murasoli thalayangam

“மக்கள் அரசியலைச் செய்யுங்கள்; மரண அரசியல் வேண்டாம்” : பழனிசாமிக்கு முரசொலி பதிலடி!

முரசொலி தலையங்கம் (10-07-2024)

மரண அர­சி­யல் வேண்­டாம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் - புத்த நெறியாளர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு இருப்பது மிகக் கடுமையான கண்டனத்துக்குரியது. மூன்று மணிநேரத்துக்குள் குற்றவாளிகளைப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு காவல் துறை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியுடன், குற்றவாளிகளின் கைது நடவடிக்கையும் இணைத்தே வெளியானதில் இருந்தே காவல் துறையின் துரிதமான நடவடிக்கையை உணர முடியும்.

"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருக்கிறது. வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்பதையும் சேர்த்தே முதலமைச்சர் அவர்கள் தெரியப்படுத்தினார்கள்.

ஆனால், எங்காவது ஏதாவது நடக்காதா, அதை வைத்து ஆதாயம் தேட முடியாதா என்று அலைபவர்கள், ஆம்ஸ்ட்ராங் கொலையை வைத்து தங்களது அசிங்கமான அரசியலை நடத்தினார்கள். மூன்று மணிநேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில், 'இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை' என்று கொக்கரிக்கிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் - 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு' புகழ் பழனிசாமி, 'சரண் அடைந்தவர்கள் போலிகள்' என்கிறார். இதனை ஒரு அரசியல் போலி சொல்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. 'கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை' என்று இவருக்கு எப்படித் தெரியும்? இவரெல்லாம் ஒரு காலத்தில் காவல் துறையைக் கையில் வைத்திருந்தவர் என்பதை நினைக்கும் போது கேவலமாக இருக்கிறது.

'துப்பாக்கிச் சூடா? 13 பேர் செத்துவிட்டார்களா? உங்களைப் போல நானும் டி.வி. பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று சொன்னவர்தான் இந்த பழனிசாமி. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரட்டைக் கொலை நடந்த போது, 'அவர்கள் உடல்நலமில்லாமல் இறந்தார்கள்' என்று சொல்லி போலீஸைக் காத்தவர்தான் இந்த பழனிசாமி. ஜூலை 5 ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுகிறார்.

கூடுதல் ஆணையர் ஆஸ்ரா கர்க் தலைமையில் 10 தனிப்படைகள் 8 மணிக்கே அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவை உடனே கைப்பற்றி, சம்பவ இடத்தில் இருந்த தடயங்கள் மூலமாக 3 மணி நேரத்துக்குள் எட்டுப் பேரைக் கைது செய்தது சென்னை காவல்துறை. கைதானவர்களில் முக்கியமானவர் பொன்னை பாலு என்பவர். கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பிதான் இந்த பொன்னை பாலு. தனது அண்ணன் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு ஒப்புக் கொண்டுள்ளதையும் காவல் துறையினர் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆற்காடு சுரேஷ் வடசென்னையில் பெரிய ரவுடியாக இருந்தார். ஆம்ஸ்ட்ராங் அரசியல் ரீதியாக வளர்ந்து வந்தது எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங்கின் வலதுகரமாக இருந்த தென்னரசுவை 2015 இல் கொலை செய்தோம். அதில் இருந்து எங்களுக்குள் பகை வளர்ந்தது. ஜெயபால் என்பவரை சுரேஷுக்கு எதிராக ஆம்ஸ்ட்ராங் தூண்டிவிட்டார். இதனால் வடசென்னையில் இருந்து வேலூருக்கு நாங்கள் மொத்தமாக மாறினோம். ஆனாலும் பகை தொடர்ந்தது.

ஆற்காடு சுரேஷை கடந்த ஆண்டு கொன்றார்கள். அந்த இடத்தை ஆம்ஸ்ட்ராங் வந்து பார்த்தார். ஆனால் வழக்கில் அவர் சிக்கவில்லை. பிறகு என்னையும் மிரட்டினார்கள். இதனால் என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனவே அவரை பழிதீர்க்க திட்டமிட்டோம். ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் இந்த கொலைச் செய்து சபதத்தை நிறைவேற்றினோம்” என்று ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு வாக்குமூலம் கொடுத்திருப்பதை காவல் துறை பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறது.

"துப்பாக்கியால் ஆம்ஸ்ட்ராங் சுட்டால் முன்கூட்டியே வெடிகுண்டு வீச நினைத்திருந்தோம். ஆனால் அவரிடம் துப்பாக்கி இல்லை என்றும் சொல்லி இருக்கிறார் பொன்னை பாலு ஆனால் இவர்களை உண்மைக் குற்றவாளிகள் இல்லை என்கிறார் பழனிசாமி அப்படியானால், உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்ட வேண்டியது பழனிசாமியின் பொறுப்பே ஆகும். தனிப்பட்ட விரோதக் கொலையை சட்டம் ஒழுங்குடன் முடிச்சுப் போட்டு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனதாக கொக்கரிப்பது மரணவீட்டில் தேடும் மலிவான ஆதாயங்கள் ஆகும். அதைவிட இன்னொரு தரப்பு, 'தமிழ்நாட்டில் தலித் படுகொலைகள் அதிகம் நடக்கிறது' என்று சொல்வதும் திசை திருப்பும் அரசியல் ஆகும்.

தி.மு.க. ஆட்சியைக் குறை சொல்ல மட்டுமே துடிக்கும் சிலர், இதில் சந்தடி சாக்கில் உள்ளே நுழைந்து கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்றாண்டு காலத்தில் பட்டியலின சமூகத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஏராளமான திட்டங்களைத் திட்டித் தந்த ஆட்சி தி.மு.க. ஆட்சி. இதனை அனைவரும் அறிவார்கள். விளிம்பு நிலை மக்களை கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னுக்குக் கொண்டு வரும் ஆட்சியாக இது நடைபெற்று வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பொறாமைக்காரர்களின் புலம்பல்களை பொருட்படுத்தத் தேவையில்லை.

“இந்தக் கொலையில் அரசியல் முன்பகை எதுவும் இல்லை என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்னும் சிலரைக் கைது செய்ய வேண்டி இருக்கிறது” என்று கூடுதல் ஆணையர் ஆஸ்ரா கர்க் சொல்லி இருக்கிறார். அதற்குள் சமூக ஊடகங்களில் தங்கள் விருப்பத்துக்கு விசாரணைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் சிலர். நடந்த கொடூர சம்பவத்துக்கு காரணமானவர்களை மூன்று மணிநேரத்துக்குள் கைது செய்துள்ளது காவல் துறை. அதிகாரிகள் மட்டத்தில் மிகப்பெரிய மாறுதலை முதலமைச்சர் அவர்கள் செய்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தேடப்பட்டு வருகிறார்கள். ஆனால் இந்தச் சம்பவத்தின் மூலமாக தி.மு.க. ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த நினைப்பவர்கள் வழக்கம் போல் ஏமாந்து போவார்கள். அரசியல் செய்ய நினைப்பவர்கள், 'மக்கள்' அரசியலைச் செய்யுங்கள். மரண அரசியல் வேண்டாம்.

Also Read: நீதியரசர் சந்துருவின் அறிக்கையை கண்டு அலறும் பாஜக, காரணம் இதுதான் - புட்டு புட்டு வைத்த முரசொலி !