்டம் ஆகும். அனைத்து மாணவர்களையும் அனைத்துத் திறமைகளிலும் முதல்வன் ஆக்கும் திட்டம் இது. தமிழ்நாட்டு இளைய சக்தியை அறிவு சக்தியாக, அனைத்து ஆற்றல்களும் கொண்ட சக்தியாக உயர்த்தும் திட்டம் இது. கடந்த மூன்றாண்டு காலத்தில் இதுவரை 28 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளார்கள். இதில் பல லட்சம் பேர் பல்வேறு பணிகளில் சேர்ந்துள்ளார்கள்.
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள் கடந்த மூன்றாண்டு காலத்தில் 1.25 லட்சம் உருவாக்கப்பட்டு, அதில் இளைஞர்கள் சேர்ந்துள்ளார்கள். புதிய தொழில் முதலீடுகள் காரணமாக சுமார் 14 லட்சம் வேலை வாய்ப்புகளை முதலமைச் சர் அவர்கள் உருவாக்கித் தந்துள்ளார்கள்.
இதன் இன்னொரு சிந்தனைதான் புதுமைப் பெண்ணும், தமிழ்ப் புதல்வனும் ஆகும். அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக் கல்விக்குள் வரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 3 இலட்சத்து 28 ஆயிரம் மாணவிகள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். இத்திட்டத்தினால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இது சாதாரணமான சாதனை அல்ல. உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1999 ரூபாய் வழங்கி வருவதன் மூலமாக ஏராளமான நன்மைகள் ஏற்பட்டுள்ளது. பெண்கள் ஏராளமாக படிக்க வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, இளம் வயது திருமணங்கள் குறைந்துள்ளது. இடைநிற்றல் குறைந்துள்ளது. மாணவியரின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது. இதே திட்டத்தை மாணவர்களுக்கும் சேர்த்து விரிவுபடுத்தி உள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாணவியர், ஆயிரம் ரூபாய் பெற்றதைப் போல மாணவர்களும் பெறப் போகிறார்கள். இந்தத் திட்டம் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் 3 இலட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டிற்கு 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். கோவை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்று திட்டத்தை தொடக்கி வைப்பதற்கு முந்தைய நாளே, இத்திட்டப் பயனாளிகள் அனைவரது வங்கிக் கணக்கிலும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு விட்டது. ‘எப்ப வருமோ' என்ற ஏக்கமில்லை. திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, கொடுத்துவிட்டார் முதலமைச்சர் அவர்கள். இது போன்ற திட்டங்களில் முதலமைச்சர் அவர்கள் எத்தகைய உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.
மாணவர்களுக்கு இனி பொருளாதாரக் கவலை இல்லை என்ற சூழலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி விட்டார்கள். இனி நான் என் பெற்றோரை எதிர்பார்க்கத் தேவையில்லை, புத்தகம் வாங்க பயன்படுத்திக் கொள்- வேன், என் அறிவை விரிவு செய்ய பயன்படுத்திக் கொள்வேன், எனது விடுதிக் கட்டணத்துக்கு இது பயன்படும், பேருந்து பயணத்துக்கு பயன்படும், இதனால் எனது பெற்றோரின் சுமை குறையும், பகுதி நேரமாக வேலை பார்த்தபடியே படித்த எனக்கு இனி அந்தத் துன்பம் இல்லை, தேர்வுக் கட்டணம் செலுத்த இது பயன்படும் -இப்படி ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு இந்தத் திட்டம் எப்படிப் பயன்படும் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.
‘எனது பெற்றோரை இனி கஷ்டப்படுத்த மாட்டேன்' என்பது அனைத்து மாணவர்களது குரலாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் யாரும் எதன் பொருட்டும் துன்பம் அடையக் கூடாது என்று சிந்திப்பவராக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் கவலையையும் தீர்ப்பவராக முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள். ‘கல்வி பெற எதுவும் யாருக்கும் தடையாக இருக்கக் கூடாது' என்பதை தொடர்ந்து சொல்லி வரும் முதலமைச்சர் அவர்கள், அந்தத் தடைகளை உடைக்கும் திட்டங்களைத்தான் உருவாக்கி வழங்கி வருகிறார்கள். தமிழ்நாட்டின் அருந்தவப் புதல்வராம் முதலமைச்சரின் ‘தமிழ்ப் புதல்வன்' திட்டம் புரட்சிக் கவிஞர் சொன்னாரே, ‘எந்நாளோ' என்ற ஏக்கம் துடைப்பதாக அமையும்.|
Also Read
-
மகனின் திருமணத்தின் போது மாரடைப்பால் உயிரிழந்த கோவை செல்வராஜ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
29 மாவட்டங்கள் - 141 அரசுப் பள்ளி : 754 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
பறக்க தயாராக இருந்தபோது இயந்திர கோளாறு : உயிர் தப்பிய 172 பயணிகள் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
-
“சிலை திருட்டு என்பது வெகுவாக குறைந்துள்ளது” - அமைச்சர் சேகர்பாபு பேட்டி !
-
திராவிட மாடல் திட்டத்தால் உயர்கல்வியில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை : தமிழ்நாடு அரசு!