murasoli thalayangam
சென்னை மெட்ரோ முதல் மதுரை AIIMS வரை... நிதி ஒதுக்காத பாஜக அரசே வெட்கமே இல்லையா? - முரசொலி கேள்வி !
மனச்சாட்சியே இல்லையா?
மனச்சாட்சியே இல்லையா? இதயமே இல்லையா? வெட்கமே இல்லையா? கூச்சமே இல்லையா? - என்றுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பார்த்துக் கேட்க வேண்டி இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக ஒன்றிய அரசு கொடுத்த நிதி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கிய தொகை ஏதுமில்லை. இதில் அதிர்ச்சி ஏதுமில்லை.
டெல்லிக்கு 43 ஆயிரம் கோடி, பெங்களூருக்கு 7 ஆயிரம் கோடி, மும்பைக்கு 4 ஆயிரம் கோடி, சூரத்துக்கு 4 ஆயிரம் கோடி, அகமதாபாத்துக்கு 2.5 ஆயிரம் கோடி, கான்பூருக்கு 2.6 ஆயிரம் கோடி, டெல்லியில் இன்னொரு திட்டத்துக்கு 3 ஆயிரம் கோடி, பாட்னா, நாக்பூர், புனே ஆகிய நகரங்களுக்கு தலா ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு, இந்தத் திட்டங்களுக்கு ஏன் நிதி ஒதுக்கினீர்கள் என்று கேட்கவில்லை. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை என்பதுதான் நம்முடைய கேள்வி.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் எழுத்து மூலமாகக் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த ஒன்றிய அரசு, “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ( phase 2) இதுவரை எந்த ஒரு நிதியும் வழங்கவில்லை” என்று ஒப்புக் கொண்டு விட்டது. இதைச் சொல்வதற்குக் கூச்சமே இல்லையா?
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள் என்பது 118.9 கிலோ மீட்டர் தூரம் கொண்டது ஆகும். இதன் மொத்த மதிப்பீடு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய். இது அதிகமான நிதி ஒதுக்க வேண்டிய திட்டமாக இருக்கிறது என்கிறது ஒன்றிய அரசின் பதில். இது மாநில அரசின் திட்டமாகச் செயல்படுத்தப்படுவதாக கை கழுவிவிட்டார்கள்.
மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது அதிக மதிப்பீடு கொண்ட திட்டங்கள் அல்லவா? தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கும் போதுதான் அதிக மதிப்பீடு என்று தெரிகிறதா?
சரி, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள்தான் மாநில அரசின் திட்டம் என்று ஒதுக்கிவிட்டீர்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது ஒன்றிய அரசின் திட்டம்தானே? அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளீர்கள்? எதுவுமில்லை. உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா?
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவதாக எந்த அறிவிப்பும் இல்லை. ‘தமிழ்நாடு’ என்று சொல்வதற்கே அவருக்கு வாய் கசக்கும். சொல்ல மறுத்திருப்பார். மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா சொல்கிறார், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். மிக விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்” என்று சொல்லி இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசால் அறிவிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவமனை இது. மெட்ரோ போல 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்க வேண்டிய 63 ஆயிரம் கோடி திட்டமல்ல இது. ஒரே ஒரு பில்டிங். இரண்டு ஆயிரம் கோடியில். அதனைக் கூட பத்தாண்டுகளாக அமைக்க முடியவில்லை என்றால், அமைக்க முடியாத கையாலாகாதவர்களா ஒன்றிய ஆட்சியாளர்கள்?
தொழில்நுட்பக் காரணங்களால்தான் தாமதம் என்கிறார் நட்டா. என்ன தொழில் நுட்பம் என்பதை அவரால் விளக்க முடியவில்லை. இதே நட்டா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டன” என்று கடந்த ஆண்டு மதுரையில் வைத்துச் சொன்னவர்தான் இவர்.
இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூரில் 1,470 கோடி ரூபாய் மதிப்பில் 2017 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்டு 2022 அக்டோபர் 5 ஆம் தேதி திறந்தும் வைத்து விட்டார். ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அப்படியே சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டுக் குட்டிச் சுவராகக் கிடக்கிறது. பிலாஸ்பூரில் ஏன் திறந்தீர்கள் என்று கேட்கவில்லை. மதுரையில் மட்டும் கட்டுவதற்கு ஏன் மனமில்லை என்று கேட்கிறோம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு 2021.51 கோடி ரூபாய். இவர்கள் அறிவித்த போது திட்ட மதிப்பீடு 900 கோடிதான். ஆண்டுகள் பலவாக இழுத்ததால் இப்போது 2 ஆயிரம் கோடியைத் தாண்டி விட்டது. இந்தத் திட்ட மதிப்பீட்டுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு என்றால் 64 கோடி மட்டும்தான்.
அதாவது 2021.51 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி 64 கோடி மட்டும்தான். கடந்த ஆண்டு 27.50 கோடி ரூபாய் மட்டும்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒதுக்கி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் சொல்லி இருக்கிறார்.
மதுரை எய்ம்ஸ் கட்டத் தாமதம் ஆகிவிட்டது என்று சொல்வதும் ஒன்றிய அமைச்சர் தான். மூன்று ஆண்டுகளில் குறைவான தொகை ஒதுக்கியதாக ஒப்புக் கொண்டதும் ஒன்றிய அமைச்சர்தான். சென்னை மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்று சொல்வதும் ஒன்றிய அரசு தான். அதனால்தான், மனச்சாட்சியே இல்லையா? இதயமே இல்லையா? வெட்கமே இல்லையா? கூச்சமே இல்லையா? - என்று ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பார்த்துக் கேட்க வேண்டி இருக்கிறது, அவர்களுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை என்றாலும்!
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!