murasoli thalayangam
எமர்ஜென்சி குறித்து பேச பாஜகவுக்கு தகுதி இல்லை: 10 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியை பட்டியலிட்ட முரசொலி!
முரசொலி தலையங்கம் (15-07-2024)
எத்தனை நாட்களை அறிவிப்பது?
எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட ஜூன் 25 ஆம் தேதியை ‘அரசியலமைப்பு கொல்லப்பட்ட தினம்’ என்று ‘அரசியலமைப்புச் சட்டக் காப்பாளர்களான’ பா.ஜ.க. அறிவித்துள்ளது. மூன்றாவது முறையும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய ஆட்சிக்கு வரவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பா.ஜ.க.வின் கடந்த பத்தாண்டுகளில் இப்படி எத்தனை நாட்களை அறிவிப்பது?
காஷ்மீரில் அரசியலமைப்பு கொல்லப்பட்ட தினத்தையா?
இசுலாமியர்க்கும் இலங்கைத் தமிழர்க்கும் குடியுரிமை பறிக்கப்பட்ட தினத்தையா?
கோடிக்கணக்கான விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் பறிக்கத் திட்டமிட்ட தினத்தையா?
மாநிலங்களைக் கொள்ளையடிக்கும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட தினத்தையா?
இந்திய நாட்டு மக்கள் அனைவர் வீட்டில் இருந்த பணத்தையும் வழிப்பறி செய்யும் வகையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட தினத்தையா? –- எந்த தினத்தை ‘அரசியலமைப்பு கொல்லப்பட்ட தினமாக’ அறிவிப்பது?
அதற்கும் முன்னால் குஜராத் படுகொலைகள் நடந்த தினத்தையா?
அதற்கும் முன்னால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையா?
அதற்கும் முன்னால், காந்தியார் கொல்லப்பட்ட தினத்தையா? – எந்த தினத்தை ‘அரசியலமைப்பு கொல்லப்பட்ட தினமாக’ அறிவிப்பது?
இந்திய விடுதலைப் போராட்டத்தை நிராகரித்தவர்கள், அது விடுதலைப் போராட்டமே இல்லை என்று சொன்னவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் அதனை ஏற்காதவர்கள், இந்திய தேசியக் கொடியை ஏற்காதவர்கள், தேசிய கீதத்தை ஏற்காதவர்கள், இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை ஏற்காதவர்கள் - – இன்றைய தினம் அரசியலமைப்புச் சட்டத்தின் காவலர்களாக மாறி இருப்பதைக் காணச் சகிக்கவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காட்டி, ‘இதனைக் காப்பாற்றுங்கள்’ என்று ராகுல் காந்தி பேசிவிட்டாராம். ‘இந்தியா’ கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், சட்டத்தை ஒரு கையில் ஏந்தி பதவி ஏற்றுக் கொண்டார்களாம். அது ஒன்றிய ஆட்சியாளர்களை நிலைகுலைய வைத்துள்ளது. உடனே எமர்ஜென்சியைப் பற்றி சபாநாயகர் பேசுகிறார். பிரதமர் பேசுகிறார். குடியரசுத் தலைவரையும் பேச வைக்கிறார்கள்.
எமர்ஜென்சியை எவரும் நியாயப்படுத்தவில்லை. ‘எமர்ஜென்சியைக் கொண்டு வந்து தவறு செய்துவிட்டேன்’ என்று இந்திரா காந்தி அவர்களே வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டார். எமர்ஜென்சியை வைத்து 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியின் ஆட்சியானது மூன்று ஆண்டுகளுக்குள் முடிந்தது. 1980 ஆம் ஆண்டு மீண்டும் இந்திராவே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தார் என்பது வரலாறு.
எமர்ஜென்சியைப் பற்றி மற்றவர்கள் பேசலாம். அறிவிக்கப்படாத அவசர நிலையை கடந்த பத்தாண்டுகளாக அமல்படுத்தி வரும் மோடி அரசாங்கத்துக்கு எமர்ஜென்சியைக் கண்டித்துப் பேச தார்மீகத் தகுதி இல்லை.
அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் அனைத்தின் அதிகாரத்தையும் சிதைத்த ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி.
தேர்தல் ஆணையத்தையே, ஆளும் கட்சியின் தொங்கு சதையாக மாற்றியதுதான் அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் விதமா? சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலமாக எதிர்க்கட்சிகளை மட்டும் வேட்டையாடுவதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் விதமா? இந்த நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட எந்த பொது விஷயத்துக்காவது பொது விவாதம் நடத்தப்பட்டுள்ளதா? பிரதமர் இதுவரை பதில் சொல்லி இருக்கிறாரா? எத்தனை சட்டங்கள் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது?
இந்திய நாட்டின் வரலாற்றில் 100 எம்.பி.க்களை அவை நடவடிக்கையில் இருந்து நீக்கியதை விட அரசியலமைப்புச் சட்டம் கொல்லப்பட்ட தினம் வேண்டுமா? நாடாளுமன்ற ஜனநாயகம் கழுத்தை நெரிக்கப்பட்ட தினம் வேண்டுமா?
கொடூரங்களின் கையில் மணிப்பூர் என்ற மாநிலம் ஒப்படைக்கப்பட்டது. பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட அவசர நிலை மாநிலம் அது. அந்த மாநிலத்துக்குப் போனாரா இந்தியப் பிரதமர் மோடி? அங்கே சட்டம் இன்னமும் யார் கையில் இருக்கிறது? குண்டு வைப்பவர்கள் கையில் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பும் போய் பார்க்கவில்லை.
தேர்தலுக்குப் பின்னும் போய் பார்க்கவில்லை. இந்திய வரைபடத்தில் இருக்கும் மாநிலம்தானே மணிப்பூர்? அரசியலமைப்புச் சட்டத்தின் காவலர், அங்கே போய் காக்க வேண்டாமா? யார் தடுத்தது? எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்? எத்தனை கொலைநாட்களைக் கொண்டாடுவது?
‘எங்களை வன்முறையாளர்கள் இழுத்துச் செல்லும் போது சாலையின் இருபக்கமும் போலீஸ் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது’ என்று ஆயிரக்கணக்கானவர்களால் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண் பேட்டி அளித்தாரே அப்போது அம்மணமாக நின்றது, இந்த நாட்டின் சட்டங்கள் அல்லவா?
இது யாருடைய ஆட்சியில் நடந்தது? மாநிலத்திலும் ஒன்றியத்திலும் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் போது நடந்தது என்று ஐம்பது ஆண்டுகள் கழித்துப் பேச எவரும் இருக்க மாட்டார்களா? ‘பயாலாஜிக்கலாக பிறக்காத பிரதமர்’ என்பதால் இவை அனைத்தும் அரூபமாக மறக்கப்பட்டு விடுமா? ‘அவதாரம்’ என்பதால் மன்னித்து விட்டு விடுவார்களா?
தவறு இழைத்தால், அந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ளப் பாருங்கள். அதில் இருந்து தப்பியோட முயற்சிக்காதீர்கள். திசைதிருப்ப முனையாதீர்கள். தேசியத்தின் பேரால் ஒற்றைத்தன்மையை நிலைநாட்ட முயற்சித்து, இந்திய நாட்டு மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து நாட்டையே மதரீதியாக மட்டுமல்ல, மனரீதியாகப் பிளவுபடுத்தும் சதிச் செயல்களை நிறுத்திவிட்டு ஆட்சி நடத்தப் பாருங்கள்.
அரசியலமைப்பு கொல்லப்பட்ட தினங்களின் எண்ணிக்கையை உயர்த்தி விடாமல் ஆளப்பாருங்கள். சட்டபூர்வமான ஆட்சியே சட்டத்தைக் காத்துக் கொள்ளும். பன்முகத்தன்மையே சட்டத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்.
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!