murasoli thalayangam

“நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பதே சதி செய்து ‘திருடப்பட்ட’ வெற்றி” - முரசொலி தாக்கு !

‘சதி' செய்த முடிவுகள்!

பலவீனமான வெற்றியைத்தான் பா.ஜ.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களை அதனால் பெற முடியவில்லை. 32 இடங்கள் குறைவாக 240 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆந்திர சந்திரபாபு, பீகார் நிதிஷ்குமார் ஆகிய இரு கட்சிகளின் தயவில்தான் பிரதமர் நாற்காலியில் நரேந்திர மோடி அமர்ந்துள்ளார்.

பா.ஜ.க. வாங்கிய 246 என்ற எண்ணிக்கையில் கூட குளறுபடிகள் நடந்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களவைத் தேர்தலின் போது பதிவான வாக்குகளின் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளில் உள்ள குளறுபடிகள் குறித்து விசாரணை கோரி பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 92 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களில் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் பகீர் ரகமாக இருக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டன. தேர்தல் நடந்து முடிந்து பல நாட்களுக்கு பிறகு இறுதி வாக்கு சதவீதம் மற்றும் பதிவான வாக்குகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இது குறித்து Association for Democratic Reforms என்ற அமைப்பு ஆய்வு நடத்தி உள்ளது. இந்தியா முழுவதும் 79 நாடாளுமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளதை இந்த அமைப்பு சுட்டிக் காட்டி இருக்கிறது. இதனைச் சுட்டிக் காட்டித்தான் 92 வழக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. இதன் மூலமாக பா.ஜ.க. அடைந்த வெற்றியும் கேள்விக்குறியாகி இருக்கிறது. 'சதி' செய்யப்பட்ட வெற்றியாகவே பா.ஜ.க.வின் வெற்றியைக் கருத வேண்டி உள்ளது.

தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குகளின் சதவிகிதத்தை அறிவிப்பார்கள். இறுதியாக அறிவிக்கும் போது ஒன்று அல்லது அதைவிட ஒன்று மட்டும் கூடுதலாக இருக்கும். ஆனால் இம்முறை வாக்கு சதவிகிதத்தையும் அறிவிக்கவில்லை. இறுதியாக அறிவிக்கப்பட்டதும் அதிகம் ஆகும். தனக்கு வசதிப்பட்ட தேர்தல் ஆணையர்களை விதிமுறைகளை மீறி நியமித்தது முதல் இது போன்ற சந்தேக ரேகைகள் படர்ந்தன. அது இப்போது அதிகமாக ஆகி உள்ளது.

வாக்குப்பதிவு சதவிகிதம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முதலில் வெளியிட்ட பட்டியலுக்கும் இரண்டாவதாக வெளியிட்ட பட்டியலுக்கும் பெரிய அளவு வித்தியாசம் இருந்தது. 3.2 சதவிகிதம் முதல் 6.32 சதவிகிதம் வரை வித்தியாசம் இருந்தது. ஒரு விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சிகள் மாறிவிடும் என்பதை மனதில் வைத்து பார்த்தால் 3.2-6.32 என்ற எண்ணிக்கை எவ்வளவு பெரியது என்பதை உணரலாம்.

அதிலும் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் 12.54 சதவிகிதம் உயர்ந்தது. ஓடிசாவில் 12.48 சதவிகிதம் உயர்ந்தது. இதற்கு முன் நடந்த எந்தத் தேர்தலிலும் அறிவிக்கப்பட்ட வாக்குகளில் இந்தளவுக்கு வித்தியாசம் இருந்ததில்லை.

* ஓடிசாவில் 18 தொகுதிகள்

* மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள்

* மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகள்

* ஆந்திராவில் 7 தொகுதிகள்

* கர்நாடகாவில் 6 தொகுதிகள்

* சட்டீஸ்கரில் 6 தொகுதிகள்

* ராஜஸ்தானில் 6 தொகுதிகள் பீகாரில் 3 தொகுதிகள்

*அரியானாவில் 3 தொகுதிகள் மத்தியப் பிரதேசத்தில் 3 தொகுதிகள் *தெலுங்கானாவில் 3 தொகுதிகள்

* அசாமில் 2 தொகுதிகள்

* அருணாசலப் பிரதேசத்தில் 1 தொகுதி

* குஜராத்தில் 1 தொகுதி

* கேரளாவில் 1 தொகுதி - ஆகிய தொகுதிகளில் வாக்குகளின் வித்தியாசம் அதிகம் ஆகி இருக்கிறது.

இந்த தொகுதிகளில் மொத்தமாகக் கூட்டினால் 4.65 கோடி வாக்குகள் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது. இவைதான் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற உதவியவை என்பதில் சந்தேகமில்லை.

18 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். மும்பை வடமேற்கு தொகுதியில் சிவசேனா தான் முன்னணியில் இருந்து வந்தது. திடீரென்று பா.ஜ.க. வேட்பாளர் 48 வாக்குகள் முன்னணிக்கு வந்தார். அதன்பிறகு வாக்கு எண்ணிக்கையை அப்படியே நிறுத்திவிட்டு, பா.ஜ.க. வென்றதாக அறிவித்துவிட்டார்கள். முழுமையாக அந்த தொகுதியின் அனைத்து வாக்குகளும் எண்ணவே இல்லை. பா.ஜ.க. வெற்றி என்ற அறிவிப்புக்கு எதிராக அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால் இதில் முறைகேடு நடந்துள்ளது என்கிறார். மும்பையில் இருந்து வெளியாகும் 'மிட் டே' நாளிதழும் முறைகேடு நடந்துள்ளது என்கிறது. 'வெற்றி பெற்ற வேட்பாளரின் உறவினருக்கும், தேர்தல் ஆணையப் பணியாளருக்கும் இதில் தொடர்பு உள்ளது' என்றும் அவர்கள் யார் என்றும் பெயருடன் குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ளது 'மிட் டே'. இப்படி 79 தொகுதிகளில் வெற்றியானது சதிச் செயல் மூலமாக கிடைத்த வெற்றியாக அமைந்துள்ளன.

'திருடப்பட்ட வெற்றி' என்று சமூகச் செயற்பாட்டாளர்கள், பா.ஜ.க. கூட்டணி குறித்துச் சொல்வதும் சரியானதுதான் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

- முரசொலி தலையங்கம்

07.08.2024

Also Read: “பொய் வண்டிகளை நிறுத்துங்கள்” - பட்டியலிட்டு பாஜக அரசை விமர்சித்த முரசொலி !