murasoli thalayangam

உள் ஒதுக்கீடு தீர்ப்பு : “கலைஞரின் தொலைநோக்குச் சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி” - முரசொலி நெகிழ்ச்சி !

அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது என்றால், அதன் முழுப்பெருமை யும் தமிழினத் தலைவர் கலைஞரைச் சாரும். இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சாரும். அதனால்தான் அருந்ததியர் அமைப்பினர், அனைவருமே (45 அமைப்பினர்) அண்ணா அறிவாலயம் வருகை தந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துச் சென்றுள்ளார்கள்.

"ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்திற்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. முறையாக குழு அமைத்து அதன் மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3 சதவிகித உள் ஒதுக்கீட்டை தலைவர் கலைஞர் கொடுக்க, அதற்கான சட்ட முன் வடிவை பேரவையில் நான் அறிமுகம் செய்து நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார் "திராவிட மாடல்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

"எங்களது 58 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டீர்கள்' என்ற பாராட்டுச் சொல்லுக்குப் பின்னால் அரைநூற்றாண்டு அரசியல் வரலாறு இருக்கிறது என்பதுதான் உண்மை.

அருந்ததியர் மக்களின் மேன்மைக்காக 2008 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் திட்டயிட்டார்கள். எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்யக் கூடியவர் அல்ல முதல்வர் கலைஞர். சட்டபூர்வமான அனைத்தையும் படிப்படியாகச் செய்யத் திட்டமிட்டார். சென்னை உயர்நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் 25.3.2008 அன்று குழு அமைத்தார் முதல்வர் கலைஞர். அக்குழு, "அருந்ததியர் மக்களுக்கு தனிக் கவனம் தேவை, அவர்கள் உரிய விகிதாச்சாரத்தைப் பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். அருந்ததியர் மக்களுக்கு சிறப்புச் சலுகை தர வேண்டும்" என்று அக்குழு பரிந்துரைத்தது.

முதலமைச்சருக்கு அருந்ததியா் சமுதாயத்தினர் நன்றி!

பட்டியலின ஒதுக்கீடாக இருக்கும் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இருந்து 3 விழுக்காடு அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 27.11.2008 அன்று கூடிய தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்தது. அந்தக் காலக் கட்டத்தில் முதுகு வலி காரணமாக ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்தார் முதலமைச்சர் கலைஞர். அந்தச் சூழலில் கலைஞரின் வார்ப்பாக அப்போதைய துணை முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அருந்ததியினருக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவை பேரவையில் 26.2.2009 அன்று அறிமுகம் செய்து நிறைவேற்றினார். 29.4.2009 இல் இது தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்றைக்கு அருந்ததியர் மக்கள் அடைந்துள்ள உயரம் என்பது மிக மிக அதிகம் ஆகும்.

உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிராகச் சிலர் வழக்கு தொடுத்திருந்தார்கள். "தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும்” என்று 2020 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

இப்போது தீர்ப்பு வந்துள்ள வழக்கானது, ஆந்திர மாநிலம் தொடர்புடையது. அந்த மாநிலத்தில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பாக ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'அதைச் செல்லாது' என்று 2015 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்திருந்தது. இந்த வழக்கில் இன்றைய தமிழ்நாடு அரசு தன்னை இணைத்துக் கொண்டு வாதங்களை வைத்தது. 'உள் ஒதுக்கீடு தேவை' என வலிமையாக வாதிட்டது. இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அமர்வு விசாரித்து, 'செல்லும்' என்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலமாக தமிழ்நாடு அரசின் சட்டமும் செல்லும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உள் ஒதுக்கீடுக்கு மட்டுமல்ல, சமூகநீதியை வலிமைப்படுத்துவதாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. "பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சாசனத்தின் 15,16,341 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது அல்ல. அரசமைப்புச் சாசனத்தின் பாகுபாட்டைத் தடுக்கும் பிரிவும், வேலைவாய்ப்பில் சம வாய்ப்பை அளிக்கும் பிரிவும் பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநிலங்கள் அளிப்பதற்குத் தடையாக இல்லை. பட்டியலின பழங்குடியினர் பிரிவிலுள்ள பின் தங்கிய சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். அப்படி வழங்கும் போது, அந்தச் சமூகத்துக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்ற தரவுகள் நியாயப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்” என்று ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஆறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்கள்.

சமூக துணை வகைப்படுத்துதல் மேற்கொண்டு உள் இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அரசமைப்பு அதிகாரம் உண்டு என்று சொல்வதன் மூலமாக மாநில உரிமையும் நிலை நாட்டப்பட்டுள்ளது.

இது அருந்ததியர் இனத்துக்கு கிடைத்த வெற்றி. சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி. மாநில உரிமைகளுக்குக் கிடைத்த வெற்றி. மொத்தத்தில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி இது, 'திராவிட மாடல்' முதலமைச்சருக்குக் கிடைத்த வெற்றி.

Also Read: "இப்படி எல்லாம் பேசுபவர்கள் என்ன குரூரமான ஜாதி வகை?" - பாஜக தலைவர்களை குறிப்பிட்டு முரசொலி விமர்சனம் !