murasoli thalayangam

“வந்தே பாரத் விடுவது பெருமையல்ல; விபத்தில்லாத ரயில்வே தான் பெருமை” : மோடி அரசுக்கு ‘முரசொலி’ அட்வைஸ்!

பொதுப் போக்குவரத்தின் அடித்தளமாக இருக்கக் கூடிய ரயில் பயணமானது பாதுகாப்பற்றதாக மாறிக் கொண்டு இருக்கிறது. ஜூலை மாதத்தில் 9 ரயில் விபத்துகள் நடந்துள்ளன.

ஜூலை 18 - உத்தரப்பிரதேச மாநிலம் - கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர் - திப்ருகர் விரைவு வண்டியின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். 30 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜூலை 19 –குஜராத் மாநிலம் வல்சாத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.

ஜூலை 20 - உத்தரப்பிரதேச மாநிலம் - அம்ரோஹாவில் சரக்கு ரயிலில் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஜூலை 21 - ராஜஸ்தான் –- அல்வாரில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.

ஜூலை 21 – மேற்கு வங்க மாநிலம் - ரணகாட்டில் சரக்கு ரயில் புரண்டு விபத்துக்கு உள்ளானது.

ஜூலை 26 – ஒடிசா மாநிலம் - புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.

ஜூலை 29 – பீகார் மாநிலம் - சமஸ்திபூரில் சம்ரக் கிராந்தி விரைவு ரயிலின் இஞ்சின் மட்டும் தனியாக பிரிந்து விபத்துக்கு உள்ளானது.

ஜூலை 30 – ஜார்கண்ட் –- சக்ரதர்பூரில் ஹவுரா –- சி.எஸ்.எம்.டி. விரைவு ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டதில் 2 பேர் உயிரிழப்பு. 20 பேர் காயமடைந்தனர்.

ஜூலை 31 – ஒடிசா மாநிலம் - சம்பல்பூர் –- சரளா அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இவை அனைத்தும் கடந்த 13 நாட்களுக்குள் நடந்த விபத்துகள் ஆகும்.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறையானது எப்படி அலட்சியமாகக் கையாளப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் செய்த ஒரு காரியம், ரயில்வேக்கு என இருந்த தனி நிதிநிலை அறிக்கையை ரத்து செய்ததுதான். கோடிக்கணக்கான மக்களின் போக்குவரத்துக்கான ஒரு துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை கூடாது என்று துரிதமாக முடிவெடுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசானது விபத்து இல்லாத ரயில்வேயை இந்த பத்தாண்டு காலத்தில் உருவாக்கியதா என்றால் இல்லை.

மிகப்பெரிய விபத்துகள் பா.ஜ.க. ஆட்சியில்தான் நடந்துள்ளது. அதன்படி,

* 2010 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்கத்தில் சரக்கு ரயிலும் விரைவு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.

* 2023ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம்தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், கோரமண்டல் விரைவு ரயில், பஹானாகா பஜார் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் இருபதுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர்.

* 2023ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில், கொத்தவலசா சந்திப்பு ரயில் நிலையம் அருகே, விசாகப்பட்டினம்- – பலாசா பயணிகள் ரயில் மோதியதில், விசாகப்பட்டினம் – -ராயகடா பயணிகள் ரயில் தடம் புரண்டது. 14 பேர் உயிரிழந்தனர்.

* இந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே சரக்கு ரயிலும், விரைவு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றுக் கொண்டதா? அல்லது பொறுப்பான பதிலாவது சொன்னார்களா என்றால் இல்லை. ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறார்களே, அதெல்லாம் எங்கே போகிறது? என்ன பாதுகாப்பு செய்யப்பட்டது?

இந்த ஆண்டு கூட நிதி நிலை அறிக்கையில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுதான் வருகிறது. ஆனால் ரயில் பயணம் பாதுகாப்பற்றதாக மாறி வருவதை ஏன் தடுக்க முடியவில்லை?

“பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி ‘கவச்’ தானியங்கி பாதுகாப்பு அமைப்பை நிறுவுதல் உள்பட ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குச் செலவிடப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சொல்லி இருக்கிறார். இனிமேல்தான் இவர்கள் பாதுகாப்பு நடவடிக்கையிலேயே இறங்கப் போகிறார்களாம். 2014 முதல் 2023 வரை சுமார் 638 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. சராசரியாக ஆண்டுக்கு 71 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘கவச் தொழில் நுட்பமானது விபத்துகளைத் தடுப்பதற்கானது ஆகும். ஒரே ரயில் பாதையில் இரண்டு ரயில்கள் வருவதை இது தடுக்கும். இது இல்லாததே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம். 2012 ஆம் ஆண்டில் இருந்து இது பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2014 இல் மதிப்பீடு செய்யப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகள் கள ஆய்வு செய்தார்கள். 2017 ஆம் ஆண்டு இந்த சிஸ்டத்தை முறைப்படுத்தினார்கள். 2019 ஆம் ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி தரப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஒரு ரயில் பாதையில் சோதனை செய்யப்பட்டது. 2024 ஆம் ஆண்டு இன்னொரு ரயில்பாதையில் சோதனையைச் செய்தார்கள்.

‘கவச் 4.0 – தொழில் நுட்பத்துக்கு சமீபத்தில் தான் ஒப்புதல் கிடைத்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி தந்துள்ளார். இந்த வேகத்தில் போனால் இந்தியா முழுக்க அனைத்து ரயில் பாதைக்கும் கவச் அமைக்க 100 ஆண்டுகள் ஆகும். டிசம்பர் 23, 2022 நிலவரப்படி, இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 3.12 லட்சத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு, போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதில், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் 14,815 பணியிடங்களும், போக்குவரத்துத் துறையில் 62,264 பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. ஊழியர்களே இல்லாமல் ரயில்வே துறையை நடத்த முடியுமா? வந்தே பாரத் விடுவது பெருமையல்ல, ‘விபத்தில்லாத ரயில்வே தான் பெருமை!

Also Read: பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருள் விற்கும் அளவு பாதுகாப்பான மாநிலம்தான் குஜராத் : முரசொலி தாக்கு !