murasoli thalayangam
தவறே நடக்கவில்லை என சாதித்தவர்கள், மோசடியை ஒப்புக்கொண்டார்கள்! : நீட் மோசடி அம்பலமானதை விளக்கிய முரசொலி!
மோசடியை ஒப்புக்கொண்டார்கள்!
'நீட்' தேர்வே மோசடியானதுதான் என்பதை இதுவரை நாம் சொல்லி வந்தோம். இப்போது, அந்தத் தேர்வு நடத்துபவர்களே அதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்!
720 மதிப்பெண்ணுக்கு 720 மதிப்பெண்ணை 61 பேர் பெற்றதாக அறிவிக்கப்பட்டது முதலில். திருத்தப்பட்ட இறுதி முடிவுகளின்படி இப்போது இந்த எண்ணிக்கை 17 ஆக குறைந்துவிட்டது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடாமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும்? மோசடியாக மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பார்கள்.
இன்னொன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த ஆண்டு நீதிமன்றம் விசாரணை நடத்தியதால் இந்த மோசடி ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக நடந்த தேர்வில் எத்தனை மோசடிகள் நடந்துள்ளதோ? தேர்வு நடத்தியவர்களின் மனசாட்சிக்குத்தான் தெரியும்.
உச்சநீதிமன்றத்தின் கிடுக்குப் பிடியில் தப்ப முடியாமல், தாங்கள் செய்த மோசடியை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது தேசியத் தேர்வுகள் முகமை.
தேர்வுகளை முறைப்படுத்துவதுதான் இதுபோன்ற முகமைகளின் பணியாக இருக்க, மோசடிகளைச் செய்வதும், அதை மறைப்பதும்தான் தேசியத் தேர்வுகள் முகமையின் பணியாக இருந்துள்ளதை இந்த ஆண்டு முழுமையாக இந்திய நாடு அறிந்தது.
மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற 'நீட்' தேர்வில் 23.33 லட்சம் மாணவ, மாணவியர் இந்தியா முழுவதும் எழுதினார்கள். தேர்வு நடந்த நாளின் போதே வினாத்தாள் கசிந்தது. உத்தரப்பிரதேச தேர்வு மையத்தில் தேர்வு தொடங்கும் முன் வினாத்தாள் சமூக வலைதளத்தில் கசிந்தது.
அரியானாவிலும் இதே போன்று நடந்தது. பீகாரிலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் இதே போல் வினாத்தாள் கசிந்தது. ஆனால் அதைப் பற்றி தேர்வு முகமை கவலைப்படவில்லை.
உடனடியாக இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். அடுத்த மோசடியை கருணை மதிப்பெண் என்ற பெயரால் அரங்கேற்றியது தேசியத் தேர்வு முகமை. 1500 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மறுதேர்வுக்கு பலபேர் வரவில்லை. எழுதியவர்கள் முடிவிலும் முன்பு போல் இல்லை. அரியானா மாநில மையத்தில் 6 பேர் முதலில் நடந்த தேர்வில் முதலிடம் பெற்றிருந்தார்கள். மறுதேர்வில் இவர்கள் 6 பேரும் முதலிடம் பெறவில்லை.
தேர்வு முடிவுகள் வந்தது. அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720க்கு 720 மதிப்பெண்ணை எடுத்தார்கள். இது அடுத்த அதிர்ச்சியாகும். இதுவரை இல்லாத வகையில் 67 பேர் 720க்கு 720 எடுத்தார்கள். இது அடுத்த பேரதிர்ச்சியாகும்.
இயற்பியல் வினாத்தாளில் குழப்பம் என்று சொல்லி 44 பேருக்கு கூடுதல் மதிப்பெண் போட்டிருந்தார்கள். அதுவும் உச்சநீதிமன்ற விசாரணையில் ரத்தாகி விட்டது. இவ்வளவும் உச்சநீதிமன்ற விசாரணை மூலமாக வெளியில் வந்தவை. விசாரணையின் போது தேசியத் தேர்வு முகமை ஒப்புக் கொண்ட பின்னால் வெளிச்சத்துக்கு வந்த முறைகேடுகள்.
எந்தத் தவறுமே நடக்கவில்லை என்று இதுவரை சாதித்தது தேசியத் தேர்வு முகமை. தேசியத் தேர்வு முகமை ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. "மே 5 ஆம் தேதி நடத்தப்பட்ட 'நீட்' தேர்வு எந்தவித சட்ட விரோத நடவடிக்கைக்கும் இடமளிக்காமல் நேர்மையாக நடத்தப்பட்டது. இத்தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படும் புகாருக்கு ஆதாரமில்லை” என்று சொல்லப்பட்டது.
ஆனால் இன்று உச்சநீதிமன்றம் சொன்னதும் ஒவ்வொரு குற்றமாகத் திருத்தப்படுகிறதே? இப்போது மட்டும் எப்படி ஒப்புக் கொள்கிறார்கள். 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். 'நீட்' தேர்வை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லையே தவிர, குற்றம் நடந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது. "நீட் தேர்வு வினாத்தாள்கள் ஹசாரிபாக், பாட்னாவில் கசிந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
'நீட்' வினாத்தாள் கசிவால் 155 மாணவர்கள் பலனடைந்திருக்கிறார்கள் என்பது சி.பி.ஐ. விசாரணை மூலம் தெரிய வருகிறது" என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே, தேர்வில் மோசடி நடந்துள்ளது என்பது உச்சநீதிமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அவர்கள் சொன்னபடி தேர்வு முகமையும் நடந்து பலரை தகுதி நீக்கம் செய்திருப்பதும், மோசடியை ஒப்புக்கொண்ட தன்மையே ஆகும்.
இந்த மோசடித்தனங்கள் அனைத்தும் வட மாநிலங்களில் மட்டும் திட்டமிட்டு அரங்கேற்ற அனுமதிக்கப்படுகின்றன. இதற்குப் பின்னால் இருக்கும் சூட்சுமம் என்ன? காது கம்மலைக் கழற்று, தாலி அணிந்திருந்தால் அதையும் கழற்று என்கிற அளவுக்கு தமிழ்நாட்டு தேர்வர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். ஆனால் வட மாநிலங்களில் ஆள் மாறாட்டம் செய்யவே அனுமதிகள் எளிதில் தரப்படுகின்றன.
வினாத்தாள்கள் வட மாநிலங்களில் முன்கூட்டியே பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏன் லீக் செய்யப்படுவது இல்லை? குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் இருப்பவர்கள் வசதிக்காகத்தான் இந்தத் தேர்வுகள் திட்டமிடப்படுகிறதா என்ற சந்தேகம் இயல்பாக வருகிறது. மோசடித்தனங்கள் முழுக்க அம்பலம் ஆனபிறகும் 'நீட்' தேர்வை ஒன்றிய பா.ஜ.க. அரசு ரத்து செய்யாமல் இருக்கும் பின்னணியில் மாபெரும் சதி இருக்கிறது என்பதே உண்மை. முழு உண்மை.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!